
நாட்டிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
இந்த கண்ணாடி பாலம் திறக்கப்பட்டால், நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் இதனைக் காண குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 25ஆம் தேதி திறக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சதுர அடிக்கு 500 கிலோ எடை வரை தாங்கும் திறன்கொண்டதாகவும், ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் வரை தாங்கும் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கருதி சுமார் 40 பேர் கொண்ட குழுக்களாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தால், நாட்டின் மிக நீண்ட கண்ணாடி பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 55 மீட்டர்களைக் கொண்ட இந்த பாலம் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இது மிகவும் குறைந்த எடையில், எல்லாவித இயற்கை சீற்றங்களையும் தாங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வங்கக் கடலின் அழகை ரசித்தபடி, இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்லும்போது பறவை பறப்பது போல மனிதர்கள் உணர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
கைலாசகிரி மலைக்கு மேலிருந்து கடல் பரப்பைக் காணும் வகையில் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளைக் கொண்ட 400 மி.மீ. அடர்த்தியில் ஜெர்மனி கண்ணாடி இழைகளால் 40 டன் எடையுள்ள எஃகு தூண்கள் தாங்கி நிற்கின்றன.இது கேரளத்தில் உள்ள வேகமன் கண்ணாடி பாலத்தின் நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனையை முறியடிக்கிறது. வேகமன் கண்ணாடி பாலம் 38 மீட்டர் நீளமுள்ளது.
இயற்கையின் ஒரு பிரம்மிப்பான மலைப் பகுதியிலிருந்து, மற்றொரு இயற்கை அதிசயமான வங்கக் கடலைக் காணும் அனுபவத்தை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எப்போதும் மறக்க மாட்டார்கள் என்றே இது பற்றி கூறுபவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த கைலாசகிரி மலைப் பகுதியை நாட்டின் டைட்டானிக் வியூ பாயிண்ட் என்று அழைப்பது வழக்கம். இங்கிருந்து இயற்கையின் அழகை ரசிக்க மற்றொரு மணிமகுடமான இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுளள்து.
இந்த பாலமானது, தனியார் மற்றும் அரசின் ஒருங்கிணைப்புடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்துடன், ஸிப்-லைன் அமைப்பும், ஸ்கை சைக்கிளிங் டிராக்கும் இணைக்கப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இவை கூடுதலாக 2 கோடி செலவில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கண்ணாடி பாலம் திறக்கப்பட்டால், விசாகப்பட்டினத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க... மோடியைப் போன்ற தலைவர் வேண்டும்: நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.