
நீதிமன்ற லோகோ மற்றும் நீதிபதிகளின் கையெழுத்துகளுடன் 'நீதிமன்ற உத்தரவு' என போலி மின்னஞ்சல் அனுப்பி மோசடி நடப்பது அதிகரித்திருக்கிறது.
மோசடி கும்பல் தங்களை சைபர் குற்றப் பிரிவு, சிபிஐ, அமலாக்கத்துறை, உளவுத் துறை, புலனாய்வு பிரிவு, ரிசர்வ் வங்கி, காவல் துறை அல்லது பிற சட்ட அமலாக்க முகமைகள் என்ற பெயரில் அதிகமாக மோசடிகளில் ஈடுபடுகின்றன.
அதாவது சைபர் குற்றங்கள் நடந்தால் சைபர் குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவிப்போம். ஆனால், சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் என்றே ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல், மக்களை மிரட்டி பணம் பறிக்கிறது. அதனால் இதில் கவனமாக இருங்கள்.
எப்படி நடக்கிறது?
மோசடியாளர்கள் மின்னஞ்சல்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். தங்களை ஏதேனும் ஒரு துறை சார்ந்த அதிகாரிகள் என்றும் 'நீங்களோ அல்லது உங்கள் உறவினரோ குற்றம் செய்திருக்கிறீர்கள்' என்று கூறி அதுகுறித்த ஆவணங்களை அனுப்புகிறார்கள்.
ஏன் இணையத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளீர்கள் என்றும் கூறி நீதிமன்ற உத்தரவுகளை அனுப்புகிறார்கள்.
அவர்கள் அனுப்பும் ஆவணங்களில் மத்திய அரசின் சம்மந்தப்பட்ட துறையின் லோகோ, அதிகாரிகள் கையெழுத்துகள் எல்லாம் இடம்பெற்றிருக்கும் அல்லது இந்த குற்றத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்று கூறி மாநில உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற உத்தரவு என்றும் ஆவணங்களை அனுப்புகிறார்கள்.
குற்றம் செய்ததற்கு உங்களை ஆன்லைனில் கைது(டிஜிட்டல் அரெஸ்ட்) செய்வதாகவும் இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் மின்னஞ்சலில் வலியுறுத்தி இருப்பார்கள்.
இதனை நம்பி பலரும் அவர்கள் அனுப்பும் வங்கிக்கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்து ஏமாற்றம் அடைகின்றனர். அதன்பின்னர் அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் மின்னஞ்சலும் வருவதில்லை.
சிலர் இந்த உத்தரவை வைத்து உங்களை மிரட்டி தனிப்பட்ட விவரங்களைப் பெற்று பின்னர் ஹேக்கிங் மூலமாக உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தைத் திருடவும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற மின்னஞ்சல்(இ-மெயில்)களை ஒருபோதும் நம்ப வேண்டாம். அவற்றுக்கு எதுவும் பதில் அளிக்கவும் வேண்டாம். உடனடியாக 1930 என்ற சைபர் குற்றப்பிரிவுக்கு புகார் கொடுக்க வேண்டும்.
மோசடியாளர்கள, சைபர் குற்ற அதிகாரிகளாக தங்களை அடையாளப்படுத்தி மக்களை மிரட்டுவது தற்போது அதிகரித்து வருவதாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
செய்ய வேண்டியது என்ன?
எந்தவொரு அரசு துறையோ அல்லது நீதிமன்றமோ மின்னஞ்சல் மூலமாக எந்தவொரு உத்தரவையும் அனுப்பமாட்டார்கள். குறிப்பாக நீதிமன்ற உத்தரவுகள் மின்னஞ்சலில் வராது.
அதேபோல மின்னஞ்சல் மூலமாக பணம் கேட்பதோ மிரட்டும் செய்திகளையோ அனுப்ப மாட்டார்கள்.
இதுபோன்ற மிரட்டும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவோ அல்லது பணம் செலுத்தவோ வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களைத் திறந்து அதில் உள்ள லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலமாக உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் திருடுபோக வாய்ப்புள்ளது.
இப்படியான போலி மின்னஞ்சல்களை உடனடியாக காவல்துறையிடமோ அல்லது சைபர் குற்றப் பாதுகாப்பு இணையதளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிலோ புகாரளிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.