

இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்குவதாக பிரபல இன்ஃப்ளுயன்சரிடம் ரூ. 50 லட்சம் மோசடி நடந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் சைபர் குற்றங்கள் நடந்துவரும் நிலையில் முதல்முறையாக இதுவரை இல்லாத வகையில் சமூக ஊடக இன்ஃப்ளுயன்சரிடம் நூதன மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராமில் சுமார் 5.7 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலமான அசிம் அகமது(28) அடிப்படையில் ஒரு மென்பொறியாளர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு விடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு பதிப்புரிமை தருவதாக அவரிடம் மோசடி நடைபெற்றுள்ளது.
"ரூ.50 லட்சம் செலுத்துங்கள் அல்லது உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கிவிடும்' என்று மோசடி கும்பல் அவரிடம் கூறவே அசிமும் அதை நம்பி ரூ. 50 லட்சம் அனுப்பியுள்ளார்.
முதல்முறையாக 5 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு இன்ஃப்ளுயன்சரிடம் இந்த வகை மோசடி நடைபெற்றுள்ளது.
ஜபல்பூரில் நடந்த முதல் புதிய வகையான சைபர் குற்றம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மென்பொறியாளரான அசிம், கடந்த 2017ல் தனது இன்ஸ்டா பக்கத்தைத் தொடங்கினார். 2021ல் கரோனா ஊரடங்கின்போது அவர் அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றார். பின்னர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனக்கு போலி பதிப்புரிமை அழைப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் வருவதாகவும் பணம் கேட்பதாகவும் கூறிய அவர், பணம் செலுத்தவில்லை என்றால் எச்சரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கிவிடக்கூடாது என்ற அச்சத்தில் பலருக்கு பணம் அனுப்பியதாகவும் இதுவரை ரூ. 50 லட்சம் செலுத்தியுள்ளதாகவும் கூறுகிறார்.
தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள், போலி மின்னஞ்சல்கள் அதிகரித்த நிலையில் அவர் போலீசில் புகாரளித்த நிலையில் அது மோசடி என்று தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படுவது பற்றியும், இதுதொடர்பாக மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் அதிகாரிகள், இன்ஸ்டாகிராமின் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.