

இனிப்புச் சுவைக்கு இன்றியமையாத ஒன்று தேன். மருத்துவம், உடல் ஆரோக்கியம், எடை குறைப்பு என பல வகைகளில் நமக்கு நன்மை புரிகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனைக் கொடுக்கும் தேனீ வளர்ப்பு தற்போது மலைவாழ் கிராமங்களின் வாழ்வாதாரமாக மாறி வருகிறது. இதற்கு உதவும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்து ஏராளமானோருக்கு பயிற்சி அளித்து வருகிறார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:
தேனீ பண்ணை வைக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது?
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள செட்டித் தோட்டம் புதூர் என் கிராமம். பெயருக்கேற்ப இங்கு தோட்டம் அதிகம். பத்து வயதிலேயே தேனீ வளர்ப்பு பற்றி என் உறவுக்காரர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் அப்போதிருந்தே தோட்டத்தில் தேனீ தேடும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
அண்மைக்காலமாக தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளதே? அது ஏன்?
நகரமயமாக்கல்தான் இதற்குக் காரணம். விவசாயம் செழிக்காததால் எல்லா விளைநிலங்களையும் விற்கத் தொடங்கிவிட்டார்கள். இதைப்போல காடுகளை அழித்து பிளாட் போட்டு விற்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் தொன்று தொட்டு லாபம் ஈட்டும் தொழிலாக இருந்த தேனீ வளர்ப்பை பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. தேனீக்கள் இல்லை என்றால் உலகமே இயங்காது.
தேனீக்களுக்கும் உலகம் இயங்குவதற்கும் என்ன தொடர்பு?
பெரும்பாலான உணவு வகைகள் குறிப்பாக விவசாயம், காய்கறி உள்ளிட்டவை செழிக்கிறதுக்கு தேனீக்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. 75 சதவித மகரந்த சேர்க்கை தேனீக்கள் மூலம்தான் நடக்கிறது. அதனால்தான் தேனீக்கள் அழிந்தால் அடுத்த 4 ஆண்டுகளில் உலகமே அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
தேனீ என்று சொன்னாலே அதன் கொட்டும் குணம்தான் ஞாபகத்திற்கு வரும். எல்லாத் தேனீயுமே கொட்டுமா?
தேனீக்கள் மொத்தம் 5 வகை. 1.கொம்புத்தேனீ: வெளிச்சத்தில், கிளைகளில் ஒத்த அடையாக கூடு கட்டும். 2.மலைத்தேனீ: பெரிய பெரிய கட்டடத்தில் கூடு கட்டும். மூர்க்கத்தனமாகக் கொட்டும். அப்படிக் கொட்டி வலி தாங்க முடியாமல், இதயம் மற்றும் கிட்னி கோளாறு ஏற்பட்டு இறந்தவர்களும் உண்டு. 3. அடுக்குத் தேனீ: இதற்கு பல பெயர்கள் உண்டு. இவைதான் நம் நாட்டு வனச்சூழ்நிலைக்கு ஏற்றது. அதனால் இவற்றை இந்தியத் தேனீ என்றும் சொல்வார்கள். பார்க்க சின்னதாகத்தான் இருக்கும். இருட்டில் மரப்பொந்துகளில் பல அடைகளாக அடுக்கடுக்காக வாழும். அதனால் அடுக்குத் தேனீ என்றும் அழைக்கப்படுவது உண்டு. 4. இத்தாலித் தேனீ: பெரிசு பெரிசாக கூடு கட்டும். நிறைய தேன் இருக்கும். 5. கொசுத்தேனீ: சின்னதாக கூடு இருக்கும். வீட்டில் பானையில்கூட கூடு கட்டும். இதைத்தவிர ஓட்டை, பொந்துகளிலும் கூடு கட்டும்.
எல்லாத் தேனீக்களும் கொட்டும். அதில் மலைத்தேனீ கொட்டினால் விஷம் தலைக்கு ஏறும். அது ஆபத்தானது. மற்ற தேனீக்கள் கொட்டினால் விரைவில் குணமாகிவிடும். இவை அனைத்துக்குமே பின்புறம் கொடுக்கு உண்டு. ஆனால் கொசுத்தேனீ கொட்டாது. கடிக்க மட்டும் செய்யும்.
தேனீக்கள் பற்றி சொல்லும்போது அல்லி ராஜ்ஜியம் என்று சொல்வார்களே... என்ன அது?
