
வீட்டிலிருந்தே வேலை என்ற முறையை கரோனா காலம் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. கரோனா சென்றாலும், பலரும் இப்போதும் வீட்டிலிருந்து வேலை என்ற முறையிலிருந்து விடுபட முடியாமல் உள்ளனர்.
வீட்டிலிருந்து அலுவலக வேலையை செய்பவர்கள், பல்வேறு ரிமோட் ஸ்கிரீன் மிரரிங் டூல்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகிறார்கள். அவைதான், பயனரின் மொபைல் போன் அல்லது மடிக்கணினியுடன் வைஃபை இணைப்பு மூலம் இணைத்துக் கொள்ள உதவுகிறது.
இருப்பினும், பயனர்கள் தங்கள் சாதனங்களை இணைக்க பயன்படுத்தும் ரிமோட் ஸ்கிரீன் மிரரிங் டூல்கள் அனைத்தும் பாதுகாப்பானவை அல்ல. ஒரு கணினி அல்லது செல்போனில் இதனை பதிவிறக்கம் செய்யும்போது, அதில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் இந்த டூல்கள் அணுகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
அதில், சில அங்கீகரிக்கப்படாத, சட்டப்படி உருவாக்கப்பட்ட டூல்கள் அல்லாதவையும் பயன்பாட்டில் உள்ளன. இதுபோன்ற மோசடியாளர்களால் உருவாக்கப்பட்ட டூல்களைப் பயன்படுத்தும்போது, செல்போனில் இருந்து அனைத்துத் தகவல்களையும் மோசடியாளர்கள் திருட முடியும், கணினியாக இருந்தால் முழுக் கட்டுப்பாட்டையும் அவர்களே எடுத்துக் கொள்ளவும் முடியும்.
இது தவிர, மோசடி செய்பவர்கள், இந்த டூல்களைப் பயன்படுத்துவோரைத் தொடர்புகொண்டு வங்கி பிரதிநிதிகள் அல்லது வேறு துறை அதிகாரிகள் போல நடித்து, அடையாள சரிபார்ப்பு என்று சொல்லி மூன்றாம் தரப்பு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்கலாம்.
ஒருவேளை, வங்கிதான் இவ்வாறு சொல்கிறது என்று நம்பி, மோசடியாளர்கள் சொன்ன செயலியை ஒருவர் பதிவிறக்கம் செய்தால், அவர்கள் செல்போன் அல்லது கணினி முழுமையாக எங்கோ தொலைவில் இருக்கும் மோசடியாளர்களின் முழுக் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். அதில் இருக்கும் தகவல்களை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தப்பிப்பது எப்படி?
பொதுவாக, கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவை தங்கள் தளங்களில் போலியான மற்றும் மோசடியாளர்களின் செயலிகளை அகற்றுவதில் அதிகபட்ச தீவிரம் காட்டினாலும்கூட, சரிபார்க்கப்படாத ஒன்று அல்லது இரண்டு செயலிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.
எனவே, உங்கள் செல்போனில் நம்பகமான, சரிபார்க்கப்பட்ட செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், எந்தவொரு செயலியையும் பதிவிறக்குவதற்கு முன், அந்த செயலியின் சரியான பெயர், அதன் டெவலப்பர் யார்? பதிவுசெய்யப்பட்ட வலைத்தளம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவிறக்கம் செய்பவர்தான் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டூல் தேவை என்றால் எது கிடைத்தாலும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சைபர் குற்றத்துக்கு இலக்காக வேண்டாம், தேவைப்பட்டால் அழையுங்கள் உதவி எண் 1930.
இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.