

எனக்கு வயது 22. எடை 48 கிலோ. எனக்கு உடல் சூடு அதிகமாக இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் நான் பாயை விரித்துப் படுத்து உறங்கி எழுந்ததும், படுத்திருந்த இடத்தில் ஐந்து நிமிடம் வரை சூடாக இருக்கிறது. இதனால் உடல் முழுக்க பருக்கள், கட்டி, உதடு வெடிப்பு, கண் எரிச்சல், உடல் சோர்வு, எடைகுறைவு, வலுவின்மை ஆகியவற்றால் அவதிப்படுகிறேன். இவை குணமாக நான் என்ன செய்ய வேண்டும்?
ஹாரீஸ், திருவைகுண்டம்.
""பித்தே திக்த: தத:ஸ்வாது: கஷாயஸ்சரúஸôஹித'' என்று ஆயுர்வேதம் கூறும் பித்த தோஷங்களின் குணங்களாகிய சிறிது எண்ணெய்ப் பசை, ஊடுருவும் தன்மை, சூடு, லேசானது, துர்நாற்றம், மலத்தை இளக்கும் தன்மை, திரவம் போன்றவை உடலில் அதிகரிக்கும்போது, சுவைகளில் முக்கியமாக கசப்பும், அதற்கு அடுத்தபடியாக இனிப்பும், மூன்றாவதாக துவர்ப்புச் சுவையும் நிறைந்த மருந்துகளாலும், உணவு வகைகளாலும் அந்தக் குணங்களின் சீற்றத்தை அடக்க வேண்டும் என்று அதற்கு அர்த்தமாகும். மற்ற மூன்று சுவைகளாகிய காரம், புளி மற்றும் உவர்ப்பு ஆகியவற்றை மருந்தாகவோ, உணவாகவோ சாப்பிடக்கூடாது என்ற ஓர் உள்முக அர்த்தமும் இந்த ஸ்லோகத்தில் மறைந்திருக்கிறது.
பித்ததோஷத்தின் சீற்றத்தை அடக்குவதைவிட குடலிலிருந்து பேதி மருந்து மூலமாக வெளியேற்றுவது எனும் சிகிச்சைமுறை சிறந்தது. அதற்குக் காரணம், மேற்குறிப்பிட்ட சுவைகளின் மூலம் தோஷத்தின் சீற்றம் அடங்கினாலும், ஒரு சிறிய காரணம் கொண்டு அந்தப் பித்தம் மறுபடியும் அதிகமாகலாம். பித்தத்தை வெளியேற்றிவிட்டால் அது மறுபடியும் சீற்றமாவதற்கு வழியில்லை. ஆனால் பேதி மருந்தைச் சாப்பிடுவதற்கு நோயாளிக்கு உடலில் வலுவிருக்க வேண்டும். உங்களுக்கு வயது 22 தான் ஆகிறது. இந்த இளமையான வயதில் உங்களுக்கு நல்ல உடல் வலுவிருக்க வேண்டும். ஆனால் வலுவின்மை இருப்பதாகக் குறிப்பிடுகிறீர்கள். தமிழகத்தில் கடும் கோடை வேறு தொடங்கிவிட்டது. அதனால் நீங்கள் பேதி மருந்து சாப்பிட்டு, பித்தத்தை வெளியேற்றி அதன் மூலம் உடல் சூட்டைத் தணிக்க முயற்சி மேற்கொள்வதைவிட, உடல் ஏற்படுத்தியிருக்கும் பித்தத்தை அடக்குவதே நல்லதாகும். அந்த வகையில் கீழ்காணும் சில உணவுகளைச் சாப்பிட முயற்சி செய்யவும்.
முதல்நாள் இரவு மாக்கல்லால் செய்யப்பட்ட கல்சட்டியில் ஊறிய சாதத்தின் தண்ணீரை, சிட்டிகை நெல்லிக்காய் வத்தல் பொடியுடனும், தனியாத் தூளுடனும், சிறிது இந்துப்பு கலந்து 2 - 3 கிளாஸ் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். ருசிக்காக சிறிது வெங்காயத்தைக் கடித்துக் கொள்ளலாம். இதைக் காலை உணவாக ஏற்க, குடலில் ஊறும் பித்த ஊறலை மட்டுப்படுத்தி, உடல் பலவீனத்தை ஏற்படுத்தாமல் சுகமான கழிச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், சிறுகுடல் ஆகிய பகுதிகள் இந்த எளிமையான உணவால், துடைத்துவிட்ட கண்ணாடிப் பாத்திரம்போல் தூய்மையாகிவிடுகின்றன.
காலையில் 9 மணிக்கு, பசும்பால் கலந்த அன்னத்தை சிறிது கற்கண்டு பொடித்துச் சேர்த்துச் சாப்பிடவும். பித்த ஊறலை, தனது இனிப்புச் சுவை மற்றும் குளிர்ச்சி எனும் குணத்தால் பசும்பால் கட்டுப்படுத்துகிறது.
மதிய உணவாகப் பச்சரிசி சாதத்துடன் மணத்தக்காளிக் கீரைப் பொரியல், வாழைப்பூ வடைகறி, நெல்லிக்காய்த் தயிர்ப்பச்சடி, கேரட் உசிலி, பயத்தம்பருப்பு தூக்கலாக, பசுநெய் சேர்த்து சாப்பிட்டு, தக்காளி ரசம் அல்லது வேப்பம்பூ ரசம், நன்றாக வேக வைத்துச் சீரகம், தேங்காய் சேர்த்து அரைத்த முட்டைக்கோஸ் கூட்டு, பூசணிக்காய் கூட்டு போன்றவற்றை உணவின் நடுவிலும், நன்றாகக் கடைந்த வெண்ணெய் நீக்காத மோர்சாதத்துடன் நார்த்தங்காய் பச்சடியும் சாப்பிடலாம்.
மாலையில் ஒரு பூவன் வாழைப்பழமும், சிறிது இனிப்பு மாதுளம்பழமும் சாப்பிடலாம்.
இரவில் பச்சைப் பயறு பெசரேட் தோசை அல்லது சீரகம் சேர்த்த கோதுமையினால் தயாரிக்கப்பட்ட தோசை, சிறிது தேங்காய்ச் சட்டினியுடன் சாப்பிட நல்லது.
புலால் உணவு, சமோசா, பீட்ஸô, பிரட் போன்ற துரித உணவு வகைகள், பகல் தூக்கம், மன உளைச்சல் தரும் சிந்தனை, தேவையற்ற கோபம், இரவில் கண்விழித்தல், காபி, டீ, சிகரெட், மதுபானம், பாக்கு போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை.
உடல்சூடு தணிய ஆயுர்வேத மருந்தாகிய திராக்ஷôதி கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும். சந்தனாதி தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.