சிறுகதை: கொடுத்து வைத்தவன்

'டேய்.. கந்தா! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.. முதலாளி வீட்ல இருந்துக்கிட்டு உயிர வாங்குவாரு. இதைப் புடுங்கி வை.. அதை நட்டு வை.. ஒட்டி வை.. கட்டி வையும்பாரு..' தோட்டக்காரர் சோமையா சமையல
சிறுகதை: கொடுத்து வைத்தவன்
Updated on
3 min read

 ""டேய்.. கந்தா! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.. முதலாளி வீட்ல இருந்துக்கிட்டு உயிர வாங்குவாரு. இதைப் புடுங்கி வை.. அதை நட்டு வை.. ஒட்டி வை.. கட்டி வையும்பாரு..''

 தோட்டக்காரர் சோமையா சமையல் கந்தசாமியிடம் புலம்பிக் கிட்டிருந்தார்.

 ""ஆமா! என்னய மட்டும் விட்டுவைப்பாரா என்ன? ஆடு, கோழி, மீன், இறால், நண்டுன்னு சகல ஜீவராசிகளையும் வாங்கி வந்து ஆக்கச் சொல்லி பாடாபடுத்துவாரே..''

 கந்தசாமி பதிலுக்குப் புலம்பினான்.

 ஆனால் எனக்கு மட்டும் குஷி. ஏன்னா லீவு நாள்ல முதலாளி தன் குட்டிப் பெண் ஷீபா, மனைவி ஜான்சியோட என்னையும் வெளியே கூட்டிக்கிட்டுப் போவார். எனக்கு அந்த வீட்ல பெரிசா வேலை எதுவும் கிடையாது. வீட்டைச் சுத்திச் சுத்தி வருவேன். எனக்கு நினைவு தெரிந்த நாள்ல இருந்து இங்கேதான் இருக்கேன்.

 மத்த வேலக்காரங்கள விரட்டற மாதிரி முதலாளி என்ன விரட்டி வேலை வாங்க மாட்டாரு.. அன்பா கருப்பான்னு கூப்பிடுவாரு.. ஏன்னா என் நிறம் அப்படி.

 அதுமட்டுமல்ல.. முதலாளி அவங்க சொந்தக்காரங்க, நண்பர்கள் கிட்டயும் "எனக்கு இவன் புள்ள மாதிரின்னு' பெருமையா அறிமுகப்படுத்துவாரு. புள்ளன்னு சொல்றதுனால பிற்காலத்துல எனக்கு அவர் சொத்துல கொஞ்சம் எழுதி வைப்பாரோ என்னவோ? இருந்தாலும் நமக்கு எதுக்குங்க அதெல்லாம்? எனக்கும் எவ்வளவோ ஆசைகள் இருக்கு. ஏகப்பட்ட மனக்குறைகள் கிடக்கு. எனக்கு இந்த பங்களாவில் வேலை பெரிசா எதுவும் இல்லன்னாலும் அடிப்படை சுதந்திரம் ஒண்ணும் கிடையாது.

 இஷ்டம்போல பங்களாவை விட்டு வெளியே போய்வர முடியாது. ஏன்.. சாப்பாடு விஷயத்துல கூட நான் நினைத்ததை சாப்பிட முடியாது. முதலாளியோ அல்வா முதல் அயிர மீன் வரை வக்கணையாகச் சாப்பிடுவாரு. எனக்கு மட்டும் இனிப்பை கண்லயே காட்ட மாட்டாரு. அதே மாதிரி கருவாடு, நெத்திலி அயிட்டங்களையும் தரக் கூடாதுன்னு கந்தசாமிகிட்ட உத்தரவுப் போட்டுட்டாரு. பிற வேலைக்காரங்க சாப்பிடுறதுகூட எனக்குக் கிடைக்கிறதில்ல.

 எனக்கென்ன அப்படியா வயசாகிப் போச்சு..உப்பு, சர்க்கரை எல்லாம் ஒதுக்கிடறதுக்கு? சாப்பாட்டை விடுங்க..நானும் வாலிபப் பருவத்துல தான இருக்கேன்றது முதலாளிக்கு ஏன் தெரியல? என் உணர்வுகள ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்றார்?

