

ஆன்மிக அன்பர்கள், ஜோதிட வல்லுநர்கள், எண் கணித நிபுணர்கள் ஆகியோர் அடித்துச் சொல்லிய பிறகே அரசியலுக்கு வரும் திட்டத்தில் உறுதியாக இருக்கிறாராம் விஜய். மேலும், அடுத்தடுத்து என்ன செய்தால் அரியாசனத்துக்கு அருகில் செல்லலாம் என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறதாம். இதனால் இளைய தளபதியின் வீட்டில் ஜோதிட ராஜகுருக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சுந்தர் C
இயக்குநராக இருந்து நடிகராக மாறி வெற்றி பெற்றுள்ள சுந்தர்.சி, கைவசம் ஐந்துக்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை வைத்திருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ஒரு ‘C’ (கோடி) க்கும் அதிகமான தொகையைக் கேட்கிறார் சுந்தர்.சி என தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து கேட்டால்...
""இவ்வளவு பணம்தான் வேண்டும் என நான் "கட் அண்ட் ரைட்' ஆகப் பேசுவது கிடையாது. படத்தின் பட்ஜெட், எனக்குரிய வியாபாரம் போன்றவற்றை வைத்தே தயாரிப்பாளர்கள் என் சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள். சினிமாவில் வெற்றியைப் பொருத்துதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள்'' என்கிறார்.
தயாரிப்பு தரப்பில் கேட்டால்... ""சுந்தர்.சி அந்த நடிகையுடன்தான் நடிப்பேன்; இந்த நடிகையுடன்தான் நடிப்பேன் என அடம்பிடிப்பதில்லை. புதுமுகங்களாக இருந்தாலும் நடிக்கச் சம்மதிப்பார். புதுமுக நடிகைகளுக்கு அதிக சம்பளம் தரத் தேவையில்லை. அதை ஹீரோவுக்கும் படத்தின் பட்ஜெட்டுக்கும் பயன்படுத்திக்கொள்கிறோம்'' என்றே பதில் வருகிறது.
சகோதர பாசத்துக்கு ஒரு படம்!
"நான் கடவுள்' படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தை செüந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் நடிகர்கள் ஜீவாவையும் அவரது அண்ணன் ரமேஷையும் வைத்து அண்ணன்-தம்பி கதை ஒன்றை தனது பாணியில் இயக்க முடிவெடுத்திருக்கிறார். இதற்கான கதை விவாதம் நடைபெற்றுள்ளது. சகோதரர்களிடம் கதையைக் கூறியுள்ளார் பாலா. அடுத்த ஆண்டு படம் துவங்கவுள்ளது.
ஏறுமுகம்!
"மலை மலை' படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் அருண்விஜய் வட்டாரம் மகிழ்ச்சியில் உள்ளது. இதையடுத்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ்-அருண்விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது. படத்துக்கு "பாமரன்', "பரபரப்பு', "மாஞ்சா' என்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் "மாஞ்சா மதன்' என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. "உனக்கு 2010-ம் ஆண்டிலிருந்து சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து ஏறுமுகம்தான்' என ஜோதிட வட்டாரம் கூறியதில், கூடுதல் தெம்புடன் உழைத்து வருகிறார் அருண்விஜய்.
"காதல்' சந்தியா!
பரத், ப்ருத்விராஜ், பிரசன்னா ஆகியோரையடுத்து தற்போது சாந்தனுவுடன் காதல் என சந்தியாவைப் பற்றி சினிமா வட்டாரம் கிசுகிசுக்கிறது. இதுகுறித்து சந்தியாவிடம் கேட்டபோது...
""காதல்' படத்தில் அறிமுகமான ராசியோ என்னவோ என்னைப் பற்றி நிறைய காதல் வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சாந்தனுவின் தங்கை சரண்யா எனக்கு நெருக்கமான தோழி. அவர் மூலம் எனக்கு சாந்தனு அறிமுகமானார். சில விழாக்களிலும் பார்ட்டிகளிலும் இருவரும் கலந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் நட்பு வலுப்பட்டது. இதற்கு காதல் எனப் பெயரிடுகிறார்கள். இந்த நிமிடம் வரை எனக்கு யாருடனும் காதல் இல்லை. சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. இப்போது ஐந்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார்.
அஜீத் நடிக்கும் ஆனந்தின் படம்!
"அயன்' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனத்துக்காக ஒரு புதிய படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இதில் அஜீத் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அஸினை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வர முயற்சி நடைபெறுகிறது. இந்தப் படத்துக்காக "அயன்' போலவே ஒரு தூய தமிழ்ப் பெயரைத் தலைப்பாக வைக்க முடிவெடுத்துள்ள கே.வி.ஆனந்த், இந்தப் படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.