

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அந்த வகையில் ஒரு புதிய லட்சியத்தோடு தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் "அண்மைக்காலமாய்' படத்தின் இயக்குநர் சின்னப்பா கணேசன். திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும். தன் முதல் படம் தொடங்கும் நாளில்தான் திருமணமும் நடைபெற வேண்டும். மணப்பெண் இலங்கை அகதியாக இருக்க வேண்டும் என்பதுதான் சின்னப்பாவின் பெரிய லட்சியம். இந்த மூன்று லட்சியங்களையும் கடந்த 20-ம் தேதி நிறைவேற்றி படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார். பெருமாள்புரம் அகதிகள் முகாமில் இருந்த மகிந்தலியைத் திருமணம் செய்துகொண்டு படப்பிடிப்பில் இருந்தவரிடம் "அண்மைக்காலமாய்' குறித்து கேட்டபோது...
""தற்போது கலாசாரச் சீரழிவு குறித்து அதிகம் பேசப்படுகிறது. பத்திரிகைகளில் வரும் செய்திகள் நம் நாட்டிலா இப்படி நடக்கிறது என எண்ண வைக்கின்றன. அப்படி அதிர வைத்த ஓர் உண்மைச் சம்பவத்தைப் பற்றியதுதான் படம். அண்மைக் காலமாய் ஒரு படத்தில் நடிகர்கள் யார் என்பதை விட கதை என்ன என்று பார்த்துதான் மக்கள் தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் படத்தைத் தொடங்கியிருக்கிறோம்'' என்றார் சின்னப்பா கணேசன்.
அப்படிப் போடு... போடு
"கில்லி' படத்தில் இடம்பெற்ற "அப்படிப் போடு போடு...' பாடல், தெலுங்கில் ரவிதேஜா-த்ரிஷா நடித்த "கிருஷ்ணா' படத்தில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது "கிருஷ்ணா' படம், "மதுர திமிரு' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. அதற்காக "அப்படிப்போடு...' என்ற பாடலின் வரிகள் "பொட்ட கோழி கோழி போந்தா கோழி நான்தானே...' என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாலபாரதி எழுதியுள்ளார். படத்தைப் பாடகர் மனோ தமிழில் வெளியிடுகிறார்.
மீண்டும் அமலா!
தனது கவிதைத் தொகுப்புகளால் பலரையும் கவர்ந்த தபூசங்கர், திரைப்படப் பாடலாசிரியாராக உருவெடுத்தார். தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தையும் இயக்கவுள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு "லைலா மஜ்னு லீலை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தபூ சங்கரும் சினேகனும் பாடல்களை எழுதுகிறார்கள். "கார்த்திக் அனிதா' படத்தில் நடித்த ரத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த புதுமுகம், அமலா என்ற பெயரில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.