கைத்திறன்: நெல்லிலே கலை வண்ணம்!

மாலை என்றாலே மலர்களால் கட்டப்படுவதுதான். ஆனால் நெல்லைக் கொண்டு மாலை கட்டுகிறார்கள் தஞ்சாவூரில். நெல்மணிகளை மாலையாகக் கட்டுபவர் விஜயகுமாரி கலியமூர்த்தி. அவரின் கைவண்ணத்தில் உருவான நெல்மணி மாலைகளை ஆச்சர
கைத்திறன்: நெல்லிலே கலை வண்ணம்!

மாலை என்றாலே மலர்களால் கட்டப்படுவதுதான். ஆனால் நெல்லைக் கொண்டு மாலை கட்டுகிறார்கள் தஞ்சாவூரில். நெல்மணிகளை மாலையாகக் கட்டுபவர் விஜயகுமாரி கலியமூர்த்தி. அவரின் கைவண்ணத்தில் உருவான நெல்மணி மாலைகளை ஆச்சரியம் தாளாமல் பார்த்துக் கொண்டு நின்றோம்.

  இந்த நெல்மணி மாலைகளை எப்படிக் கட்டுகிறார்கள்? இதை யார் வாங்குகிறார்கள்? இது என்ன விலை இருக்கும்? போன்ற கேள்விகள் நமது தலையில் ஏறி உட்கார்ந்து தொல்லை செய்ய ஆரம்பிக்கவே நாம் விஜயகுமாரி கலியமூர்த்தியிடம் பேச ஆரம்பித்தோம்.

  நெல் மணி மாலைகளைக் கட்டும் இந்த அருங்கலையை எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?

  எனக்குப் பூர்வீகம் தஞ்சாவூர்தான். என் மாமனாரின் குடும்பம் பரம்பரையாக மாலை கட்டும் தொழிலைச் செய்து வந்தாலும் எங்கள் மாமாதான் முதன்முதலில் இந்த நெல்மணி மாலைகளைக் கட்ட ஆரம்பித்தார். மாமனாரோடு சேர்ந்து என் கணவரும் நெல்மணி மாலைகளைக் கட்டினார். அவரிடமிருந்து நானும் கற்றுக் கொண்டேன்.

  நெல்மணி மாலை கட்ட இங்குள்ள வயலில் விளையும் நெல்லைப் பயன்படுத்த முடியுமா? நெல் மணி மாலையில் வேறு என்ன பொருள்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கட்டுகிறீர்கள்?

  நெல்மணி மாலை கட்ட எல்லா நெல்மணிகளையும் பயன்படுத்த முடியாது. இதற்கான நெல்லை காட்டுத்தோட்டம் விதைப் பண்ணையில் இருந்துதான் வாங்குகிறோம். பச்சை மூங்கிலின் சிம்பில் நெல்லை வைத்துக் கட்டுவோம். அலங்காரத்துக்காக ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கட்டுவோம். ஒவ்வொரு அடுக்காக மாற்றி மாற்றி வைத்துப் பின்னினால் நெல்மணி மாலை தயாராகிவிடும்.

  ஒரு நாளைக்கு எத்தனை நெல் மணிகளை உருவாக்க முடியும்?

   இது நீங்கள் நினைப்பது மாதிரி அவ்வளவு எளிதான வேலை அல்ல. ஒரு மாலை செய்ய ஆர்டரைப் பொறுத்து 10 நாட்கள் கூட ஆகிவிடும். பிற வேலைகளைப் போல வேகமாக இந்த வேலையைச் செய்ய முடியாது. ஒரு நெல்மணி மாலையின் மிகக் குறைந்த விலை மூவாயிரம் ரூபாய். முப்பதாயிரம் ரூபாய்க்கு வேண்டுமானாலும் மாலை கட்டித் தருவோம்.

   நெல்லைக் கொண்டு வேறு என்ன கலைத்திறன் மிக்க பொருட்களை உருவாக்குகிறீர்கள்?

