தவறாக வெளியான காலமானார் செய்தி! நோபல் பரிசுக்கு வழிவகுத்ததா?

தவறாக வெளியான காலமானார் செய்தி ஒன்று, நோபல் பரிசுகள் வழங்க வழிவகுத்தது பற்றி..
நோபல் பரிசு
நோபல் பரிசுANI
Updated on
1 min read

இன்று உலகமே கொண்டாடும் நோபல் பரிசு வழங்கக் காரணமாக அமைந்தது, தவறாக வெளியான ஒரு காலமானார் செய்தி என்றால் நம்ப முடிகிறதா? அது பற்றிய பல கதைகள் வெளியாகி வந்தாலும் இதனை உறுதிப்படுத்தும் வழிகள் இதுவரை கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல், பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தன்னுடைய வாழ்நாளில் 355 கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமைகளை வைத்திருந்தவர்.

அவரது கண்டுபிடிப்புகளில் அதிகம் பேசப்படுவது டைனமைட் எனப்படும் வெடிபொருள். இந்த வெடிபொருளைத் தயாரித்து அவர் பெரும் செல்வந்தரானார். ஆனால், இந்த வெடிபொருள் பயன்பாட்டினால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

ஆனால், பெரும் செல்வந்தரான ஆல்ஃபிரட் நோபலுக்கு இது பெரிய வருத்தத்தை அளிக்கவில்லை. அதாவது 1888ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் வயோதிகம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவரது சகோதரர் லுட்விக் நோபல் வயது முதிர்வு காரணமாக பிரான்ஸில் மரணமடைந்துவிட்டார். ஆனால், உண்மை அறியாத செய்தி நிறுவனங்கள், பெயர் ஒற்றுமை காரணமாக ஆல்ஃபிரட் நோபல்தான் இறந்துவிட்டார் என்று கருதி தவறுதலாக ஒரு காலமானார் செய்தியை பிரசுரித்துவிட்டன.

அதில் ஒரு பிரெஞ்சு செய்தித்தாள், மரண வியாபாரி மரணம் என்று தலைப்பிட்டிருந்தது. இதனைப் பார்த்த ஆல்ஃபிரட், தான் மரணமடைந்தால் இவ்வாறுதான் குறிப்பிடுவார்களா? உலகமும் தன்னை இப்படி ஒரு மரண வியாபாரியாகத்தான் பார்க்குமா? என்று அதிர்ந்து போனதாகக் கூறுகிறார்கள்.

எனவே, தன் பெயரில் அறக்கட்டளை நிருவி அதற்கு தன்னுடைய சொத்துகளை எழுதி வைத்து, ஆண்டு தோறும் தன்னுடைய பெயரில் ஐந்து துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கும், அமைதிக்காகப் போராடுபவர்களுக்கும் விருது வழங்க வேண்டும் என்று தன்னுடைய உயிலை மாற்றி எழுதினார் என்று கூறுப்படுகிறது.

இதைத் தொடர்ந்தே அவர் மரணமடைந்த பிறகு, உயிலில் குறிப்பிட்டிருப்பது போல ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

உண்மையில் இவ்வாறு செய்தி வெளியானதும், ஆல்ஃபிரட் நோபல் இறப்பதற்கு முன்பே அவர் காலமானதாக செய்திகள் வெளியானதும் உண்மை என்ற போதிலும், அதுதான் அவரது மனமாற்றத்துக்கான காரணமா என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்றே கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com