

இன்னும் இரண்டு நாள்தான் உயிரோடு இருப்பேனாம். டாக்டர் கூறியது அரை மயக்க நிலையிலும் என் காதுகளுக்குக் கேட்கவே செய்தது.
இன்னும் இரண்டே நாட்கள்..
இதில் எனக்கொன்றும் அதிர்ச்சி இல்லை. என்னைப் போன்ற மோசமான பொறுக்கி, திருட்டுப் பயல்களுக்கு, போதைப் பொருள்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களுக்கு இதுதான் இறுதி முடிவு. எனக்கு வயசு 34 தான். இதற்குள் எத்தனை ஆட்டம் ஆடிவிட்டேன். எத்தனை பேர் மனதை சுக்கு நூறாக்கியிருக்கிறேன்.
இந்த ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்து ஒரு வாரம் ஆச்சு. நாளுக்குநாள் நிலைமை படுமோசமாகத்தான் போச்சு. போதைப் பொருள்களும் குடி பழக்கமும் எனது குடல், ஈரல் பாகங்களைச் சீரழித்துவிட்டன. ஒன்றுமே செய்ய முடியாது என்று டாக்டர்கள் பேசிக் கொண்டனர்.
""நர்ஸ்! இந்த பேஷண்ட்டுக்கு விசிட்டர்ஸ் வந்தா நிலைமையைச் சொல்லிடுங்க. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகட்டும். கடைசி நிமிஷங்களையாவது சொந்தக்காரங்களோட கழிக்கட்டும்..''
""இல்ல டாக்டர்.. இவருக்கு விசிட்டர்ஸ் யாரும் வர்றதேயில்லை...''
ஆமாம்.. நான் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் நினைவின்றி மிகவும் சீரியஸôக மயங்கிக் கிடந்தபோது, அக்கம் பக்கத்தில் இருந்த நான்கைந்து பேர் என்னை ஆட்டோவில் கிடத்தி இந்த ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டுப் போனாங்க. அதற்குப் பிறகு நான் கண்விழித்ததே இன்னைக்குக் காலையிலேதான். எனக்குன்னு யார் இருக்கா என்னைப் பார்க்க வர்றதுக்கு. நான் எல்லோரையும் விரோதித்துக் கொண்டவனாயிற்றே..! நினைக்க நினைக்க மனம் கனத்தது.
ஆஸ்பத்திரி ஜன்னல் வழியா பார்க்கும்போது ராயப்பேட்டை பிரிட்ஜ் மேலே வாகனங்கள் சர் சர்ரென வேகமாகப் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. என்னோட நினைவுகளும் சினிமா ஸ்லைடுகள் போல் சரேலென தோன்றி தோன்றி மறையத் தொடங்கின.
********
அப்போது எனக்கு 6 வயசு இருக்கும். புதுப்பேட்டை கூவம் ஆற்றோர குடிசைப் பகுதியில்தான் எங்கள் குடிசையும் இருந்தது. அம்மா சித்ரா தியேட்டர் பக்கத்துல இருக்கற முஸ்லிம் பாய் வீட்டுல வீட்டு வேலை செய்து வந்தாள். நைனாவுக்கு "சைக்கிள் ரிக்ஷா' சவாரி.
பொழுது விடிஞ்சா நைனா என்னைக் கூட்டிக்கிட்டு காசினோ தியேட்டர் பக்கத்தில் உள்ள டீக்கடையில் பன்னும் டீயும் வாங்கித் தருவார்.
ஒரு நாள் அம்மா என்னை "இஸ்கூல்'ல சேர்க்கணும்னு நைனா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தா. நைனா அதுக்கு ஒத்துக்கல. ""அடி போடி..நானே ரிக்ஷா ஓட்டறேன். அவன் இஸ்கூல் போய் படிச்சிட்டு பிளேனா ஓட்டப் போறான்? வர்ர வருமானம் குடிக்கும் குடித்தனத்துக்குமே பத்த மாட்டேன்து.. இதுல இவன எங்க படிக்க வைக்கறது? சிந்தாதிரிபேட்டையில டிங்கர் ஷாப்பில் விட்டு வைச்சா பையன் வேலை கத்துக்குவான். 15 வயசுக்குள்ள சம்பாதிக்கவும் ஆரம்பிச்சுடுவான்'' என்றார்.
""போய்யா கஸ்மாலம்... உனக்கு நல்ல புத்தி இருந்தா இப்படி பேசுவியா..?'' என்று அம்மா சத்தம் போட்டாள். பின்னர் இருவருக்கும் வாய்ச் சண்டை முற்றியது. நைனா, அம்மா மீது கை வைத்தார்.
