அக்கரைச் சீமை: ஒரு பயணத்துக்கு ஒரு மனைவி!

அஸிப் அலி ஸர்தாரி பாகிஸ்தான் அதிபராக ஆன கணத்திலிருந்து இப்போது வரை அவர் தொட்டதெல்லாம் பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஸ்வாட் பகுதியில் தீவிரவாத தாலிபான்களுக்குக் கதவை ஒருவிதத்தி

அஸிப் அலி ஸர்தாரி பாகிஸ்தான் அதிபராக ஆன கணத்திலிருந்து இப்போது வரை அவர் தொட்டதெல்லாம் பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஸ்வாட் பகுதியில் தீவிரவாத தாலிபான்களுக்குக் கதவை ஒருவிதத்தில் திறந்து விட்டவரும் ஸர்தாரிதான். இப்போது திண்டாடுகிறவரும் அவரேதான்.

"இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குகிறவர்கள் தாலிபான்கள்' என்று எச்சரிக்கை மணியைப் பல நாடுகள் பாகிஸ்தான் காதை நோக்கி அடித்தன.

அவர்களை அடக்கலாம் என்று தொடங்கினால் அவர்கள் "பெப்பே' காட்டுகிறார்கள்.

ஸ்வாட் பாதுகாப்புப் படையினருக்கும் தாலிபான்களுக்கும் கிட்டத்தட்ட போர் தொடங்கியிருக்கிறது. மக்கள் பாவம், கொத்துக் கொத்தாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாகிவிடும் அபாயம் தெரிகிறது. "நீங்கள் போவதுதான் உத்தமம்.

நாங்கள் பொதுமக்களுக்குச் சேதம் விளைவிக்காமல் தாலிபான்களை நெருங்க முடியும்' என்கிறது பாதுகாப்புப் படை. தாலிபான்களோ தெருக்களில் கட்டடங்களின் மீது ஏறி நின்று கொண்டு, வெளியேறும் மக்களை ஆயுதம் காட்டி மிரட்டுகிறார்கள். போதாததற்கு பாகிஸ்தானின் மற்ற பகுதிகளோடு ஸ்வாட்டை இணைக்கும் ஒரு முக்கிய பாலத்தையும் தகர்த்துவிட்டார்கள்.

இவ்வளவும் நடந்தபோது ஸர்தாரி வாஷிங்டனில் ஒபாமாவுக்கு "குட்மார்னிங்' சொல்லிக் கொண்டிருந்தார். "இந்தியா தன் எல்லையில் படைகளைக் குறைத்துக் கொண்டால் நாங்களும் குறைத்துக் கொண்டு அந்தச் சக்தியை எங்கள் நாட்டில் தீவிரவாதத்தை அடக்குவதில் செலவழிப்போம்.

இதற்கு இந்தியாவைக் கட்டாயப்படுத்துங்கள், மிஸ்டர் ஒபாமா' என்று சம்பந்தமேயில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். ஒபாமா இதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

இதற்கிடையில் பாகிஸ்தானிலிருந்து அல் கொய்தா அமைப்பு இயங்குவதை தடை செய்தல், பாகிஸ்தான் என்ற வேடந்தாங்கலிலிருந்து தாலிபான் பறவைகளை வெளியேற்றுதல், அரசியல், நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படை தலையிடாததை உறுதி செய்தல் ஆகிய மூன்றையும் பாகிஸ்தான் செய்தால் பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதி உதவியை மூன்று மடங்காக உயர்த்தலாம் என்று ஜான் கெர்ரி, ரிச்சர்ட் லூகர் என்ற இரண்டு செனட்டர்கள் மசோதா தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அந்த மூன்றையும் பாகிஸ்தானில் செய்ய முடியாது என்ற தைரியமோ?

உலகிலேயே மிகவும் வயதில் குறைந்த ஜனநாயகக் குழந்தை நேபாளம். இந்த மாதம் அந்தக் குழந்தைக்கு ஒரு வருடம் முடிகிறது.

