
சில்லறைக்கு தவியாய் தவித்து வந்த மக்களிடையே, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என்பது வரப்பிரசாதமாக இருந்தது.
கையில் பணத்தோடு வெளியே செல்லும்போது கொள்ளையர்கள் அல்லது பிக்பாக்கெட் தொல்லைகள் இருக்கும் என்ற அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், டிஜிட்டல் முறையில் பணம் பத்திரமாக இருக்கிறது என்று நினைத்தால் அதுதான் இல்லை.
பிஷ்ஷிங் மோசடி, போலியான யுபிஐ செயலிகள், க்யூஆர் குறியீடு மோசடி என மோசடியாளர்கள் விதவிதமாக அலைகிறார்கள்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை அதிகரிப்பது போல மோசடி வழக்குகளும் அதிகரிக்கின்றன. அதாவது, யுபிஐ மூலம் மோசடி செய்ய முயல்வோர், ஒரு சிறு தொகையை ஒரு வங்கிக் கணக்குக்கு அனுப்புவார்கள். பிறகு, அதனை திருப்பி அனுப்பக் கோரி, மோசடியாளர், வங்கிக் கணக்குக் சொந்தக்காரரை அணுகுவார்கள். அந்த பணத்தை திருப்பி அனுப்பும்போது, அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களை திருடும் கும்பலும் உள்ளது.
அதாவது ஒரு சிறு தொகையை வங்கிக் கணக்குக்கு வரவு வைப்பார்கள். அந்த செய்தியை பார்த்ததும் அவர் தனது வங்கிக் கணக்கைத் திறந்து பார்ப்பார். அப்போது அவரது செல்போனை கண்காணிக்கும் மோசடியாளர்கள், பின் எண் உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டு மோசடி செய்கிறார்கள்.
மற்றொரு வகை, பணத்தை பெற்ற நபருக்கு போன் செய்து, ஒரு சிறு தொகையை அனுப்பிவிட்டு, தவறுதலாக வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும், தாங்கள் சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு பெரிய தொகை அனுப்புவோம் என்று ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றுபவர்களும் உண்டு.
எனவே, எதிர்பாராத வகையில், தெரியாத நபர்கள் யாரேனும் பணம் அனுப்பினாலோ, ஒரு சிறு தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் வந்தாலோ உடனடியாக வங்கிக் கணக்கை திறக்க வேண்டாம்.
குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கை பரிசோதிப்பது நல்லது. அதற்குள், அந்த மோசடி கும்பலின் முயற்சி காலாவதியாகியிருக்கலாம்.
இல்லை அப்படி காத்திருக்க முடியாது என்று நினைத்தால், முதலில் தவறான பின் எண்ணைப் பதிவு செய்யுங்கள். பிறகு தவறு என்று வரும்போது சரியான பின் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்.
உண்மையில் வங்கிக் கணக்குக்கு தவறுதலாக பணம் வந்திருந்தால், திரும்ப அனுப்பச் சொல்லி யாரேனும் தொடர்புகொண்டால், வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொண்டு வங்கிக்கு நேரடியாகச் சென்று பணப்பரிமாற்றம் செய்வதாகக் கூறிவிடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.