

செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட காலமாக உருவாகி வந்த "ஆயிரத்தில் ஒருவன்' படம் ஒருவழியாக அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியாகிறது. படத்தில் ரீமாசென், ஆண்ட்ரியா என இரு நாயகிகள். படம் வெளிவரவுள்ள சூழ்நிலையில், "இரு நாயகிகளுக்கும் சமமான கேரக்டர் என்று கூறி நடிக்க வைத்தனர்; ஆனால் நான் நடித்த காட்சிகளைக் குறைத்துவிட்டனர்; மேலும் நான் நடித்ததில் க்ளாமர் காட்சிகளை மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்' என கூறி வருகிறாராம் ரீமாசென். இதுபற்றி கேட்டால்...
""மூன்று ஆண்டுகள் பொறுமையோடு இருந்தவர் திடீரென ஏன் இப்படிச் சொல்லுகிறார் எனத் தெரியவில்லை. படம் வெளிவந்தவுடன் யாருக்கு முக்கியத்துவம் என்பது தெரிந்துவிடப் போகிறது. ரீமாசென்னுக்கு மட்டுமல்ல இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவருக்குமே இதுதான் "மாஸ்டர் பீஸ்' படம் என்கிறது இயக்குநர் தரப்பு.
குடும்பப் பாடல்!
செüந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் "கோவா' படத்தில் பாவலர் வரதராஜன், ஆர்.டி.பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் பிறந்த ஊரின் பெருமையை எடுத்துக் கூறும் விதத்தில் ஒரு பாடல் இடம்பெறுகிறது. கங்கை அமரன் எழுதிய "ஏழு தலை முறைக்கும் எங்கசாமி பக்க பலம் எடுத்து வந்தோம் நல்ல வரம்...' என்ற இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவுடன் அவருடைய சகோதர சொந்தங்கள் கார்த்திக் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, பவதாரிணி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல், இந்தப் படத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் மிகப் பெரிய ஹிட் பாடலாக அமையும் என்கிறது பட யூனிட்.
துள்ளுவதோ இளமையைத் தொடர்ந்து..
பள்ளி மாணவர்களின் காதலை மையமாக வைத்து "துள்ளுவதோ இளமை' பாணியில் மீண்டும் ஒரு படம் தயாராகிறது. "365 காதல் கடிதங்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் புதுமுகம் யுவகார்த்திக், "தூத்துக்குடி' கார்த்திகா நடிக்கிறார்கள். பிரியம் பாண்டியன் இயக்குகிறார்.
படத்தைப் பற்றி கேட்டபோது...
""பள்ளிப் பருவத்தில் எதிர்பாலினரிடையே ஏற்படும் ஈர்ப்பு காதலா? இனக் கவர்ச்சியா? என்பதை ஆபாசம் இல்லாமல் நாகரிகமாக வெளிப்படுத்தியிருக்கிறோம். பாடல்களும் இசையும் படத்தின் "ஹை லைட்'டாக இருக்கும். அண்மையில் இந்தப் படத்துக்காக ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் உள்ள 1000 மாணவ, மாணவியரைத் திரட்டி "சைக்கிள் தேவதை, சாலையில் ஐஸ் மழை...' என்ற பாடலை பிரம்மாண்டமாகப் படமாக்கினோம். பால் ஜே இசையில் கவிஞர் யுரேகா பாடல்கள் எழுதியுள்ளார். இதுவரை சொல்லிய காதல் கதைகளிலிருந்து உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான காதல் கதையாக இருக்கும்'' என்றார்.
"சுத்த' வில்லன்!
"யோகி' படத்தில் வில்லனாக நடித்த கசாலி, பாமகவில் மாநில அளவில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். நீங்கள் சார்ந்துள்ள கட்சி, சினிமாவுக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் அந்தக் கட்சியிலிருந்து நடிப்புத்துறைக்கு வந்திருக்கிறீர்களே?'' என்று கேட்டபோது...
