ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

நான் நவீனன் ஆனேன் - 18: பானுமதியும் விஜியும்!

அவர் என் நண்பர் சித்தூர் வி.நாகையா. குணச்சித்திர நடிகர் மட்டுமல்ல, அவரின் குணமும் பெருந்தன்மையின் இருப்பிடம். சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன்தான் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாகையாவைப்

Updated On :

அவர் என் நண்பர் சித்தூர் வி.நாகையா. குணச்சித்திர நடிகர் மட்டுமல்ல, அவரின் குணமும் பெருந்தன்மையின் இருப்பிடம். சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன்தான் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாகையாவைப் பற்றி விரிவாக மீண்டும் எழுதுகிறேன். இப்போது அவரின் உதவியோடு பானுமதியை பேட்டி எடுத்த நிகழ்ச்சிக்குச் செல்கிறேன்.

  பானுமதியும் நாகையாவும் சுந்தரத் தெலுங்கில் சிறிது நேரம் "மாட்லாடினார்கள்'!

  பிறகு என்னிடம் தமிழில் பேசிய பானுமதி "நவீனன் காரு' என்று அழைத்தார். அதுவரை நவீனனாக மட்டுமே இருந்து வந்தவன், "காரு'வானேன்! "நீண்டகாலமாக எழுத்தில் பண்புடன் எழுதிவருகிறவர்' என்று என்னைப் பற்றி பானுமதியிடம் நாகையா செய்திருந்த அறிமுகம், பானுமதியுடன் பேசப் பேருதவி புரிந்தது.

  பேட்டியை வித்தியாசமாக ஏற்பாடு செய்தேன். பிரபல நடிகை பானுமதியும் இளம் நடிகை விஜியும் சந்திக்கும் "நேர்காணல்' பேட்டியாக அதை அமைத்தேன். அந்தப் பேட்டியில் இருவரும் சுமார் ஒருமணிநேரம் பேசினார்கள். சந்தித்த இடம்: அப்பொழுது அவர் இருந்த தி.நகர், வைத்தியராமன் தெரு.

  பேட்டியின் போது முக்கியமாக பானுமதி விஜியிடம் தெரிவித்த ஒரு கருத்தை மட்டும் இங்கே குறிப்பிட வேண்டும்.

  ""நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்! அந்த அழகைச் சினிமாவுலகில் காப்பாற்றிக் கொண்டு நடிப்பது சிரமம். சிலர் நயமாகப் பேசி உன் அழகைச் சூறையாடிவிடுவார்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்!'' இப்படி அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். ஆனால் விஜியின் வாழ்க்கை தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலையில் முடிவுற்றது சோக சம்பவம்.

  இருவரின் உரையாடலையும் "கலை' என்ற சினிமாப் பத்திரிகையில் வெளியிட்டதைப் படித்துவிட்டு, பானுமதி என்னிடம் மேலும் விசுவாசமுள்ளவராக இருந்தார்.

  "சண்டி ராணி' என்ற சொந்தப் படத்தை அவரது பரணி ஸ்டூடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரித்தார். படத்திற்கு இயக்குநரும் அவரே.  கதாநாயகியும் அவரே. இணைந்து நடித்தவர் என்.டி.ராமாராவ். பானுமதி கத்திச் சண்டை போடும் காட்சி படமானபோது நேரில் படப்பிடிப்பைப் பார்த்து பிரமித்தேன். அப்படி அபாரமாக கத்திச் சண்டை போட்டார்.

  அவர் நடித்த நூற்றுக்கணக்கான படங்களில் இருந்து சில முக்கிய காட்சிகளைத் தொகுத்து டாகுமென்டரி படம் தயாரித்தார். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்ததை அந்தத் தயாரிப்பு வெளிப்படுத்தியது. அதற்காக அவர் படத்தை பிலிம்சேம்பர் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டார். அப்பொழுது நடந்து வந்தவர் எனக்கு அருகில் சற்று நின்று, "உங்கள் அபிப்ராயம் என்ன? அதுதான் எனக்கு முக்கியம்' என்று கேட்டது பெருமைக்குரிய ஒரு கேள்வி.

  சிறப்பாக விமரிசனம் எழுதினேன். அதற்கு எனக்கு ஃபோன் செய்து நன்றி தெரிவித்தார் பானுமதி.

  என் மனைவி ஜெயலட்சுமியிடம் பானுமதி கேட்டார்: ""உங்கள் கணவர் பத்திரிகை ஆசிரியராக இருக்கிறாரே, அவருக்கு நீங்கள் செய்துவரும் உதவி என்ன?''

  என் மனைவியிடமிருந்து பதில் இப்படி வந்தது:

  ""அவருக்கு ஃபவுன்டன் பேனாவுக்கு மை போடத் தெரியாது! கீழே சிந்திவிட்டுப் பிறகு துடைப்பார். "இங்க்-பில்லரைத்' தேடி எடுத்து வந்து நான் மை நிரப்பித் தருவேன். இல்லையென்றால் கையில் மையை அப்பிக்கொண்டு பரிதாபப் பார்வை பார்ப்பார்!''

  கேட்டுவிட்டுப் பெரும் சிரிப்புச் சிரித்தார் அந்தப் பிரபல நடிகை!

  பரணி ஸ்டூடியோவுக்குள் அவர் வீடு மாறி வந்ததும், அங்கும் போய் இருந்தேன். வயதான தள்ளாமையோடு காணப்பட்டார். நடிப்பு ஆர்வம் குறையவில்லை. சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். அவரது வீட்டின் முன் பக்கத்து அறையில் பிரம்மாண்டமான திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் படம் காணப்பட்டது. அப்படியொரு படத்தை எந்த சினிமா நடிகையின் வீட்டிலும் நான் பார்க்கவில்லை.

    நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று ஒரு தடவை அறிஞர் அண்ணா பானுமதியைக் குறிப்பிட்டார். அந்த வாய்க்கு சர்க்கரை மட்டுமல்ல, ஒரு துண்டுப் புகையிலையையும் போடலாம்!

  பானுமதியின் வாயிலாகத்தான் எனக்கு என்.டி.ராமாராவின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய சென்னை- பசுல்லா சாலையில் உள்ள வீட்டில் ஒருமுறை பார்க்கப் போனேன்.

  காலை மணி எட்டு இருக்கும். அவரது வீட்டு வாசலில் இரண்டு, மூன்று பஸ்கள் காணப்பட்டன. அவற்றில் இருந்து பல ரசிகர்கள் இறங்கி அவரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களின் பாஷையில் அவரைத் "தரிசிக்க' என்று சொல்லவேண்டும்!

  நீண்ட க்யூவில் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆணும், பெண்ணும் குழந்தைகளுடன் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தார்கள்.

  அவர்களில் ஒருவர் சுமாரான தமிழில் என்ன சொன்னார் தெரியுமா?

(இன்னும் வரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.