அதன் பிறகு அவர்களின் சண்டை நாளுக்குநாள் அதிகமானது. முன்பைவிட நைனா அதிகமாகக் குடித்துவிட்டு வந்தார். சில நாட்களாக வீட்டுக்கு வருவதையே குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
அம்மா ஒரு நாள் திடீரென என்னை அழைத்துக்கொண்டு கையில் 2 துணிப் பைகளுடன் கால்நடையாகவே ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பக்கம் வந்தாள். அங்கேயும் கூவம் ஆற்றோரம் ஒரு குடிசைக்குள் நுழைந்தாள்.
""இனி இதுதான் நம்ப வீடு'' என்றாள்.
""ஓ! புது வீடாம்மா?"" என்றேன் உற்சாகமாக.
"ஆமாம்' என்று தலையசைத்தாள் அம்மா.
சற்று நேரத்தில் சிவப்பாக ஒரு ஆள் வந்தான். கரை வேட்டி கட்டி இருந்தான்.
""இனிமே இவர் தான்டா உன் நைனா,'' என்றாள் அம்மா.
""ஓ.. புது வீடு.. புது நைனாவா அம்மா?''
""ஆமாம்'' என்றாள் என்னை நிமிர்ந்து பாக்காமலே.
சில நாட்களில் புது நைனா ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்துவிட்டார். எனக்கு பள்ளிக்கூடமும் பிடிக்கவில்லை, புது நைனாவும் பிடிக்கவில்லை.
பழைய நைனாவை என்னால் மறக்கவும் முடியவில்லை. அவராவது எனக்கு டீயும் பன்னும், சமயத்தில் சம்சாவும் வாங்கித் தருவார். இவர் அப்படி அல்ல.
அம்மாவிடம் நச்சரிக்க ஆரம்பித்தேன்.. ""நைனா எப்பம்மா வருவார்?'' என்று. ""டேய் நைனா நைனான்னு நை.. நைன்னாதே... அவர் ஒண்ணும் உன்னோட நைனா இல்ல..''
""என்னம்மா சொல்றே?''
""உன் நைனா யாருன்னு எனக்கே தெரியாது..''--என்று மேலும் ஒரு குண்டை போட்டாள்.
(ஒரு குழந்தைக்குத் தாய் சொல்லித்தான் அதனோட தந்தையே யாருன்னு தெரியும்னு சொல்லுவாங்க. ஆனா என் தாயோ என் அப்பன் யாருன்னே தெரியலைன்னு சொல்றா.. இது எவ்வளவு கேவலம்?) மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
இனிமேல் நான்கூட உன் அம்மா இல்லன்னு அவ சொன்னாலும் சொல்லிடுவாளோன்னு பயந்து போனேன்.
மறுநாள் பள்ளிக்கூடம் புறப்படுவது போல் புறப்பட்டு கால்போன போக்கில் கிழக்குப் பக்கமாக நேரே நடந்தேன். எழும்பூர் ரயில்நிலையம் வந்தது. நின்றிருந்த ஒரு ரயிலில் உள்ளே ஏறினேன். நடந்துவந்த களைப்பில் ஒரு சீட்டில் படுத்து உறங்கினேன்.
விழுப்புரம் அருகே டிக்கெட் பரிசோதகர் வந்து என்னை விசாரித்து இறக்கிவிட்டார். என்னை போலீஸில் ஒப்படைக்க இருந்தார். நான் கூட்டத்தில் நைஸôக நழுவி வெளியே வந்துவிட்டேன். ஒரு டீக்கடை வாசலில் யாராவது டீயும் பன்னும் வாங்கித் தருவார்களா என ஏங்கினேன். கடைசியில் என் நிலையை உணர்ந்து டீக்கடைக்காரரே என்னைக் கூப்பிட்டு தன் கடையில் வேலைக்கு வைத்துக்கொண்டார்.
அதன்பிறகு நான் பல டீக்கடைகளில் வேலை பார்த்தேன். எந்த வேலையிலும் ஓரிரு மாதங்களுக்கு மேல் என்னால் நிலைக்க முடியவில்லை. யாராவது என்னை அதட்டி, உருட்டி, மிரட்டி வேலை வாங்கினால் எனக்குப் பிடிக்காது. கோபம் வந்துவிடும். உடனே முறைத்துக்கொண்டு வந்துவிடுவேன். அதன்பிறகு ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்தேன். அங்கு மட்டும் சில வருடங்கள் வேலையில் நீடித்தேன். காரணம் அந்த வேலை மட்டுமல்ல.. பெட்ரோல் வாசனையும் எனக்குப் பிடித்துப்போயிற்று.
