பெரும் பணக்காரராக எளிமையான பத்து விஷயங்கள்!

பெரும் பணக்காரர் ஆக பின்பற்ற வேண்டிய எளிமையான பத்து விஷயங்கள் பற்றி..
ரொக்கப் பணம்
ரொக்கப் பணம்
Published on
Updated on
2 min read

இந்தியாவில் பெரும் கோடீஸ்வர குடும்பங்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழகம் பணக்கார மாநிலமாக இருக்கலாம், ஆனால், அதில் வாழும் அனைவரும் பணக்காரர்களாக இருப்பதில்லை.

எல்லோரும் பணக்காரர்களாக இருக்க விரும்பினாலும், பலரால் பணக்காரராக முடிவதில்லை. பணக்காரராவதற்கு வெறும் உழைப்பு மட்டும் போதாது, பணத்தைக் கொண்டு பணமாக்கும் வித்தையைக் கற்றிருக்க வேண்டும்.

பணத்தை சம்பாதிப்பது முதல், செலவிடுவது, சேமிப்பது, முதலீடு செய்வது என அனைத்திலும் ஒரு திறமை வேண்டும். அவற்றைப் பின்பற்றினால் அனைவரும் பணக்காரராகலாம்.

சிறு துளி பெரு வெள்ளம்

வருவாய் குறைவாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு சிறு தொகையை முதலில் சேமிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சிறு தொகையாக இருந்தாலும் அது சேமித்து பெரும் தொகையாகி, அதனைக் கொண்டு ஒரு தொழில் தொடங்கலாம். வீட்டிலிருக்கும் பெண்களாக இருந்தால் தையல் இயந்திரம் வாங்குவது போன்று வருவாய் ஈட்டுவதற்கான வழிகளைத் தேட வழிவகுக்கும்.

கடன் அட்டைகள் வேண்டாம்

கூடுமான வரை கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வங்கிகள் கொடுக்கும் சலுகைகளுக்காக கடன் அட்டைகளை வாங்க வேண்டாம். அவ்வாறு தேவை என்றாலும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். ஒருவர் தன்னுடைய பொருளாதாரத்தை நிலைத்தன்மையுடன் வைத்திருப்பதைத் தடுப்பதே இந்த கடன்தான். அதிலும் கடன் அட்டையை பையிலேயே வைத்திருந்தால் தேவையில்லாத செலவுகளையும் செய்ய வைக்கும்.

கணக்கெழுதுங்கள்

எவ்வளவு செலவு செய்கிறோம், எதற்கு அதிகம் செலவாகிறது என மாதந்தோறும் கணக்கிடுங்கள். எல்லாம் தேவையானவைதான் என்று மனது சொன்னாலும், எழுதும்போதுதான் மூளை அதனை ஆராயும். அதிகம் எங்கே செலவாகிறது, ஒரு 100 ரூபாயையாவது எங்கேயாவது மிச்சம் பிடிக்க முடியுமா என கணக்குப் போட்டுப் பாருங்கள். ஒரு செலவைக் குறைத்து சேமித்துப் பாருங்கள். சேமிப்புத் தொகை என்பது அலாதியான சுவை. ருசித்துவிட்டால் விடாது.

சிலர் உணவுக்காக, சிலர் உடைக்காக அதிகம் செலவிடுவார்கள். அதனை முழுமையாக நிறுத்தாவிட்டாலும் ஒரு மாதத்துக்கு இவ்வளவுதான் என குறைக்க முடியும்.

ஆடம்பரப் பொருள் வேண்டவே வேண்டாம்

மற்றவர்களை சந்தோஷப்படுத்தவும், நம்மை பெருமையாக நினைக்க வைக்கவும் எந்த ஒரு பொருளையும் வாங்காதீர். முதலில், சிறு தொகையை முதலீடு செய்வதற்கான வழிகளை ஆராயுங்கள். ஆடம்பர செலவை ஆத்தியாவசிய முதலீடாக மாற்றுங்கள்.

