ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

நான் நவீனன் ஆனேன் - 23: புன்னகையைத் திருட முடியாது!

ரங்காராவின் வீட்டுக் காவலுக்கு இருந்த கூர்க்கா என் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவன் பேசிய இந்தி புரிந்தது. ரங்காராவிடம் அவனை மன்னித்து மீண்டும் பணிபுரிய அனுமதிக்கவும் என

Updated On :

ரங்காராவின் வீட்டுக் காவலுக்கு இருந்த கூர்க்கா என் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவன் பேசிய இந்தி புரிந்தது. ரங்காராவிடம் அவனை மன்னித்து மீண்டும் பணிபுரிய அனுமதிக்கவும் என்று சொல்லவே, அவர் சம்மதித்தார். அதற்குப்பிறகு அவரைப் பார்க்க நான் எப்போது போனாலும் எனக்கு "சல்யூட்' அடித்து இரண்டு கதவுகளையும் அகலத் திறந்து உள்ளே நுழைய அனுமதித்தான் கூர்க்கா.

  என்னிடம் மனம் விட்டு, முகம் மலர அவரது "ஃபேவரிட்' புன்னகையோடு பேசுவார் நடிகை கே.ஆர்.விஜயா. காரணம் அவரைப் பற்றி ""கற்பகம்'' படத்தில் இருந்து தொடர்ந்து பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைகள். வீட்டின் முன்பக்கம் கட்டியிருக்கும் அழகிய நீச்சல் குளத்துக்கு அருகில் உட்கார்ந்து என்னுடன் பேசுவார் விஜயா. யாரையும் அவர் தரக்குறைவாகப் பேசியதே இல்லை! பளிச்சிடும் பற்களின் வரிசை பரவசப்படுத்தும்.

  சந்தித்தவுடன் தேநீர்; பிறகு சுவையான உரையாடல்! பேச்சில் அதிக முக்கியத்துவம் சிவாஜிகணேசனுக்கு இருக்கும்.

  சில ஆண்டுகளுக்குமுன் அவர் ஊரில் இல்லாத பொழுது லாக்கரில் வைத்து இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோய் விட்டன. அந்த சமயம் அவரைச் சந்தித்தால் சரிவரப் பேசமாட்டார் என்ற தயக்கத்துடன் ஒரு நாள் பேசாமல் இருந்தேன். ஒரு தொடர் பேட்டிக் கட்டுரை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் காரணம்.

  வழக்கம் போலவே பேசினார். பேட்டிக்கு நடுவே"" களவு போன நகைகள் என்ன ஆயின, திரும்பக் கிடைத்ததா?'' என்று விசாரித்தேன்.

  போலீசார் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என்று பதில் சொல்லிவிட்டுப் பிறகு, ""என் புன்னகையை மட்டும்தான் யாரும் திருட முடியாது!'' எனக்கூற, அந்த ஆச்சரியமான சகிப்புத் தன்மையைக் கண்டு அயர்ந்து போனேன்! புன்னகை அரசியிடம் யாரும் களவாட முடியாத அந்தச் "செல்வ சாம்ராஜ்யம்' இன்று வரை இருந்து தான் வருகிறது!

  திருப்தியாகப் பல மொழிப் படங்களில் நடித்து முடித்து, சில சின்னத்திரைப் படங்களிலும் நடித்த பின் இப்பொழுது ஏனோ முழுநேர வீட்டரசியாக இருந்து வருகிறார் விஜயா.

  சில முக்கியமான காரணத்தை முன்வைத்து "தினமணி கதிருக்கு' ஆசிரியராக இருந்து வந்த "சாவி'யை பதவி நீக்கம் செய்து விட்டார்கள். அவருக்குப் பிறகு சில காலம், நானும் கண்ணன் (அபர்ணா நாயுடு) இருவரும் ஆசிரியர்கள் பொறுப்பில் இருந்துவரத் தற்காலிக ஏற்பாடு செய்தார் பொது மேலாளராக இருந்த ஆர்.கே. என்பவர். ஆனால்  ராம்நாத் கோயங்கா "தீபம்' பார்த்தசாரதியை ஆசிரியராக நியமித்து விட்டார்!

  அவர் பதவி ஏற்ற உடனே, கண்ணன் தன் வேலையை ராஜிநாமா செய்து விட்டார். நானும் அப்படியே முடிவு எடுக்கும் நோக்கத்துடன் ஆர்.கேயிடம் என் முடிவை வெளியிட்டேன்.

  என்னை விடுவிக்க விரும்பாத ஆர்.கே. மாற்று யோசனை ஒன்றை வெளியிட்டார். தினமணி நிறுவனத்தில் இருந்து ஒரு சினிமாப் பத்திரிகை வெளியிடும் எண்ணம் இருக்கிறது. விரைவில் அதைத் தொடங்கி அதற்கு என்னை ஆசிரியராக்கி விடுவதாகத் தெரிவித்தார். எனவே தொடர்ந்து "தினமணி கதிரில்' வேலை பார்த்து வந்தேன்.  எனக்குக் கைவந்த கலையாக சினிமாக் கட்டுரைகள் எழுத பார்த்தசாரதி விரும்பவில்லை! வேறு சிலரை அனுப்பி வைத்தார்.

  அவர்களிடம் சினிமா நடிகர்- நடிகைகள் ""நவீனன் என்னவானார்?'' என்று கேட்கிற நிலை உருவாயிற்று!

  ஆர்.கே. ஒரு நாள் என்னை அழைத்தார். அவரது அறைக்குள் பரபரப்புடன் நுழைந்தேன். அவர் அறிவித்த செய்தி.

(இன்னும் வரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.