
மூச்சு விட முடியாமல் அபாய கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோன் ஸ்வேடன் என்பவரின் நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
காரணம், அது பார்க்க செடி போல இருக்கிறது. ஆனால், மருத்துவர்களோ ஏதேனும் வைரஸாக இருக்கலாம் என்றே கருதினார்கள். ஆனால், தொடர் ஆராய்ச்சியில் தெரிய வந்தது அது பட்டாணிச் செடி.
பழத்தை பார்த்து சாப்பிடு, கொட்டையை முழுங்கிவிட்டால் வயிற்றுக்குள் மரம் வளரும் என்று பெரியவர்கள், குழந்தைகளை எச்சரிப்பார்கள். இது கொட்டையை முழுங்கினால் அது தொண்டையை அடைத்துக் கொள்ளும் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொய் மிரட்டல் என்றுதான் இந்த சம்பவம் நடக்கும் முன்புவரை அனைவரும் கருதியிருப்பார்கள்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் நகரைச் சேர்ந்த ரோன் ஸ்வேடன் என்பவருக்கு நேர்ந்த அதிசயம், இன்று வரை உலகையே ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.
ஒரு சில மாத காலமாகவே ரோன் கடுமையான இருமலுடன் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் தனக்கு நுரையீரல் புற்றுநோய் வந்திருக்கலாம் என்றே கருதியிருந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு புற்றுநோய்க்கான பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. எல்லா பரிசோதனைகளும் அவருக்கு புற்றுநோய் இல்லை என்றே வந்தது. அவரும் அவரது மனைவியும் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளிப்பார்கள் என்றே நினைத்திருந்தார்கள்.
ஆனால், கடைசியாக எக்ஸ்ரேவில் அவருடைய நுரையீரலில் பட்டாணிச் செடி வளர்ந்திருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மருத்துவர்கள் இது பற்றி கூறுகையில், சமைக்கப்படாத பட்டாணியை ரோன் சாப்பிடும்போது, தவறுதலாக அது நுரையீரலுக்குள் சென்றுவிட்டிருக்கிறது. பிறகு எப்படியோ அது வேர் ஊன்றி வளரத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள்.
நுரையீரலில் இருந்த தட்பவெப்பம் காற்று போன்றவை செடி வளர்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். ஆனால், இது நடப்பதற்கான சாத்தியம் இல்லாதது என்றே இதுவரை நினைத்திருந்தோம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோன், மருத்துவமனையில் எனக்குக் கொடுக்கப்பட்ட உணவில் பட்டாணி இருப்பதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு உணவை சாப்பிட்டுவிட்டேன் என்கிறார்.
அந்த செடி 1.25 செமீ அளவுக்கு வளர்ந்திருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
ஒருவேளை இது தெரியாமல் போயிருந்தால், நான் பசுமையான தோட்டத்துக்கு சொந்தக்காரராகியிருப்பேனோ என்னவோ என ஜாலியாகக் கூறும் ரோன், நல்ல வேளை எனக்கு புற்றுநோய் இல்லை என்று சந்தோஷப்படுகிறார்.
கடவுளுக்கு மிகுந்த நகைச்சுவை உணர்வு இருப்பதாகவே நினைக்கிறேன் என்றார் அவரது மனைவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.