மன்னராட்சி முடிவடைந்து அல்லது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மக்களாட்சி அங்கே 2008 மே மாதம் மலர்ந்தது.

முதல் ஜனநாயகத் தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட்டணியில் ஆட்சி அமைத்தது. பிரஸண்டா பிரதமரானார். நாட்டின் ஜனாதிபதியாக ராம்பரன் யாதவ்.

ஒரு வருடத்துக்குள் ஜனாதிபதியும் பிரதமரும் முட்டி மோதிக் கொண்டார்கள். சில காரணங்களுக்காக நேபாள ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ருக்மாங்குத் கடாவால் - ஐ பதவியிலிருந்து இறக்கினார் பிரதமர். அதை ஏற்காமல் எதிர்ப்புத் தெரிவித்தார் கடாவால். அதிபரோ தளபதிக்கு ஆதரவு அளித்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார்.

பிரஸண்டாவுக்கு எதிர்ப்பு வலுத்தது. தன் பதவியை ராஜினாமா செய்தார் பிரஸண்டா.

இதுதான் நேபாளப் பிரச்னை இம்மாதம் 10 ஆம் தேதிவரை. நீங்கள் இதைப் படிப்பதற்குள் சிக்கல் அதிகமாகியிருக்கலாம். அல்லது தீர்ந்ததும் இருக்கலாம். பிரஸண்டா பற்றிய சில விவரங்கள் சுவையானவை.

அவரது உண்மையான பெயர் புஷ்ப கமல் தஹால். புஷ்ப கமல் என்றால் தாமரை. அவரது மென்மையான இயல்புகளைக் கண்டு ஓர் ஆசிரியர் வைத்த பெயர் அது. ஆனால் இந்த மென்மையான தாமரைதான் 2006 வரை நேபாளத்தில் உள்நாட்டுப் போரை நடத்தியது.

இவர் நேரடியாகப் போரிடவில்லை என்றாலும் பின்னணி மூளையாகச் செயல்பட்டார். பதின்மூன்றாயிரம் பேர் செத்தார்கள். பின்னாளில் அந்த வேகம் குறைந்து, "நேபாளத்தை ஆசியாவின் ஸ்விட்சர்லாந்து ஆக்குவேன்' என்று அறிவித்தார்.

தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள். பதவிக்கு வந்தார். இப்போது பதவியில் இல்லை.

புஷ்ப கமலுக்கு வந்த செல்லப் பெயர்தான் பிரஸண்டா. பிரஸண்டா என்றால் என்ன அர்த்தம்? "மூர்க்கம்' என்று அர்த்தம். ஆங்கிலத்தில் ‘ஊண்ங்ழ்ஸ்ரீங்’ !

ஃபிரான்ஸ் நாட்டு அரசியல் பரமபதத்தில் அதிபர் சர்கோஸியின் செல்வாக்கு பாம்பு இறங்கிக் கொண்டே போகிறது. ஒன்று மாற்றி ஒன்று அவரை இறுக்குகிறது. சில அவராகச் சம்பாதித்துக் கொள்வது. சில அவரது மனைவி கார்லா என்ற ரூபத்தில் வருவது. நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க எவ்வளவோ அறிவுப்பூர்வமான யுக்திகளைக் கையாளலாம். ஆனால் பிரெஞ்ச் அரசின் யுக்தி என்ன தெரியுமா?

கார்லாவின் அபிமானிகளுக்கு அவருடைய பாப் பாடல்கள் சி.டி. இலவசமாக வினியோகிக்கப்படும். ஒவ்வொரு சி.டி.யுடனும் ஒயின், சீஸ் வாங்கக் கூடிய கூப்பன்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

பிரான்ஸ் தயாரிப்புகளை உலகெங்கும் விளம்பரப்படுத்துவது இந்த யுக்தியின் நோக்கமாம்.

  மக்களிடேயே இது பெரும் கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறது. "பிரான்ஸ் தயாரிப்பை விளம்பரப்படுத்தவா இது? இல்லையில்லை, கார்லாவை விளம்பரப்படுத்த' என்கிறார்கள் பொதுமக்கள்.