தேனீக்களிடம் சுவாரஸ்யமான தகவல்கள் நிறையவே இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. பொதுவாக ஒரு கூட்டில் ஒரு ராணித் தேனீ, நூறு ஆண் தேனீக்கள் மற்றும் 20 ஆயிரம் பணி தேனீக்கள் முக்கியமாக இடம்பெறும். இதில் பணி தேனீக்கள் என்பது பருவமடையாத பெண் தேனீக்கள். ஒரு கூட்டுல ஒரு ராணிதான் இருக்க வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத சட்டம். எனவே, இரண்டு ராணி தோன்றிவிட்டால் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை மூளும். ஒன்று மற்றொன்றைக் கொன்றுவிட்டு தனி ராஜ்ஜியம் நடத்தும். இதைத்தான் அல்லி ராஜ்ஜியம் என்கிறார்கள்.
ரீங்காரம் இடும் தேனீக்களின் மொழியைப் பற்றி சொல்லுங்கள்? கூடு அமைக்கும் இடத்தை எப்படித் தேர்வு செய்கிறது?
அவற்றுக்கென ஒரு நடனமொழி உண்டு. வயிற்றின் அசைவைக் கொண்டு ராணித் தேனீ மற்ற தேனீக்களை கூடு கட்ட உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லும். சூரியன் உதிக்கும் திசையில் 90 டிகிரிக்குச் செங்குத்தாக வட்டம், நீள்வட்டம், அரைவட்டம் என வட்டம்போட்டு கூடு கட்டும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும்.
தேனீ கொட்டினால் நச்சுத்தன்மை உடலில் பரவாமல் எப்படித் தடுப்பது?
தேனீ கொட்டியவுடன் அதனுடைய முள் மற்றும் விஷத்தன்மை கொண்ட குழலை நம் உடலில் விட்டுச் செல்கிறது. அதிலிருந்து விஷம் நம் உடல் முழுவதும் பரவும். அதனால் கொட்டிய இடத்தில் உள்ள முள் மற்றும் விஷக் குழலை சுரண்டி பக்குவமாக வெளியே எடுத்து விடவேண்டும். பிறகு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இந்த விஷத்தால் இறந்துவிடக்கூடிய ஆபத்தும் உண்டு.
நீங்கள் அளிக்கும் பயிற்சி குறித்து?
வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில்தான் இந்தப் பயிற்சியை அளித்து வருகிறேன். ஒரே நாள்தான் பயிற்சி. அதில் 4 மணிநேரம் செய்முறை பயிற்சி கொடுக்கிறோம். வனத்துறையினரும் நானும் சேர்ந்து "இந்தியத் தேனீக்களும் வளர்ப்பு முறைகளும்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளோம். அந்தப் புத்தகத்தை அளித்து அதன் சாராம்சம் குறித்து விளக்குவோம். பிறகு மரங்களில் பெட்டி வைப்பது குறித்து நுட்பங்களை சொல்லித் தருவோம். கட்டணம் நூறு ரூபாய் மட்டுமே. இதைத்தவிர பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாகவே பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை நீலகிரி மலை, கொல்லி மலை, ஏலகிரி மலை உள்ளிட்ட பல மலைப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஆடு, மாடு வளர்ப்பை ஒப்பிடும்போது தீவனம், பராமரிப்பு செலவெல்லாம் இதற்கு இல்லை. ஒரே முறைதான் முதலீடு. 15 ஆயிரம் செலவு செய்து 10 பெட்டியை வைத்துக் கொண்டால் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
தேனீயை கொட்டவைத்து தோல் வியாதிக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அது சாத்தியமா?
வெளிநாட்டில் இந்தச் சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்தியாவிலேயும் இம்முறையைக் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சிகளை செய்து வருகிறேன். இதைத் தவிர ராணித் தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் ராயல்ஜெல்லி, ஒரு கிலோ பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனைக் கொண்டு உருவாக்கப்படும் மாத்திரைகள், மலட்டுத் தன்மையைப் போக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. இதைப்போல் தேனீ பெட்டிகளில் சேகரிக்கும் மகரந்தம் ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனால் தேனீ வளர்ப்பு கொஞ்சம் மூலதனம் போட்டு, அதிக லாபம் ஈட்டும் தொழில் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.