இத்துடன் பீடி, சிகரெட், கஞ்சா, சாராயப் பழக்கங்களும் என்னை தொற்றிக்கொண்டன.
20 வயதானபோது மீண்டும் சென்னைக்கு வந்தேன். கிரீம்ஸ் ரோடு குடிசைப் பகுதிக்குச் சென்றேன். எனது தாயுடனும் புதிய நைனாவுடனும் சில வாரங்கள் மட்டுமே வசித்த அந்தக் குடிசை வீட்டைத் தேட முயன்றேன். சுத்தமாக அடையாளம் காண முடியவில்லை,
பிழைப்புக்கு வழிதேடி சபையர் தியேட்டர் அருகே உள்ள பெட்ரோல் பங்க், ஸ்பென்சர், ஒயிட்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வேலை கேட்டேன். முகவரியே இல்லாத முரட்டுக் களையும், முரட்டுக்காளை போன்ற தோற்றம் கொண்ட எனக்கு யாருமே வேலை தர துணியவில்லை.
சோர்வுடன் நடந்தேன். சத்யம் திரையரங்கை கடந்து கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு வந்தேன். விஸ்தாரமான அந்த மைதானம் எனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கடக்க உதவியது. மைதானத்தில் கட்டப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கான படிக்கட்டு மாடம் நான் கஞ்சா அடிக்கவும் பீடி, சிகரெட் மற்றும் சாராய வஸ்துகளைப் பயன்படுத்தவும், இரவு பகல் எந்த நேரமும் உறங்கிக் கொள்ளவும் செüகரியமாக இருந்தது.
ஆனால் பிழைப்புக்கு வழி?
மைதானத்தின் மேற்கு, வடக்குப் பகுதிகளில் பெரிய, பெரிய பங்களாக்களும் அடுக்குமாடி வீடுகளுமாக இருந்தன. அந்த வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என் பிழைப்புக்கு வழி தேடிக்கொடுத்தன. பெட்ரோல் பங்க்குகளில் வேலை செய்து பழக்கப்பட்ட எனக்கு அந்த வாகனங்களில் பெட்ரோலை திருடி விற்பது கடினமாக வேலையாகத் தோன்றவில்லை.
இதற்காக போலீஸிலும் சில முறை பிடிபட்டேன். பல முறை சிறை சென்றும் வந்தேன். பின்னர் இதுவே வாழ்க்கை என்றாகிவிட்டது.
இதற்கிடையே பெட்ரோல் திருடுவதற்காக பகலில் ஓர் நாள் அடுக்குமாடி வீடுகளை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும் போதுதான் அந்த வேலைக்காரப் பெண் என்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
நான் அவளைத்தான் நோட்டமிடுகிறேன் என்று அவள் தப்பாக நினைத்துக்கொண்டிருந்தாள். அவளாக என்னைப் பார்த்து சிரித்தாள். இருவரும் பழகத் தொடங்கினோம். வலுக்கட்டாயமாக என்னைக் கல்யாணமும் செய்து கொண்டாள். அதன் பிறகு அவள் குடியிருக்கும் ஆனந்த் திரையரங்கை ஒட்டிய குடிசைப் பகுதியில் நானும் அவளுடன் தங்க ஆரம்பித்தேன் புது மாப்பிள்ளையாக.
கல்யாணம் ஆன சில நாள்களில் அவள் என் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தாள். ""ஒழுங்காக ஏதாவது வேலைக்குப் போகணும், திருட்டுத் தொழில் எல்லாம் விட்டுடணும்''னு.. சொன்னா. எனக்குப் பிடிக்கல..
""அடி போடி!'' என்று சொல்லிவிட்டு வந்த எனக்கு பழையபடி கோபாலபுரம் மைதானமே குடிலாக மாறியது.
அவள் அடிக்கடி வந்து அழுவாள். ஒரு நாள் விழுப்புரத்தில் சொந்த கிராமத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள். சனியன் தொலைந்தது என்று நினைத்திருந்தபோது, ஒரு வருடம் கழித்து 3 மாதக் கைக்குழந்தையோடு வந்தாள்.
""நம்ம குழந்தை'' என்றாள்.
""எப்படி நம்புவது? என் ஆத்தாவாலேயே என் அப்பனை அடையாளம் காட்ட முடியலயே..''-என்றேன் ஏடாகூடமாக.
""ச்சீ.. நீ மனுஷனே இல்ல..''
--என்று காரித்துப்பிவிட்டு போனவள்தான் அப்புறம் அவளைப் பார்க்கவேயில்லை.