இதற்காக "சோபெக்ஸô' என்ற ஏஜென்சிக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பவுண்ட் வரை பணம் தரப்பட்டிருக்கிறது. யாருடைய பணம்? எங்கள் வரிப்பணம் ஐயா...வரிப்பணம்' என்று கொதிக்கிறார்கள் வரி செலுத்துவோர்.

இப்படியே போனால் நாளை மற்ற பிரெஞ்ச் தொழில்களுக்கும் கார்லாவின் பெயர் பயன்படுத்தப்படும். ஃபிரெஞ்ச் பேஷன் உடைகள் என்று கார்லா "போஸ்' கொடுப்பார். இதனால் பிரான்ஸýக்கு லாபம் உண்டோ, இல்லையோ, கார்லாவுக்கு புதுப்புது டிûஸன்களில் நிறைய உடைகள் சேரும்.

அது அவருக்கு லாபம் என்று சில அரசியல் விமரிசகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.  பிரான்ஸ் வேளாண் அமைச்சகம் மூலம் கார்லாவின் சி.டி.களை இலவசமாகப் பெற 19 நாடுகளிலிருந்து குறைந்தபட்சம் 14000 பேர் விண்ணபித்திருக்கிறார்களாம்.

ஒரு வழியாகத் தென் ஆப்ரிக்காவின் அதிபராக ஜேகப் ஜுமா பதவி ஏற்றுக் கொண்டு விட்டார்.

உலகெங்கிலுமிருந்து அழைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட ஐயாயிரம் பேருக்கும் மேலான வி.ஐ.பி.க்கள். இது போதாதென்று கிட்டத்தட்ட முப்பதாயிரம் பொதுமக்கள் அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்கள். பிரிட்டோரியா நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

ஜுமாவைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும். தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர்களான நெல்சன் மண்டேலா, எம்பெக்கி போன்றவர்களோடு ஒப்பிடும்போது ஜுமா அவ்வளவு கண்ணியமான தலைவராக மதிப்பெண் பெற மாட்டார் என்பதுதான் அந்நாட்டு நோக்கர்களின் கணிப்பு.

மண்டேலா மீது மக்கள் ஒருவிதமான பாசமிகு பக்தியே கொண்டிருந்தார்கள். எம்பெக்கியின் நடை, உடை, பாவனைகள் போன்றவற்றில் மேற்கத்தியச் சாயல் அதிகமாகவும், தன்னைக் கம்பீரமாக வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமும் காணப்பட்டன. ஆனால் ஜுமா முழுக்க முழுக்க லோக்கல் ஆள்.

இன்னொரு விஷயம் ஜுமாவுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி சிஸகேலாவுக்கு வயது 68. கணவரை விட ஒரு வயது மூத்தவர். இரண்டாவது மனைவியின் பெயர் நோம்ப்பு எமலிலோ. வயது 35. மூன்றாவதாக ஓர் இளம்பெண். இவருக்கு ஜுமா ஏராளமாக "லோபோலா' கொடுத்திருப்பதாகத் தகவல். லோபோலா என்றால் வரதட்சிணை. இங்கே மாப்பிள்ளைக்குத் தருவது போல அங்கே பெண்ணுக்கு மாப்பிள்ளை தர வேண்டும்.

இந்த மூன்று பேரையும் தன் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார் ஜுமா.

பொதுவாக ஒரு நாட்டின் அதிபருடைய மனைவியை நாட்டின் முதல் பெண்மணி என்பார்கள். ஃபர்ஸ்ட் லேடி! இப்போது தென் ஆப்ரிக்காவுக்கு மூன்று ஃப்ர்ஸ்ட் லேடிஸ்.

அதுசரி, அரசு முறை வெளிநாட்டுப் பயணங்களின் போது எந்த ஃபர்ஸ்ட் லேடியை தன்னுடன் அழைத்துப் போவார் ஜுமா?

ஒரு பயணத்துக்கு ஒருவர் என்ற ஊகமும் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com