
திருமணத்திற்காக வரன் பார்க்கும் மேட்ரிமோனி செயலிகளின் மூலமாக முதலீட்டு மோசடி நடைபெறுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், தற்போதைய சூழ்நிலையில் எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்களை ஏமாற்ற முடியுமோ அனைத்து தளங்களையும் மோசடி கும்பல் பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் திருமண அழைப்பிதழ்கள் மூலமாகவும் வரன் பார்க்கும் மேட்ரிமோனி செயலிகள் மூலமாகவும் மோசடி நடப்பது அதிகரித்து வருகிறது.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
மோசடி செய்பவர்கள் போலியான திருமண சுயவிவரங்களை உருவாக்கி அதன்மூலமாக வரும் அழைப்புகளிடம் வாட்ஸ்ஆப் மூலம் நம்பிக்கையை வளர்த்து, போலி முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். மேலும் போலி வருவாய் ஆதாரங்களை வழங்கி முதலீடு செய்ய அழுத்தம் கொடுத்து ஏமாற்றுகின்றனர்.
மேட்ரிமோனி இணையதளத்தில் ஆண் ஒருவர் வரன் தேடி பதிவு செய்கிறார். இப்போது அவருக்கு ஒரு விருப்பமான பெண் அழைப்பு வருகிறது. அதாவது அவருடைய ப்ரொஃபைலை ஒரு பெண் விரும்பி பேச முன்வருகிறார்.
இருவரும் சில நாள்கள் வாட்ஸ்ஆப் மூலமாகவோ அல்லது போனிலோ தொடர்புகொண்டு பேசி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்வதாகவும் முடிவெடுக்கின்றனர்.
இப்போது திருமணத்திற்குப் பிறகு எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இப்போதே முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த பெண் வலியுறுத்துகிறார்.
இருவரும் சேர்ந்து முடிவெடுத்து இறுதியாக ஒரு கிரிப்டோகரன்சி அல்லது பங்குச்சந்தை முதலீடு என்று கூறி 'நம்பகமான இணையதளம்' என்று கூறி ஒரு வெப்சைட் அல்லது நிறுவனத்தை அந்த பெண்ணே பரிந்துரைக்கிறார். அதை நம்பி அவரும் தொடர்ந்து முதலீடு செய்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண் காணாமல் போய்விடுகிறார், பணமும் எடுக்கமுடியாமல் போகிறது.
இதேபோல பெண்களை முதலீடு செய்யச்சொல்லி ஆண்களும் மோசடியில் ஈடுபடலாம். இதற்காக கவரக்கூடிய புகைப்படங்களுடன் போலி பையோடேட்டா அல்லது ப்ரொஃபைலை உருவாக்குகிறார்கள். புகைப்படங்கள் மற்றும் அதில் உள்ள விவரங்களை நம்பி பலரும் வந்து இந்த வகை மோசடியில் சிக்கிக்கொள்கின்றனர்.
சில இணையதளங்களே நேரடியாக வரன் பார்ப்போரிடம் எதிர்கால தேவைக்காக முதலீடு செய்யச்சொல்லி வற்புத்துகின்றனர். அவர்கள் அனுப்பும் லிங்க்குகளைத் திறக்கும்போதும் கவனமாக இருக்கவும்.
பாதுகாப்பு வழிகள்
ஆன்லைனில் சந்திக்கும் நபர்கள் குறித்து ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு பேசுவது நல்லது. முடிந்தவரை நேரடியாக சந்தித்த பின்னர் பேசத் தொடங்கலாம்.
ஒருவேளை வீடியோ அழைப்புகள் அல்லது தனிப்பட்ட சந்திப்புகளைத் தவிர்த்தால் அது மோசடி வரனாக இருக்கலாம்.
ஆன்லைன் மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒருபோதும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
வாட்ஸ்ஆப் அல்லது பிற செயலிகள் மூலம் தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
முதலீடு செய்வதற்கு முன் அந்த துறையில் இருப்பவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. நீங்கள் முதலீடு செய்யப்போகும் நிறுவனம் குறித்து கேட்டறியவும்.
அவசரமாக முதலீடு செய்யச் சொல்வோரிடம் கவனமாக இருக்க வேண்டும்.
ஒருவேளை மோசடிக்கு ஆளானால் சற்றும் தாமதிக்காமல் காவல்துறைக்கோ அல்லது 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகமோ புகார் தெரிவிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.