  நாங்கள் சந்தன மாலை, ஜவ்வாது மாலை, ஏலக்காய் மாலை, கிராம்பு மாலை, கதம்ப மாலையும் கட்டுவோம். ஆனால் நெல்மணியில் பொக்கேயும் புதுமையாக உருவாக்கித் தருவோம். நாங்கள் இதுபோல உருவாக்கிய பொக்கேயை ஹிந்திப் பாடகி லதா மங்கேஷ்கரின் 80 வது பிறந்தநாள் பரிசாகத் தர வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

  இப்போது இதில் புதுமையாக ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். நெல்லைக் கொண்டு புதுமையான திருமண வாழ்த்து மடல்களையும் செய்கிறோம். மும்பையில் உள்ள ஒரு தமிழர் கேட்டுக் கொண்டதால் இந்த மாலையைச் செய்கிறோம். இந்த வாழ்த்து மடலை குறைந்தது ஏழாயிரம் ரூபாயிலிருந்து ஆர்டரைப் பொறுத்து எவ்வளவுக்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

  தமிழ்நாட்டில் வேறு எந்த ஊரில் இதைப் போன்ற நெல்மணி மாலைகளைச் செய்கிறார்கள்?

  வேறு எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் இந்த நெல்மணி மாலை எங்கே கிடைத்தாலும் அதை நாங்கள்தான் செய்திருப்போம். எங்களைத் தவிர வேறு யாரும் இந்த மாலையைத் தமிழ்நாட்டில் செய்வதில்லை. நாங்கள் தயாரிக்கிற இந்த நெல்மணி மாலைகள் காதி பவனில் மட்டும்தான் கிடைக்கும்.

  இந்த நெல்மணி மாலைகளை யார் விரும்பி வாங்குகிறார்கள்?

  தமிழகத்தின் பிரபலமான தனியார் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன விழாக்களுக்கு நினைவுப் பரிசு வழங்க எங்களுடைய நெல்மணி மாலைகளைத்தான் ஆர்டர் செய்கிறார்கள்.

  இப்போது என்னதான் கலைத்திறனுடன் அழகான பொருட்களை உருவாக்கினாலும் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் போட்டிக்கு வந்துவிட்டனவே?

  நீங்கள் சொல்வது உண்மைதான். பிளாஸ்டிக்கின் வருகை எல்லாக் கைத்தொழில்களையும் அழித்தாலும் எங்களுடைய நெல்மணி மாலை கட்டும் தொழிலை மட்டும் அழிக்க முடியாது. போலியாக சந்தனமாலை, ஜவ்வாது மாலை போன்றவற்றைப் பிளாஸ்டிக்கில் செய்து விற்கிறார்கள். இதனால் நமது பாரம்பரிய தொழிலை அழிக்கிறார்கள். விழாக்களுக்கு இத்தகைய மாலைகளை வாங்குபவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஏதோ ஒரு மாலையைப் போட்டால் சரிதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நெல் மணிமாலைகளைப் பிளாஸ்டிக்கால் செய்ய முடியாது. நெல்மணி மாலை கட்டும் இந்தக் கலைத் தொழில் ரொம்பப் புனிதமானது. பல குடும்பங்களை வாழ வைக்கக் கூடியது.

  உங்களுடைய மாமனார் காலத்திலிருந்து நெல்மணி மாலைகளைச் செய்து வருவதாகச் சொன்னீர்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெருமைகள் உங்களுடைய நெல்மணி மாலைகளுக்குக் கிடைத்திருக்கின்றனவா?

  நல்ல கேள்வி கேட்டீர்கள். எங்கள் மாமனார் காலத்தில் இருந்து உருவாக்கப்படும் இந்த நெல்மணி மாலைகளுக்கும் நிறையப் பெருமைகள் இருக்கின்றன. 1953 இல் ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு வந்த போது அந்நாளைய மாவட்ட ஆட்சியர் டி.கே.பழனியப்பன் அவருக்கு வித்தியாசமான பரிசை அளிக்க விரும்பினார். அப்போது அளிக்கப்பட்டது நெல்மணி மாலைதான்.

  அதற்குப் பின்பு 1959 இல் நெல்மணி மாலைகளைக் கொண்டு 12 அடியில் தேர் செய்திருக்கிறார்கள். அந்தத் தேர் சென்னை வேளாண்மைக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது.

  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வந்தபோது இந்த நெல்மணி மாலைகளை 1981 இல் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றிருக்கிறார்.

  அது மட்டுமல்ல, 1968 - 69 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தேசிய கைத்திறன் விருதும், 1993 இல் மாநில அரசின் கைத்திறன் விருதும் எங்களுடைய நெல்மணி மாலைகளுக்குக் கிடைத்திருக்கிறது.

படங்கள்: இ.கங்கா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com