""எங்கள் கட்சி சினிமாவுக்கு எதிரானது அல்ல; மோசமான சினிமாவுக்குத்தான் எதிரானது. நான் நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளேன். அதனால் என் கட்சியில் எனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லை. நான் எப்படிப்பட்ட கொடூரமான வில்லனாக நடித்தாலும் அந்தப் படத்தில் புகை பிடிக்க மாட்டேன்; மது அருந்த மாட்டேன்; கற்பழிப்புக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்'' என உறுதியளித்த கசாலி, அடுத்து "என்னை ஏதோ செய்துவிட்டாய்' என்ற புதிய படத்தைத் தயாரிக்கிறார். இதில் இயக்குநர் தருண்கோபி கதாநாயகனாக நடிக்கிறார். புதியவர் இப்ராஹிம் படத்தை இயக்குகிறார்.
காமெடி கமல்!
மிஷ்கின் இயக்கத்தில் கமல் நடிக்கவிருந்த படம் திரைக்கதை உருவாக்கத்தில் நேர்ந்த தாமதத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அடுத்து ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளார் கமல். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. படம் உறுதியாகும் பட்சத்தில் தமன்னா கதாநாயகியாக நடிப்பதும் உறுதி என தயாரிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.
மரியாதைக்குரிய "மா'!
ஹீரோ, இயக்குநரிலிருந்து ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் பலர் பங்கேற்று "மா' என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். இதுபோன்ற மாற்றுத்திறனாளிகள் உருவாக்கும் முதல் படமும் இதுதான். படத்தின் இயக்குநர் எஸ்.பாத்திமாபீவி முழு படத்தையும் சக்கர நாற்காலியில் அமர்ந்து இயக்கியிருக்கிறார். பார்வையற்ற கிடியோன் கார்த்திக் இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் விறுவிறுப்பான பாடல் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் நடனம் ஆடியுள்ளனர். நடனம் அமைத்த அமுதரஜினியும் கால் ஊனம் என்பதை மறந்தவரே. மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. எந்தக் குறைபாடும் இல்லாமல் நல்ல உடல் நலத்தோடு இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை. இறுதிக் கட்டத்தில் இருக்கும் "மா' 2010}ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகிறது.
இமாலய சிக்கல்!
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் கே.பாலசந்தர், பாரதிராஜா முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் "ரெட்டச்சுழி'. புதியவர் தாமிரா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் டப்பிங் இன்னும் முடியவில்லை. இயக்குநர் இமயம் உள்பட சிலர் டப்பிங் பேச மறுத்ததுதான் காரணம் என்கிறது பட வட்டாரம். பேசிய பணத்தைத் தராததுதான் டப்பிங் பேச மறுத்ததற்கு காரணம் எனப்படுகிறது. காரணங்கள் எவையாகினும், டப்பிங் முழுமையடையாததால் படம் துபை திரைப்பட விழாவில் பங்கேற்க இயலாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.
பாலாதான் காரணம்!
தனி ஹீரோவாக நடித்து வந்த விஷால், முதல்முறையாக ஆர்யாவுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். காமெடியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை பாலா இயக்குகிறார். "டபுள் ஹீரோ' சப்ஜெக்டில் நடிப்பது குறித்து விஷாலிடம் கேட்டால்...
""பாலா இயக்கும் படத்தில், ஒரு சிறிய வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அப்படி இருக்கும்போது நல்ல கதையுடன் ஒரு முக்கியமான கேரக்டர் கிடைத்தால் நடிக்காமல் விடுவேனா?'' என்கிறார்.
படித்துக் கொண்டே நடிப்பேன்!
ராசி அழகப்பன் இயக்கிய "வண்ணத்துப்பூச்சி' படத்த்தில் நடித்த ஸ்ரீலஷ்மி, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தமிழக அரசின் விருது பெற்றுள்ளார். விருது பெற்றவரிடம் ""அடுத்து நடிப்பா? படிப்பா?'' என்று கேட்டபோது...
""படிப்புக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். டாக்டர் ஆவதுதான் என் லட்சியம். ஆனால் தமிழக அரசு விருது பெற்ற பிறகு பல வாய்ப்புகள் வருகின்றன. அதனால் நல்ல கதைகளுக்கு மட்டும் நேரம் ஒதுக்கி நடிப்பேன். மலையாளத்தில் நான் நடித்த "கேரளா கபே' படம் பெரிய ஹிட் ஆகியுள்ளதால் அங்கும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் "ரெட்டச்சுழி' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறேன். ஷங்கர் சார் தயாரிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளேன்'' என்றார் ஸ்ரீலஷ்மி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.