
வங்கிக் கணக்கு தொடர்ந்து செயல்படவேண்டுமானால் கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என்று போன் அழைப்பு வந்தால் மக்கள் கவனமாக கையாள சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் சேவைகளைப் பெற நாட்டில் பெரும்பாலானோர் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றனர். ஆனால் சாதாரண மக்கள் பலரும் வங்கி செயல்முறைகள் குறித்து இன்னும் தெரிவதில்லை. இப்படியானவர்களைக் குறிவைத்து மோசடி நடக்கிறது.
வங்கியில் இருந்து 'கேஒய்சி புதுப்பிக்க வேண்டும்' என்று போன் அழைப்பு வருகிறது. அவர்கள் வங்கிக்கணக்கு எண், ஏடிஎம் பின் நம்பர் ஆகியவற்றைக் கேட்கின்றனர். மோசடி பற்றி தெரியாத வாடிக்கையாளர்களும் அதைக் கொடுத்து விடுகின்றனர். பணம் போனபிறகு வங்கி ஊழியர்களிடம் சென்று கேட்டால் அவர்கள் போன் செய்யவில்லை என்று கூறுகின்றனர். நன்கு படித்தவர்களும் இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர்.
மோடியாளர்கள் பெரும்பாலும் வங்கி அதிகாரிகளாக தங்களை கூறிக்கொண்டே போன் அழைப்பு செய்கிறார்கள். எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மூலமாகவும் செய்தி அனுப்புகின்றனர். 'கேஒய்சி விவரங்களை அவசரமாக புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு விடும்' என்று எச்சரிக்கை விடுத்து மிகவும் அவசரமாக வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் எண் அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்கள் பெறப்பட்ட பிறகு மோசடியாளர்கள் பணப்பரிமாற்றங்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களைத் திருடுகின்றனர்.
சிலர் ஏதேனும் லிங்க்குகளை அனுப்பி அதை திறக்கச் சொல்கிறார்கள், அதனை கிளிக் செய்தவுடன் உங்களுடைய போன் மோசடியாளர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும். அதன்மூலமாகவே அவர்களே பணத்தைத் திருடுகிறார்கள்.
பாதுகாப்பு வழிமுறைகள்
தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தனிப்பட்ட தகவல்கள், கணக்கு விவரங்கள், ஆதார் எண், ஓடிபி, பாஸ்வேர்டு போன்றவற்றை பகிராதீர்கள்.
தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலே கவனமாக இருக்க வேண்டும்.
எந்த வங்கியும் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் அல்லது வங்கி கணக்கு விவரங்களை கேட்கமாட்டார்கள்.
கேஒய்சி புதுப்பிப்பு என அழைப்பு வந்தால் உங்கள் வங்கியுடன் நேரடியாகவோ அல்லது அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் உதவி சேவை மூலம் சரிபார்க்கவும்.
உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு இரண்டு-அடுக்கு பாதுகாப்பு முறையை (2FA) வைத்திருக்கவும்.
வங்கிகளின் மின்னஞ்சல் போன்றே போலி இ-மெயில் முகவரியைக் கொண்டு அனுப்புவதால் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
தெரியாத வங்கி சார்ந்த செயலிகளை பதிவிறக்கம் செய்வது, மூன்றாம் தர செயலிகளில் பணப்பரிமாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மோசடி அழைப்புகள் வந்தால் வங்கிக்கு மட்டுமின்றி காவல்துறைக்கு அல்லது 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.