திரைக்கதிர்: உனக்கும்... எனக்கும்... நமக்கும்..!

மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை மையமாக வைத்து "சிவகிரி' என்ற புதிய படம் தயாராகியுள்ளது. இதில் சிவகிரி கதாநாயகனாக நடித்துள்ளார். "சிந்துநதி பூ' படத்தை இயக்கிய செந்தமிழனிடம் உதவியாள
திரைக்கதிர்: உனக்கும்... எனக்கும்... நமக்கும்..!
Updated on
3 min read

மு ம்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை மையமாக வைத்து "சிவகிரி' என்ற புதிய படம் தயாராகியுள்ளது. இதில் சிவகிரி கதாநாயகனாக நடித்துள்ளார். "சிந்துநதி பூ' படத்தை இயக்கிய செந்தமிழனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஷிவாஜி படத்தை இயக்கியுள்ளார். படத்தைப் பற்றி கேட்டபோது...

  ""இதுவரை வெளிவந்த காவல்துறை பற்றிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை இது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. படத்தின் 70 சதவீத காட்சிகளை மலேசியாவில் எடுத்திருக்கிறோம். காவல்துறையைப் பெருமைப்படுத்தும் வகையில் "உனக்கும் எனக்கும் நமக்கும்...' என்ற பாடலை அழகிரி பாண்டியன் எழுதியிருக்கிறார். அராபின் யூசுப் இசையமைத்திருக்கிறார். "சிவகிரி' காவல்துறைக்கு மட்டுமல்ல சினிமாத்துறைக்கும் கெüரவம் சேர்க்கும் படமாக இருக்கும்'' என்றார் இயக்குநர் ஷிவாஜி.

நெருக்கத்துக்கு விருப்பம்?

  "வெயில்' படத்தில் "உருகுதே மருகுதே...' பாடலில் பிரியங்காவுடன் நெருக்கமாக நடித்த பசுபதி, "குசேலன்' படத்தில் மீனாவுடன் தக்க இடைவெளி விட்டு நடித்தார். தற்போது மூர்த்தி இயக்கும் "வெடிகுண்டு முருகேசன்' படத்தில் ஜோதிர்மயியுடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதுபற்றி பசுபதியிடம் கேட்டபோது...

  ""நான் வெறும் நடிகன் மட்டுமே. டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை நடிப்பாக வெளிப்படுத்துகிறேன். மற்றபடி, நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. இன்னொரு விஷயம்... நான் கதாநாயகனா? வில்லனா? என்பது கூட எனக்குத் தெரியவில்லை. சில இடங்களில் நானே வலியச் சென்று வில்லன் வாய்ப்பு கேட்டாலும் தர மறுக்கிறார்கள். என்னுடன் நடித்த நடிகைகளில் யார் சிறப்பாக நடனமாடுபவர் எனக் கேட்கிறார்கள். என்னை விட அனைவருமே சிறப்பாக நடனமாடுபவர்கள். அவ்வளவுதான். "வெடிகுண்டு முருகேசன்' படத்தில் ஜோதிர்மயியுடன் காமெடியில் கலக்கியுள்ளேன்'' என்றார்.

வால்........மோகி!

  "சிவா மனசுல சக்தி' படத்தையடுத்து விகடன் டாக்கீஸ் சார்பில் பா.சீனிவாசன் தயாரித்துள்ள புதிய படம் "வால்மீகி'. ஷங்கரின் உதவியாளர் அனந்தகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் "கல்லூரி' படத்தில் நடித்த அகில் கதாநாயகனாக நடித்துள்ளார். "வால்மீகி' பற்றி கேட்டபோது...

  ""பெரிய கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி மனம் திருந்தி ராமாயணம் படைத்தார். அதே போல இந்தப் படத்தில் பிக் பாக்கெட் திருடனாக வரும் கதாநாயகன் மனம் திருந்திய பிறகு எந்த மாதிரியான மாற்றத்தைச் செய்கிறான் என்பதை புதிய பாணியில் கூறியிருக்கிறோம். வாலியின் வரிகளும் இளையராஜாவின் இசையும் படத்துக்குப் பெரிய பலம். படத்தில் இளையராஜா மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். இதில் பணியாற்றியுள்ள பல புதுமுகங்களுக்கு "வால்மீகி' புதிய வாழ்க்கையைத் தரும்'' என்றார் அனந்தகிருஷ்ணன்.

கண்ணீர் விட்டார் ஜேசுதாஸ்!

