ஒரு பக்கக் கதை: வாத்தியார் அம்மா

""வேண்டாம்னாப் போயேன்''   ""எங்கண்ணுல்ல, சாப்பிடுடா, இங்க பாரேன், கொஞ்சம்தான் சாதம் இருக்கு. தயிர் விட்டுப் பிசைஞ்சிருக்கேன். உனக்குப் பிடிக்குமே. சாப்பிடுடா''   ""விடும்மா. வேணாம்... வேணாம்''   கல்பன
ஒரு பக்கக் கதை: வாத்தியார் அம்மா
Updated on
1 min read

""வேண்டாம்னாப் போயேன்''

  ""எங்கண்ணுல்ல, சாப்பிடுடா, இங்க பாரேன், கொஞ்சம்தான் சாதம் இருக்கு. தயிர் விட்டுப் பிசைஞ்சிருக்கேன். உனக்குப் பிடிக்குமே. சாப்பிடுடா''

  ""விடும்மா. வேணாம்... வேணாம்''

  கல்பனா பின்னாடியே போய் ஊட்டிவிட முயல, ரஞ்சித் பிடி கொடுக்காமல் ஓடினான். ஓடிப் போய் எட்டிப் பிடித்துக் கொண்டு, வாயில் ஊட்ட முயன்றாள். ரஞ்சித் சட்டென்று கிண்ணத்தைத் தட்டி விட்டு விட்டான்.

  கிண்ணம் உருண்டு, தரை நெடுக தயிர்சாதம் பரவல்!

  கல்பனாவுக்குள் கோபம் முளைத்தது.

  சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

  பெற்ற மனமல்லவா!

  ""என்னடா இப்படிப் பண்ணிட்டே?'' என்று கேட்டுக் கொண்டே தரையைப் பெருக்கிச் சுத்தம் பண்ணினாள்.

  இதற்குள் குழாயடிக்குப் போய்விட்டான் ரஞ்சித். குழாயைத் திறந்துவிட்டுவிட, மளமளவென்று நீர் கொட்டியது. அரவை மெஷினுக்கு எடுத்துச் செல்வதற்காக  முற்றத்தில் உலரவிட்டிருந்த மிளகாய் வற்றலும், கொத்து மல்லி விதைகளும் நீரில் மிதந்தன.

  ""ஐயோ ரஞ்சித், இப்படிப் பண்றியேடா!'' என்று கத்திக் கொண்டே போய்க் குழாயை நிறுத்தினாள்.

  அதற்குள் உலரவைத்து மடித்து வைத்த துணிகளைத் திண்ணையிலிருந்து ஒரு தள்ளுத் தள்ளினான். அத்தனையும் முற்றத்திலே போய் விழுந்து நனைந்தன.

  ""ஐயோ பையா! மழை நேரத்திலே போய், இப்படி உலர்ந்த துணிகளையெல்லாம் நனைச்சிட்டேயடா'' என்று கத்திக் கொண்டே துணிகளைப் பிழிந்து மறுபடியும் உலரப் போட்டாள் கல்பனா.

  லீவு நாளேச்சே என்று ஓர் ஐந்து நிமிடம் கூடத் தொடர்ந்தாற் போல் இருந்துவிட முடியாது. மகனின் பின்னே ஓடிக் கொண்டேதான் இருந்தாக வேண்டும். அவன் எந்த வேளையில் என்ன விஷமம் பண்ணுவான் என்று கணிக்கவே முடியாது. அதனால் எப்போதும் அவன் மீது ஒரு கண் இருந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.

  ""டமால்!''

  திண்டின் மீது அழகாய் இருந்த பூச்சட்டி, இப்போது துண்டு துண்டாய்த் தரையில் சிதறிக் கிடந்தது.

  ""சே! ஒரு ரெண்டு வயசுப்பயல்! இவனை அடக்க என்னால முடியலியே!'' என்று பார்வை ஒன்றின் மூலமாகவே தனது வகுப்பு மாணவர்கள் நாற்பது பேரையும் "கப் சிப்' என்று அடக்கி விடுகிற டீச்சர் கல்பனா புலம்பிக் கொண்டு இருந்தாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com