சேவை: ஆறு ரூபாய் பாலிஸி!

செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பாளர்களும் அதன் தொண்டர்களும் ஆற்றும் பணிகளை அரசும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் பாராட்டுவது எப்போதும் நடக்கும் நிகழ்வு. கடந்த ஆண்டில் தமிழகத்தின் சிறந்த செஞ்சிலுவைச் சாதனையா
சேவை: ஆறு ரூபாய் பாலிஸி!

செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பாளர்களும் அதன் தொண்டர்களும் ஆற்றும் பணிகளை அரசும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் பாராட்டுவது எப்போதும் நடக்கும் நிகழ்வு. கடந்த ஆண்டில் தமிழகத்தின் சிறந்த செஞ்சிலுவைச் சாதனையாளர் விருதைப் பெற்றிருப்பவர் தஞ்சை மாவட்டச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கெüரவச் செயலர் கோவி. ராஜமகேந்திரன். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், ரத்த வங்கியின் பயன்கள் குறித்தும், மாணவர் காப்புறுதி திட்டங்கள் குறித்தும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

""பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மனத்தில் சேவை எண்ணத்தை விதைக்க, ஒவ்வொரு பள்ளி, கல்லூரியில் நூறு மாணவ, மாணவியரைத் தேர்ந்தெடுத்து முறையாக அவர்களுக்கு முதலுதவி, இடர்ப்பாடு மீட்புப் பயிற்சி, போக்குவரத்து விதிகள், இரத்த தானம், கண்தானம், பார்வையற்ற மாணவர்களுக்கு பாடங்களை படித்துக் காட்டுதல்  போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றோம்.

ரெட்கிராஸ் அமைப்பில் தன்னார்வமிக்க எவரும் உறுப்பினராகச் சேரலாம். தனிநபர், வாழ்நாள் உறுப்பினர், புரவலர், துணைப் புரவலராகவும், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் "இன்ஸ்டிடியூஷனல் மெம்பராக'வும் சேரலாம்.

தஞ்சாவூரில் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை-மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே ரத்தவங்கிகள் இருக்கின்றன. ரத்ததான முகாம்கள் நடத்துவதன் மூலம் பெறும் ரத்தத்தை பாதுகாத்து ஏழை, எளியவர்களுக்கு கொடுப்பதற்கு ஒரு ரத்த வங்கியை நாங்களே உருவாக்க முன்வந்தோம். தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் முயற்சியால் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஒன்பது லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கி உருவாக்குவதற்கான சாதனங்கள் நன்கொடையாகக் கிடைத்தன. தஞ்சையைச் சேர்ந்த மலேசியத் தொழிலதிபர் சிராஜுதீன் 35 லட்சம் செலவில் கட்டிடம் கட்டித் தந்தார். இதைப்போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்களின் முயற்சியால் ரத்த வங்கி சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ரெட்கிராஸ் ரத்த வங்கிச் சேவையை மேம்படுத்துவது, தற்போது செயல்படுத்தி வரும் ஆம்புலன்ஸ் சேவையை மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்துவது, இரத்த தான திட்டம், எய்ட்ஸ் விழிப்புணர்வுத் திட்டம், குழந்தை நலன், மகளிர் நலன், ஊனமுற்றோர் மேம்பாட்டு நலன்... போன்ற 25-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களைக் கிராமங்கள் தோறும் கொண்டு செல்லப்போகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சாலை விபத்து, நீரில் மூழ்குதல், மரத்திலிருந்து கீழே விழுதல், மின்சார விபத்து, விஷ பூச்சிகள் கடிப்பது போன்ற காரணங்களால் பலியாகும் மாணவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

பெரிய விபத்து ஏற்பட்டு, அதில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு மட்டுமே அரசின் உதவிப் பணம் சம்பந்தப்பட்ட மாணவனின் குடும்பத்துக்குக் கிடைக்கின்றது. ஆனால் தனி மனித உயிரிழப்பை பெரும்பாலும் அரசு கண்டுகொள்வதில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. இதைத் தவிர்ப்பதற்கு மத்திய அரசின் பொது இன்சூரன்ஸ் மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக மாணவர் விபத்து பாதுகாப்பு காப்புறுதி திட்டத்தின் கீழ் மாணவர்களை பாலிசிதாரர்களாக்கி, அவர்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வாங்கித் தந்திருக்கிறோம். தற்போது ஓர் ஆண்டுக்கு ரூபாய் 6 பிரீமியம் செலுத்துவதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 12000 இழப்பீடும், ரூபாய் 50' ஆண்டு பிரீமியம் செலுத்தி வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விபத்தில் பாதிக்கப்பட்டாலும் ரூபாய் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை இழப்பீடும் வழங்கப்படுகிறது. இதே திட்டத்தில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த இழப்பீடு மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் பெரும்பாலும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளித்து மாணவர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. அரசுப் பள்ளிகளும் ஆர்வம் காட்டவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com