

வாட்ஸ்ஆப் மற்றும் முகநூல் பக்கங்களில், டிஜிட்டல் மோசடிகள் அதிகம் நடப்பதால், மெட்டா நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய அப்டேட்களை கொண்டு வந்துள்ளது.
அதாவது, தெரியாத நபர்களிடமிருந்து வரும் விடியோ அழைப்புகளின்போது மோசடி செய்யப்படுவதாக வந்த புகார்களையடுத்து, பயனர்களை, இதுபோன்ற மோசடிகளிலிருந்து தற்காக்க, சில அப்டேட்களை மெட்டா நிறுவனம் செய்திருக்கிறது.
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து விடியோ அழைப்புகள் வரும்போது, உடனடியாக அந்த அழைப்பை ஏற்பதற்கான வாய்ப்பை வழங்காமல், இதன் பின்னணியில் மோசடியாளர்கள் இருக்கலாம் என்ற எச்சரிக்கை தகவல் முதலில் காண்பிக்கப்படும்.பிறகு பயனர் அந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அவர் முடிவுக்கு விடப்படுவார்.
மெட்டா நிறுவனம் தன்னுடைய அனைத்து சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இதுபோன்ற எச்சரிக்கைத் தகவல்களை ஏற்படுத்தும் புதிய அப்டேட்களை செய்துள்ளது.
அதாவது, வாட்ஸ்ஆப்பில், அடையாளம் தெரியாத நபருடன் விடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போது, ஸ்கிரீன் ஷேரிங் செய்ய முயன்றாலும், ஒரு பாப்பப் வரும்.
எப்போதும், உங்களுக்கு நம்பகமான ஆள்களுக்கு மட்டும் ஸ்கிரீன் ஷேரிங் செய்யவும். அடையாளம் தெரியாதவர்களிடம் ஷேர் செய்ய வேண்டும். அவர்கள் மோசடியாளர்களாகவும் இருக்கக் கூடும் என்று எச்சரிக்கை தெரிவிக்கப்படும்.
மோசடியாளர்கள், மக்களை தொடர்புகொண்டு, அவர்களை நம்பும் வகையில் பேச வைத்து நம்பிக்கையைப் பெற்று ஸ்கிரீன் ஷேரிங் செய்ய வைக்கிறார்கள். ஆனால் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்கள் யாரும் அறிந்துகொள்வதில்லை.
முகநூல் மெசேஞ்சரிலும் கூட, முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து அழைப்புகள் வரும்போது, இவர்கள் மோசடியாளர்களாக இருக்கலாம் என்ற எச்சரிக்கையும் இவர்களைப் பற்றி ஏஐ மதிப்பீடு செய்யலாம் என்ற வாய்ப்பை வழங்குவதோடு, எவ்வாறெல்லாம் மோசடி செய்யப்படலாம் என்ற எச்சரிக்கை வாசகமும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.