
மழை ஓய்ந்து குளிர் தொடங்கும் பருவகாலங்களில் எனக்கு மூக்கிலிருந்து நீராகக் கொட்டுகிறது. தும்மலும் தலைப் பாரமும் வாட்டுகிறது. தலைவலியால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்தான் இவ்வாறு ஏற்படுவதாக டாக்டர் கூறுகிறார். இவை நீங்க ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளில் மிகச் சிறந்த உபாயங்கள் சில இருக்கின்றன. அவை உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது முக்கூட்டெண்ணெய் எனப்படும் நெய்+நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் + விளக்கெண்ணெய் இம்மூன்றும் சேர்ந்தது இவற்றைத் தடவித் தேய்த்துக் கொண்டு உடல் - காலம் - தேச நிலைகளுக்குத் தக்கவாறு தண்ணீரிலோ அல்லது வெந்நீரிலோ குளிப்பது.
பகல் நேரத்தில் தூங்காமல், இரவில் கண் விழிக்காமல் இரவின் முன் யாமத்திலேயே 9-10 மணியளவிலேயே தூங்க ஆரம்பித்து விடியற்காலைலேயே எழுந்து விடுதல்.
மலம், சிறுநீர் கழித்தல், உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றில் கருத்துடன் இருத்தல்.
உடற்பயிற்சியை களைப்பேற்படாத வகையில் விடாமல் தொடர்ந்து செய்து வருதல்.
உரிய நேரத்தில் மிதமாயும், உடலுக்கு நன்மையைத் தரும் உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுதல், உற்சாகம், தைர்யம், அமைதி இவற்றை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுதல் போன்றவை மூலம் நன்மைகள் பல பெறலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோல் பகுதிக்கு வெளி சீதோஷ்ண நிலையைத் தாங்கும் சக்தி அதிகரிக்கின்றது. உடற்பயிற்சி சுவாச உறுப்புகளை வலுப்படுத்துகின்றது. தூக்கத்திலுள்ள கட்டுப்பாடு நரம்புத் தளர்ச்சியை நீக்கி நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. உண்ணும் உணவு தேய்வை ஈடு செய்து நிரப்புகிறது. மனக் களைப்பை நீக்கும் உபாயங்களாக மற்றவை உதவி செய்கின்றன. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான இன்றியமையாத சாதனங்கள் இவை.
அடிக்கடி தும்மல், ஜலதோஷம் போன்றவற்றால் கஷ்டப்படுபவர்கள் முன் கூறிய நல்ல பழக்கங்களைக் கையாள முற்படுவது மிகவும் அவசியம். உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சியவனப்பிராசம், அஸ்வகந்தாதி லேஹ்யம் போன்ற மருந்துகளைச் சாப்பிட்டு உடல் பலத்தை சீராக்கிக் கொள்ள வேண்டும்.
தலைக்கு எண்ணெய் தடவாமல் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதையும், உடலில் எண்ணெய் தேய்க்காமல் வெந்நீரில் குளிப்பதையும் அறவே நிறுத்த வேண்டும். முன் குறிப்பிட்ட தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது முக்கூட்டு எண்ணெய்யை வெந்நீரில் குளிக்கும்போது சற்றுச் சுட வைத்துக் கொள்ளலாம்.
இஞ்சி,மஞ்சள், மிளகு, கொம்பரக்கு இவற்றைப் போட்டுக் காய்ச்சிக் கொள்ளலாம். விற்கப்படும் மருந்துகளில் அஸனவில்வாதி தைலம், மரிசாதி தைலம் போன்றவற்றையும் தினமும் உபயோகிக்கலாம்.
வில்வ இலை, துளசி இலை இவற்றில் இரண்டையுமோ, தனித்தனியாக இடித்துப் பிழிந்த சாறில் சமபாகம் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி கசண்டு மணல் பதத்தில் வரும்போது இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். மூக்கினுள் விட்டு உறிஞ்சித் துப்புவதலால், மூக்கில் ஏற்படும் எரிச்சலும் அடைப்பும் குறையும். சளியால் ஏற்படும் காதடைப்பிலும், சீழிலும் இளஞ்சூடாக்கி காதில் 2-3 சொட்டுகள் விட்டு பஞ்சடைத்துக் கொள்ளலாம். தொண்டைக் கரகரப்பும் டான்ஸில் வீக்கமுள்ளவர் இதையே வாயிலிட்டுக் கொப்பளிக்கலாம்.
எளிதில் ஜலதோஷம் பிடிக்கும் தன்மை, காது மற்றும் மூக்கடைப்பு, காதில் சீழ் முதலிய நோய்கள் அடிக்கடி ஏற்படுபவர்கள் அஸனவில்வாதி தைலம் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர மிக நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.