 நான் காலாற சுதந்திரமா வெளியே போய் வர விடமாட்டேங்கறாரு. எப்பப் பார்த்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கணுமாம். காலைலயும் இரவும் அவர் வெளியே போகும்போது அவரோட போகணுமாம். எங்கேயும் தனியாகப் போகக் கூடாதாம். என் வயசுள்ள பசங்களைப் பாக்கறேன். அவங்க எல்லாம் தனக்குன்னு ஒரு துணையைத் தேடிக்கிட்டு புள்ள குட்டிகளோட சுதந்திரமாக இருக்காங்க..நான் மட்டும் இங்க தனி மரமாக கிடக்கறேன்.

 எதிர்வீட்டில் என்னைப் போலவே வேலை செய்கிற ராணி இருக்கிறாள். அவளும் என்னைப் பார்க்கும்போது சந்தோஷப்படுவது அவள் கண்ணில் தெரியும். நான் பதிலுக்கு ஏதாவது "சிக்னல்' தருவதற்குள் முதலாளி வந்துவிடுவார். அப்புறம் காதலை எங்கே டெவலப் பண்ணுவதாம்?

 தங்கக் கூண்டில் சிறைப்பட்ட கிளி போல நான் கிடக்கறேன். ஒரு நாள் வெறுத்துப்போய் பங்களாவை விட்டு வெளியேற முடிவு செய்தேன். நடுராத்திரியானதும் காம்பவுண்ட் சுவரை ஒரே தாண்டாகத் தாண்டிக் குதித்து வெளியே போய்விட்டேன். எங்க தெருவைத் தாண்டி நாற்சந்திக்கு வந்தேன். அங்கே என் வயதையொத்த நாலைந்து பசங்க பிளாட்பாரத்துல அந்த நடுராத்திரியிலும் நின்றிருந்தாங்க.

 என்னைப் பார்த்ததும் திடீரென என்னை நோக்கி படையெடுத்து வருவதுபோல் வந்தனர்.

 ""எங்கேயிருந்து வர்ற? எங்கே போற..இது எங்க ஏரியா..நீ எங்களை தாண்டி போக முடியாது..மரியாதையா வந்த வழியே திரும்பிப் போய்டு..''

 காரணமில்லாமல் ஆளாளுக்கு மிரட்ட ஆரம்பித்தனர்.

 எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ரொம்ப பயமாகவும் இருந்தது. குலை நடுங்கியது. கால்கள் பின்னிக்கொண்டன. அப்படியே திரும்பி நடந்தேன். முதலில் மெதுவாக..பின்னர் வேகமாக ஓடினேன். ஒரே மூச்சில் பங்களாவை அடைந்தேன். காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்தேன். எனது அறைக்குள் போய் சுருண்டு படுத்துக்கொண்டேன் எதுவும் நடக்காததுபோல.

 இருப்பினும் வெளியே சந்தித்த அதிர்ச்சி அனுபவத்தால் ஏற்பட்ட நடுக்கம் குறைய வெகு நேரமாயிற்று. வீட்லதான் நம்மள அடிமையாக நடத்துறாங்கன்னா...வெளியிலுமா அப்படி நடத்துவாங்க? அந்த ரெüடிப் பசங்களுக்கு என்னைப் பார்த்தா இளக்காரமா இருக்கும் போல.

 அதுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே போகணும்கிற ஆசையை விட்டுட்டேன். ஏதோ விதிவழி வாழ்க்கைன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.

 இதோ முதலாளி, தனது மனைவி, சுட்டிப்பெண் ஷீபாவோட கார் அருகே போகிறார். கதவைத் திறந்தவாறே என்னைப் பார்த்து "நீயும் வர்றியா..' என்கிறார். அதற்காகவே காத்திருந்த நானும் போய் பின் சீட்டில் அமர்ந்துகொள்கிறேன். முன்புறம் முதலாளி அம்மா. பின்புறத்தில் ஷீபா. ஷீபாவுக்குப் பக்கத்தில் அவளை ஒட்டிக் கொண்டு உட்கார்ந்து வருவது எனக்குப் பிடிக்கும்.