அதன்பிறகு மனம்போல வாழ எனக்கு எவ்வித இடையூறும் இருக்கவில்லை. பீடி, சிகரெட், கஞ்சா, டாஸ்மாக், பெட்ரோல், பிரியாணி.. இதுதான் உலகம் என்றிருந்த எனக்கு புது உறவு ஒன்று பூத்தது.
அன்றைக்கு டாஸ்மாக்கில் 2 "கட்டிங்' போட்டுக்கொண்டு ராயப்பேட்டை ஹைரோடில் உள்ள ராவுத்தர் கடையில் பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொண்டு கோபாலபுரம் மைதானத்துக்கு வந்தேன். போதை தலைக்கேறிய நிலையில் பிரியாணி பொட்டலத்தை அலங்கோலமாக பிரித்து அரையும் குறையுமாக சாப்பிட்டுவிட்டு தூர எறிந்தேன்.
அங்கே திரிந்துக்கொண்டிருந்த ஒரு வெள்ளை நாய்க்குட்டி ஓடிவந்து பொட்டலத்தை ஆவலுடன் முகர்ந்து பார்த்து அதில் இருந்த பிரியாணியை அவசர அவசரமாகச் சாப்பிட்டது. அதன்பின் வாலை ஆட்டிக்கொண்டு என்னை நோக்கி வந்தது. நன்றியோடு என்னைப் பார்த்தது. நான் அதனை தட்டிக்கொடுத்தேன். அதன்பிறகு அது என்னோடு ஒட்டிக்கொண்டது.
நான் எங்கு சென்றாலும் என்னைப் பின் தொடர்ந்து வந்தது. அதற்கு "டாமி' என்று பெயர் வைத்து அன்பாக அழைத்து வந்தேன்.
சில நேரங்களில் 13-ம் எண் பஸ்ஸில் திருவல்லிக்கேணிக்குப் போவேன். நான் பஸ் ஏறியதும் டாமியும் கொஞ்ச நேரம் லாயிட்ஸ் ரோடு வரை பஸ் பின்னாலேயே ஓடி வரும். பிறகு திரும்பிப் போய்விடும். இப்படியே சில வருடங்கள் ஓடிவிட்டன.
கடந்த வாரம் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து என்னை சேர்த்தபோது கூட டாமி என் பின்னாலேயே ஓடி வந்திருக்கும். இப்போதுகூட ஆஸ்பத்திரி வாசலில் எனக்காக நிச்சயம் காத்திருக்கும்.
பழைய நினைவுகளின் ஸ்லைடுகள் தீர்ந்த நிலையில் சுவர் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி அதிகாலை 5. இன்னும் ஒன்றரை நாளில் என் உயிர்பிரிந்துவிடும். அதற்குள் இந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி, டாமியைப் பார்க்க வேண்டும்.
மெல்ல எழுந்தேன். டாய்லெட் போவது போல கிளம்பி ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்துவிட்டேன். வார்டு பாய்கள் எவரும் கவனிக்கவில்லை.
நான் நினைத்ததுபோலவே ஆஸ்பத்திரி வெளி கேட் அருகே டாமி ஏக்கத்துடன் உட்கார்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் உயிர்வந்தது போல எழுந்து நின்றது. நான் தடுமாறியபடியே நடந்து அதனருகே சென்றேன். டாமி ஒருவித முனகல் குரலில் என்னைச் சுற்றி சுற்றி வந்தது. தன் நாவால் என் பாதங்களை நக்கியது. அது எச்சில் அல்ல. அன்பின் ஊற்று.
என்னால் சரியாக நடக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி சாலையைக் கடந்து எதிர்ப்புறம் சென்றேன். பிரிட்ஜின் கீழே உள்ள ஒரு தூணில் சாய்ந்தேன். டாமியும் என் அருகே அமர்ந்துகொண்டது. என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.
நான் வானத்தைப் பார்த்து புலம்ப ஆரம்பிச்சேன்.. அதைத் தவிர வேற வழி எனக்குத் தெரியல்ல.
""இறைவா..! நான் உன்னை இதுவரையும் நினைச்சதில்லை.. உன் தயவையும் நாடினதில்ல.. எதுக்காகவும் அழைச்சதுமில்லை.. அதனால என்ன பெயர் சொல்லி உன்ன கூப்பிட்றதுன்னும் புரியல்ல. ஆனா ஒண்ணு, இந்த டாமிக்கு என்னைவிட்டால் வேறு யாரும் இல்லை. இந்த வாயில்லா ஜீவனுக்காகவாவது நான் உயிருடன் இருக்க வேண்டும். ப்ளீஸ்..தயவு காட்டு... கருணை காட்டு...''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.