பேரம் பேசலாம் தப்பில்லை

ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தபட்ச விலை இருக்கும். அதனை பேரம் பேசி வாங்கலாம். அதற்காக சாலையோரம் ஏழை வியாபாரிகளிடம் இல்லை. இ-வணிக நிறுவனங்களில் கூட மிகக் குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கும். சலுகைகள் அறிவிக்கும்போது தேவையான பொருள்களை மட்டும் சலுகை விலையில் வாங்கலாம். அவற்றைத்தேடி எங்கு குறைவாக விற்கப்படுகிறது என்று அறிந்து அங்கு வாங்கலாம். பேரம் பேசும் இடங்களில் பேரம் பேசி குறைந்த விலையில் பொருள்களை வாங்கலாம். அது உங்கள் திறமையை வளர்க்கும்.

அவசியம் எது? தேவை எது?

ஒருவருக்கு அவசியம் எது? தேவை எது என்று அறிந்துகொள்ளும் திறமை இருந்தால் அவர்களை யாருமே வெல்ல முடியாது. எனவே, ஒரு மாதத்தில் என்னென்ன வாங்குகிறீர்களோ அதில் அவசியமானது எது? தேவையானது எது? அந்த தேவை கண்டிப்பாக வாங்க வேண்டியதா? இல்லை என்றால் என்னவாகும் என ஒப்பிட்டுப் பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.

முதலீடுகள் பற்றி படியுங்கள்

முதலில் செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க வேண்டும். ஆனால், வெறும் சேமிப்பு பணக்காரராக உதவாது. எனவே, முதலீடுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். பணத்தை சட்டத்துக்கு உள்பட்டு முதலீடு செய்து, பணம் சம்பாதிக்கும் வித்தையை அறிந்து கொள்வது அவசியம். இப்போது ஆன்லைனிலேயே பலரும் இதுபற்றி விவரிக்கிறார்கள். முதலில் சிறு தொகையை முதலீடு செய்து பார்க்கலாம்.

எளிதான வழிகள் வேண்டாம்

விரைவாக பணக்காரர் ஆகலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். யாரையும் ஏமாற்றவும் வேண்டாம். எதில் ஒன்றிலும் முதலீடு செய்யும்போது கவனமாக செயல்படுங்கள். சட்டத்துக்கு உள்பட்டு முதலீடு செய்யுங்கள். குறைந்த லாபமாக இருந்தாலும் நிரந்தரமாக இருக்க வேண்டும்.

அவசர நிதி அவசியம்

சேமிப்பு தவிர்த்து, ஒரு தனிநபரும், குடும்பமும் அவசர நிதி என்ற ஒன்றை பராமரிப்பது அவசியம். இதுதான் பொருளாதார நிலைத்தன்மையின் அடிப்படை. எனவே, யார் ஒருவரும் இரண்டாவது வங்கிக் கணக்கில் இந்தத் தொகையை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

வருவாய் வழிகளை அதிகரியுங்கள்

ஒரே ஒரு வருவாயை நம்பி இருக்காமல், வருவாய் வழிகளை பெருக்க வேண்டும். இளைஞர்கள் வட்டி, வாடகை, புதிய தொழில், பகுதிநேர தொழில் போன்றவற்றின் மூலம் இரண்டாவது வருவாய் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால் அவற்றை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்குப் பயன்படுத்தலாம்.

இப்போதெல்லாம் சிறுதொழில் தொடங்குவது மிகவும் எளிதாக மாறியிருக்கிறது. சிறு தொகையை முதலீடு செய்து தொழில் தொடங்கி, பொருளாதாரத்தை வளர்க்கலாம்.

புதிய தொழிலில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வளர்ச்சியடைவதும், பெரும் பணக்காரர் ஆவதற்கான வழியே.

Summary

About ten simple things to follow to become very rich..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com