மோகினியைக் கவர்ந்த மச்சான்கள்!

"ஜகன்மோகினி' படத்தைப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலாவின் முகம் தேய்பிறையாகக் காட்சியளிக்கிறது. உண்மை -"நடந்தது என்ன?' என்று கேட்டால்... ""ஜகன்மோகினி ரீமேக்கில் நடிக்க முதலில் மறுத்தேன். ஆனால் ஒரிஜின
மோகினியைக் கவர்ந்த மச்சான்கள்!
Updated on
3 min read

"ஜகன்மோகினி' படத்தைப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலாவின் முகம் தேய்பிறையாகக் காட்சியளிக்கிறது. உண்மை -"நடந்தது என்ன?' என்று கேட்டால்...

""ஜகன்மோகினி ரீமேக்கில் நடிக்க முதலில் மறுத்தேன். ஆனால் ஒரிஜினல் படத்தைப் பார்க்கச் செய்து என்னுடைய மனதை மாற்றிவிட்டனர். நானும் ஈடுபாட்டோடு நடித்துக் கொடுத்தேன்.

ஆனால் படத்தைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சம்பந்தப்பட்ட அரை மணி நேரக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தன. இரண்டு ஹீரோயின்களுள் ஒருவர் எனக் கூறிவிட்டு கடைசியில் ஒரு துணை நடிகையைப் போல என்னைக் காட்டியிருந்தனர்.

அதனால் இனி ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என முடிவெடித்திருக்கிறேன்'' என்று கூறிவருகிறார். ஆனால் படம் நன்றாகப் போகிறதோ இல்லையோ நமீதா மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். காரணம், அவருடைய ரசிகக் கண்மணிகள் தமிழகம் முழுக்க நமீதாவைத் துதி பாடி போஸ்டர்கள் ஒட்டி, இப்படிக்கு "அன்பு மச்சான்கள்' எனத் தங்களை அடையாளப்படுத்தியிருப்பதுதான்.

லட்சம் பெறும் கதை!

நடிகர், தயாரிப்பாளர் என வலம் வந்த ஜெய்ஆகாஷ் "காதலன் காதலி' படத்தின் மூலம் கதாசிரியராகவும் இயக்குநராகவும் மாறியிருக்கிறார். திடீர் டைரக்ஷன் அவதாரம் குறித்து கேட்டபோது...

""இந்தப் படத்தின் கதையை ஐந்து வருடங்களுக்கு முன்பே தயார் செய்துவிட்டு நல்ல தயாரிப்பாளருக்காகக் காத்திருந்தேன். அப்போது வந்தவர்தான் ஜே.வி.நிஷா. கதையை அவரிடம் கூறியதும் பட்ஜெட்டைப் பற்றிக் கவலைப்படாமல் படத்தைத் தொடங்கினார். என்னுடைய நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை கற்பனை கலந்து சொல்லியிருக்கிறேன். சில பெரிய இயக்குநர்களும் பெரிய தயாரிப்பாளர்களும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் என்னுடைய மார்க்கெட் வேல்யூ காரணமாக அவர்களுடைய முக்கியமான படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். ஒரு நடிகனாக என்னை நிலைநிறுத்திக்கொள்ள நான் செய்யும் முயற்சிதான் டைரக்ஷன். இந்தப் படத்துக்குப் பிறகு என்னை பெரிய இயக்குநர்கள் அங்கீகரிப்பார்கள். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்தேஜா நடிப்பதற்காக இந்தக் கதைக்கு ரூ.25 லட்சம் தருவதாகக் கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன்'' என்றார் ஜெய்ஆகாஷ்.

துணி  குறைச்சல் = துணிச்சல்!

"காதலர்கள்தான் அவர்களுடைய காதலுக்கு எதிரிகள்' என்ற கருத்துடன் "அதே நேரம் அதே இடம்' படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் எம்.பிரபு. படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசியபோது...

""வாழ்க்கையில் காதல் வயப்படாதவர்களே இருக்க முடியாது. இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய காதல் நினைவுக்கு வருவதோடு தன் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய இடமும் நேரமும் (டைட்டிலுக்கு காரணம் கற்பித்தாகிவிட்டது!) நினைவுக்கு வரும்.

இந்தப் படத்தில் விஜயலட்சுமி முதல்முறையாக க்ளாமராக நடித்திருக்கிறார். ஜெய் ரொமான்டிக் ஹீரோவாக மட்டுமல்லாமல் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். பிரேம்ஜி அமரன் இசையில் படத்தின் ஐந்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. லலிதானந்த் எழுதிய "வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க பின்னிரவில் மெல்லிசை கேட்க...' என்ற பாடல் காட்சி ஏவி.எம். ஸ்டுடியோவில் 20 லட்சம் ரூபாய் செலவிலான பிரமாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டது.

இந்த ஃபேன்டஸியான பாடலில் விஜயலட்சுமி மிகவும் துணிச்சலாக நடித்திருக்கிறார்'' என்றவரிடம் "துணிச்சலாக என்றால்' என கேட்டபோது... "துணி குறைச்சலாக' என தனது குருநாதர் பாணியில் பதிலளித்தார்.