  மு.களஞ்சியம், கலைப்புலி சேகரன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரதீஷ், "பயம் அறியான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் "பாய்ஸ்' மணிகண்டன், புதுமுகம் மகேஷ்ராஜா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

  ""ஊர் முழுவதும் திருடி தனக்கு கமிஷன் தர வேண்டும் என்ற கண்டிஷனுடன் ஒரு போலீஸ் அதிகாரி இரண்டு இளைஞர்களைத் திருடர்களாக்குகிறார். கல்லறையில் வாழும் இவர்கள் இருட்டில் மட்டுமே ஊருக்கு வருவார்கள். இந்தப் பின்னணியில் போலீஸ் அதிகாரி, இரண்டு திருடர்கள் ஆகியோருக்கிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள்தான் கதை. படத்தில் மோகன்ராஜ் எழுதிய "அம்மா நீயிருந்தால் ஒரு தெய்வம் தேவையில்லை...' என்ற பாடலைப் பாடியபோது ஜேசுதாஸ் கண்ணீர் விட்டு அழுதார். இந்தப் பாடலைப் பாட மட்டும் ஜேசுதாஸ் ஐந்தரை மணி நேரம் எடுத்துக்கொண்டார். இதுபோல  பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் உள்ளன'' என்றார் பிரதீஷ்.

தாகங்கள் அடங்கவில்லை!

  "தாய் காவியம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாடலாசிரியர் பா.விஜய். ஆனால் அந்தப் படம் திடீரென தள்ளிப்போகவே "ஞாபகங்கள்' படத்தைக் கடும் சிரமத்துக்கு ஊடே தயாரித்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் இருந்த பா.விஜய், கிட்டத்தட்ட 9 கிலோ குறைந்து காணப்பட்டார். அவரிடம் ""பாடல் எழுதும் பணி நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்ததது; நடிப்பு, தயாரிப்பு என இதெல்லாம் நமக்குத் தேவைதானா? என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?'' என்று கேட்டபோது...

  ""ஒரு பாடலாசிரியனாக என்னுடைய அதிகபட்ச இலக்கு தேசிய விருது. அதை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொட்டாயிற்று. கவிஞனாக என்னுடைய தாகங்கள் இன்னும் அடங்கவில்லை. பா.விஜய் என்ற பாடலாசிரியனுக்குள் பா.விஜய் என்ற நடிகன் ஓரிடத்தில் ஒளிந்துகொண்டிருந்தான். இந்தப் படைப்பை முதலில் ஒரு புத்தகமாகத்தான் எழுத நினைத்தேன். ஆனால் உலகம் முழுவதும் இதைக் கொண்டுசெல்ல சினிமாவைத் தவிர வேறு எந்த சக்தியாலும் முடியாது. அதற்குத்தான் இந்த முயற்சி.

  இதில் ஒரு வசனம் எழுதியிருக்கிறேன். "ஜெயிக்கணும்னு போராட வந்தவன பார்த்து "தம்பி! இதெல்லாம் பத்தாது; புதுசா இன்னும் ஃபயர் வேணும்பாங்க... புதுசா ஒரு ஃபயரோடு போராடுறவனைப் பார்த்து "போராடுன எல்லாரும் ஜெயிச்சிடுவாங்களா' என்று அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவாங்க''. ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் "ஞாபகங்கள்' பதில் சொல்லும் என்றார் நம்பிக்கையுடன்!

தமன்னாவை விட...

  ஹிந்தியில் வெளியான "ஜப் வீ மெட்' படம், பரத்-தமன்னா நடிக்க "கண்டேன் காதலை' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. "ஜெயம் கொண்டான்' கண்ணன் படத்தை இயக்குகிறார். ஹிந்தியில், நாயகி கரீனா கபூரின் தங்கை வேடத்துக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதனால் தமிழில் தமன்னாவுக்கு தங்கையாக நடிக்க சரண்யாவிடம் பேசப்பட்டிருக்கிறது. அவர் மறுத்துவிடவே ஷெரீனிடம் பேசியிருக்கிறார்கள். தமன்னாவை விட ஷெரீன் சீனியர் என்பதால் தங்கை வேடத்தை அக்கா வேடமாக மாற்ற முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர்.

இசையாத இசைப்புயல்

  ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் சுய சரிதைப் புத்தகத்தை வெளியிட பல தமிழ்ப் பதிப்பகங்களும் ஹிந்திப் பதிப்பகங்களும் அவரிடம் அனுமதி கேட்டு வருகின்றன. ஆனால் அந்த அளவுக்கு சாதிக்கவில்லை; சுய சரிதம் வெளியிடும் அளவுக்கு வயதும் ஆகவில்லை என இசைப் புயல் இசைவு தர மறுத்து வருகிறார்.

மீண்டும் லட்சுமி

  "எ வெட்னஸ்டே' ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகும் கமல்ஹாசனின் "உன்னைப் போல் ஒருவன்' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் லட்சுமி. படத்தில் இடம்பெறும் தலைமைச் செயலர் வேடத்துக்கு பல முன்னாள் நடிகைகளைப் பரிசீலித்து இறுதியில் லட்சுமியைத் தேர்வு செய்துள்ளார் கமல். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்த லட்சுமி, "உன்னைப் போல் ஒருவன்' படத்திலிருந்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்.

கத்தி முனையில்...

  பிரசன்னா, உதயதாரா நடித்து தரமான படம் என பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்ற "கண்ணும் கண்ணும்' படத்தை இயக்கிய மாரிமுத்து அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இதற்கு "கத்தி முனையில் கருப்பு சிங்காரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் வடிவேலு கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக இயக்குநர் வட்டாரம் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com