 அவளுக்கு என்னோட விளையாடுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அவ சாப்பிட வைத்திருக்கும் பிஸ்கெட், சாக்லெட் எல்லாம் எனக்கும் தருவாள். அவ அன்பை என்னால் மீறமுடியாது. என்னோட சுவாரஸ்யமற்ற வாழ்க்கையில் இதுதான் எனக்கு ஒரே ஆறுதல்.

 கார் ஒரு மேம்பாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பீச்சுக்குத்தான் போவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மரங்கள் அணி வகுத்து நிற்கும் கடைகள் நிறைந்த அந்த சாலையில் கார் நின்றது. அந்த இடத்தை பாண்டி பஜார் என்று பேசிக்கொண்டார்கள்.

 காரை பார்க் செய்துவிட்டு முதலாளி தன் மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு அருகே இருந்த பிரமாண்ட கடைக்குள் நுழைந்தார்.

 என்னைக் கூப்பிடவில்லை. வீட்டில் வேலை செய்கிற என்னை ஷாப்பிங்கிற்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா? காருக்குக் காவலாய் காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்தேன். அவர்கள் வரும்வரை வேடிக்கைப் பார்த்து பொழுதைக் கழிக்க வேண்டியதுதான். வெறுப்பாக இருந்தது.

 பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். அங்கே ஒரு காரின்மீது புஸý புஸýவென நாய்க்குட்டி, கரடிக்குட்டி பொம்மைகள் விதவிதமான கலர்களில் மிகவும் தத்ரூபமாக வீற்றிருந்தன. பல பேர் அந்த பொம்மைகளை வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றனர். ஒரு சிலர் விலை கேட்கவும் செய்தனர். இந்நிலையில் திடீரென மழை தூற ஆரம்பித்தது.

 பொம்மை விற்பவர்கள் அவசர அவசரமாக மிகப் பெரிய பாலித்தீன் பைகளில் பொம்மையைத் திணித்துக் கொண்டிருந்தனர். அந்த வியாபாரிகளில் ஒருவன் காரில் உட்கார்ந்திருக்கும் என்னை அடிக்கடி பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

 அவன் மற்றவனிடம் சொன்னான்: ""நாய் பொம்மை விற்கும் நம்ம பொழப்பும் நாய் பொழப்புத்தாம்ப்பா. மழை வேறு வந்திடிச்சி. இனி ஒண்ணும் போணி ஆகாது. ஆனால் அதோ பார் அந்தக் கார்ல உக்காந்திருக்கிறத...கார்லயே சொகுசா வந்திட்டு...கார்லயே சொகுசாப் போறதுக்கு நம்மால முடியுமா? எதுக்கும் போன ஜென்மத்துல புண்ணியம் செஞ்சிருக்கணும்..எல்லாத்துக்கும் குடுப்பனை வேணும்..ம்..ஹூம்..''

 அவன் இப்ப நேரடியாகவே என்னைப் பார்த்து பொருமினான்.

 எனக்கு ஆத்திரமாக வந்தது.

 என் கஷ்டம் இவனுக்கு என்ன தெரியப் போகுது? தெரு நாய்க்கு இருக்கிற சுதந்திரம் கூட எனக்கு இல்லைன்னு இவனுக்கு என்ன தெரியும்? பேசறான் பாரு மடையனாட்டம்..''

 அவனைக் கோபத்தோடு முறைத்தேன். உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது. ""என்ன முறைக்கிறே?'' என்று கேட்டு அடிக்க வந்துவிட்டால்?

 அதற்குள் முதலாளி தன் மனைவி, குட்டிப் பெண்ணோட கை நிறைய பைகளோட கார் அருகே வந்துகொண்டிருந்தார்.

 எனது ஆத்திரம் அடங்கவில்லை. நான் முறைப்பதை நிறுத்தவில்லை.

 ""என்னடா கருப்பா? நாங்க லேட்டா வந்துட்டம்னு உனக்கு கோபமா? கூல் டவுன்..கூல் டவுன்..'' என்றார் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே.

 நான் என்னத்தைச் சொல்ல முடியும்? அவரையா நான் முறைத்தேன்?

 என் வெறுப்பையும் சலிப்பையும் அவரிடம் வெளிக்காட்டாமல் போனால் போகிறதென்று வாலை ஆட்டி வைத்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com