ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

நான் நவீனன் ஆனேன் - 19: ராமாராவ் வீட்டுக் குருவிக் கூடு!

ராமாராவ் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் தெலுங்கு வாடை வீசும் தமிழில் சொன்னார்:   ""கிருஷ்ண பரமாத்மாவைத் தரிசிக்க வந்திருக்கோம்!''   சினிமாப் படங்களில் கிருஷ்ணர், ராமர் போன்ற வேடங்க

Updated On :

ராமாராவ் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் தெலுங்கு வாடை வீசும் தமிழில் சொன்னார்:

  ""கிருஷ்ண பரமாத்மாவைத் தரிசிக்க வந்திருக்கோம்!''

  சினிமாப் படங்களில் கிருஷ்ணர், ராமர் போன்ற வேடங்கள் ஏற்று நடித்து இருந்ததால் அவரை அப்படியே நினைத்துப் பலர் ஆந்திர மாவட்டங்களில் இருந்து பார்க்க வந்திருந்தார்கள்.

  அவர்களுக்குத் "தரிசனம்' தரக் கரிசனத்துடன் ராமாராவ் விடியற்காலையில் எழுந்து, ரசிகர்களை அவரின் வீட்டிற்குள்ளே வரச் சொன்னார். அவர்களுடன் கைகுலுக்கினார். அவர்களுடன் கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். காலைச் சிற்றுண்டியை அவர்களுக்கு தன் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார். அவர்களை அனுப்பிவிட்டுப் பிறகு என்னிடம் பேசினார் ராமாராவ். இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு மேலே விட்டத்தில் குருவி கூடு கட்டியிருந்தது. அதில் இருந்து வைக்கோலும் வேறு சில மரச்சட்டங்களும் அவர் மீது விழுந்தன.

  சற்றும் அருவருப்பு அடையாமல் அவற்றை அவர் தட்டிவிட்டுக் கொண்டே "குருவி, வீட்டில் கூடு கட்டுவது அதிர்ஷ்டம். அதனால் செல்வம் குவியும்' என்றார்.

  அது உண்மை; அவருக்குப் பொருள் செல்வம், குழந்தைச் செல்வம் எல்லாம் இருந்தன. தன் மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரின் பெயரே புதுமையாக இருந்தது. "பசுவ ராம தாரகம்'. இதுதான் அவர் மனைவியின் பெயர். அந்த அம்மாள் கைகூப்பி வணங்கிவிட்டு அடங்கி, ஒடுங்கி உள்ளே போய்விட்டார்!

  ""இவள் வீட்டுத் தவளை! படப்பிடிப்பைப் பார்க்க வந்தது இல்லை. என்னுடன் அவுட்டோர் படப்பிடிப்புக்கு வர ஆசைப்படவில்லை'' என்று ராமாராவ் அவரது மனைவியைப் பற்றி கூறினார்.

  அவரின் வீடு பரபரப்புடன் காணப்பட்டது. காரில் அவரது வாரிசுகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் போய்க் கொண்டிருந்தனர். நிறைய உறவினர்கள்; நண்பர்கள்; வேலைக்காரர்கள். அவரின் வீடே ஒரு சின்ன அயோத்தியாகத் தோன்றியது!

  அவரைப் பற்றி எழுதிய கட்டுரைதான் எனக்கு "தினமணி கதிரில்' உதவி ஆசிரியர் வேலை கிடைக்கக் காரணமாக அமைந்தது. எனக்குத் தகவல் அனுப்பி வைத்து, ஆசிரியர் சாவி தனக்குக் கீழ் வேலைக்கு வைத்துக் கொண்டார்.

  ""சினிமாக் கட்டுரைகள் எழுத சரியான எழுத்தாளர் நீங்கள்! எனக்குக் கீழ் பணிபுரிய சம்மதமா? கெüரவமாக நடத்துவேன்'' என்றார். ஒப்புக் கொண்டேன். என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு, அப்பொழுது மேலாளராக இருந்த கிருஷ்ணசாமி அய்யங்கார் என்பவரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர் மணி கிருஷ்ணசாமி என்ற பிரபல கர்நாடகப் பாடகியின் கணவர். அப்பொழுது சாவி சொன்னார்: ""இவர் சங்கீத விமர்சனமும் எழுதுவார். ஆல்ரவுண்ட் ரைட்டர். கால்களில் சக்கரம்!''

  "பொப்புலி புலி' என்று ஒரு தெலுங்குப் படத்துக்கான படப்பிடிப்பு கிண்டிக்கு அருகில் நடந்தது. என்.டி.ராமாராவ்தான் கதாநாயகன். பல பிரபல தெலுங்கு நடிகைகள் அவருடன் நடித்து வந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீதேவி. அழகின் அவதாரமாக ஜ்வலித்தார்.

  படப்பிடிப்பைப் பார்க்க யாரையும் உள்ளே அனுமதிக்காமல், இரண்டு முரட்டுக் காவலர்கள் இருந்தார்கள். எப்படியும் உள்ளே போய்விடவேண்டும் என்று கருதி என்னைப் பற்றி அவர்களிடம் சொன்னேன். மீசையை முறுக்கிப் பயமுறுத்தினார்களே தவிர உள்ளே அனுமதிக்கவில்லை!

  ஒருவர் உள்ளே இருந்து வந்தார். அவரிடம் பேசினேன். அவர் சற்று யோசித்து விட்டு உள்ளே சென்று ராமாராவிடம் தெரிவிக்க, உடனே ராமாராவ் என்னை உள்ளே வரச்சொல்லி பணியாளிடம் உத்தரவிட்டிருக்கிறார்.

  போனேன்; அந்தக் கம்பீரமான "புலி' -(அதாவது ஜமீன்தார் வேடம்) வேடத்தில் இருந்த என்.டி.ஆர். எழுந்து கைகூப்பி வணங்கி அருகில் நான் உட்காருவதற்கு நாற்காலி போடச் சொன்னார்.

  ""என்னைப் பற்றிப் பல பத்திரிகைகளில் எழுதி இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் எழுதிய கட்டுரைதான் பிரமாதம்! நன்றி'' என்றார்.

  அங்குதான் எனக்கு ஸ்ரீதேவி அறிமுகமானார். அவரைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

  நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவரான கலைவாணரைப் பற்றி நிறைய எழுதி தனிப் புத்தகம் வெளிவந்துவிட்டது. எனவே நடிகர் கே.ஏ.தங்கவேலு பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

  அப்பொழுது அவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டில் இருந்தார். அங்கு அவரைச் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி முதுகைக் காட்டினார். முதுகில் என்ன இருந்தது?

(இன்னும் வரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.