சா.. பூ.. த்ரி!

"யாவரும் நலம்' படத்தை இயக்கிய விக்ரம் குமாரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அர்ஷத்கான், "சா... பூ... த்ரி...' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்தவரிடம் படத்தைப் பற்றி கேட்டபோது...

""பதினெட்டு, இருபத்து ஐந்து, முப்பது வயதுடைய மூன்று இளைஞர்களின் காதலைப் பற்றிய ஒரு ரொமான்டிக் காமெடி படம்தான் இது. பிரபல பின்னணிப் பாடகி உஜ்ஜயினி கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் கதையோடு கூடிய இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவரும்'' என்றவரிடம் படத்தின் பெயர்க் காரணம் குறித்து கேட்டபோது... ""நான்கு ஐந்து டைட்டில்களைப் பரிசீலனை செய்து வைத்திருந்தோம். அதில் எதைத் தேர்ந்தெடுப்பது எனக் குழப்பமாக இருந்தது. உடனே எனது நண்பரும் தயாரிப்பாளருமான ராஜேஷ்கண்ணா உள்ளிட்டவர்கள் சிறுவர்கள் விளையாடும் "சா பூ த்ரி' போட்டுப் பார்ப்போம்; அதில் எந்தப் பெயர் வருகிறதோ அதைத் தலைப்பாக வைத்துவிடுவோம் என்றனர்.

அப்போதுதான் எங்கள் அனைவருக்குமே "அட... சா பூ த்ரி' என்ற பெயரே நன்றாகத்தானே இருக்கிறது; இதையே டைட்டிலாக வைத்தால் என்ன? என்று தோன்றியது. அதனால் அந்தப் பெயரையே டைட்டில் ஆக்கிவிட்டோம்'' என்றார் விளையாட்டுத்தனமாக!

"அசல்' சுரேஷ்!

"பன்னீர்புஷ்பங்கள்' படத்தில் அறிமுகமாகி 1980-களில் வெற்றிப் பட ஹீரோவாக வலம் வந்த சுரேஷ், "அசல்' படத்தின் மூலம் திரையுலகில் மீண்டும் கால்பதித்திருக்கிறார். "ஏன் இந்த இடைவெளி?' என்று கேட்டபோது...

""தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில்265 படங்களில் நடித்திருக்கிறேன். என் அப்பா கோபிநாத் சினிமா டைரக்டர் என்பதால் சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. 90-கள் வரை "லவ்வர் பாய்' ஆக நடித்தேன். ஒரு கட்டத்தில், ஒரே மாதிரியாக நடிக்கிறோமே எனத் தோன்றியது.

ஆக்ஷன், நெகட்டிவ் கேரக்டர்களில் வித்தியாசமாக நடிக்க விரும்பினேன். தெலுங்கில் அதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கு தொடர்ந்து நடித்தேன். அதன்பிறகு 4 படங்கள், 6 டெலிவிஷன் தொடர்களைத் தயாரித்தேன். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத்துடன் "அசல்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன்.

அஜீத், சிவாஜி ஃபிலிம்ஸ் பேனர், சரண் என பெரிய கூட்டணி. இந்தப் படத்தில் பணியாற்றுவது என்னை நானே புதுப்பித்துக்கொள்வதற்கு சமம். வில்லன் உள்பட வித்தியாசமான எந்தக் கேரக்டரிலும் நடிக்கத் தயாராகவுள்ளேன். "அசல்' படம் வெளிவந்த பிறகு என்னை அதிகப் படங்களில் பார்க்கலாம்'' என்றார் சுரேஷ்.

ரொம்ப "மகிழ்ச்சி'!

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சந்தனக்காடு' தொடரை இயக்கிய வ.கெüதமன் "மகிழ்ச்சி' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார். சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படி ஒரு வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை வாழ்ந்துவிட மாட்டோமா என இளம் வயதினரும் முதியவர்களும் பெருமிதப்படுவது போன்றதுதான் படத்தின் கதை. முழுக்க முழுக்க குடும்பக் கதை என்றாலும் சண்டைக் காட்சிகளும் படத்தில் உள்ளன என்கிறார் இயக்குநர்.

பேனா பிடிக்கும் மாதவன்!

"நினைத்தாலே இனிக்கும்' படத்தால் கவரப்பட்ட மாதவன், படத்தின் இயக்குநர் குமரவேலனை அழைத்து தான் எழுதிய ஒரு கதையைக் காட்டியிருக்கிறார். அந்தக் கதையால் கவரப்பட்ட இயக்குநர், இந்தக் கதையில் நீங்கள் நடிக்கத் தயாராக இருந்தால் நானே இயக்குகிறேன் எனக் கூறியிருக்கிறார். மாதவனும் சம்மதம் தெரிவிக்க, திரைக்கதையுடன் படத்தின் பெயரும் நாயகியர் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com