சிறுகதை: பூத்தலும் உதிர்தலும்

காலை வெயிலில் கண் கூசிற்று. இதுவரை எந்தச் சப்தமும் இல்லை. நேற்றைய இரவு ஏதும் வெடியும், புகையும், அவலமும், கூச்சலும் இன்றிக் கழிந்தது. இன்றைய பொழுது எப்படியிருக்குமோ தெரியவில்லை. பகலில் பெரும்பாலும் அத
சிறுகதை: பூத்தலும் உதிர்தலும்

காலை வெயிலில் கண் கூசிற்று. இதுவரை எந்தச் சப்தமும் இல்லை. நேற்றைய இரவு ஏதும் வெடியும், புகையும், அவலமும், கூச்சலும் இன்றிக் கழிந்தது. இன்றைய பொழுது எப்படியிருக்குமோ தெரியவில்லை. பகலில் பெரும்பாலும் அதிகம் தொந்தரவில்லை. இரவுதான் எமகண்டமாய் கழிகிறது. ஈரக்குலையை கையில் பிடித்தபடி குழிக்குள் நடுங்கிக் கிடக்க வேண்டுமாய் இருக்கிறது.



புதிதாய் ஒரு வெடிக்கும் குண்டு கண்டுபிடித்ததாய் பேசிக் கொள்கிறார்கள். தரையைத் தொட்டதும் வெடிக்காது தரைக்குள் இரண்டடி புதைந்து பின்னர் வெடிக்கும் வகையினது அது.



அது வெடித்தால் குழியும் சேர்ந்து நொறுங்கிப் போகும்.



""அப்பா...''



யோசித்தல் கலைந்து திரும்ப.... பாவாடை சட்டையிலேயே பார்த்துப் பழகிய மகள் சிற்றாடை கட்டி நின்றாள். தலையில் கை வைத்துக் கோதினேன்.

  என் தோளுயரமிருந்தாள். இன்னும் ஒரு வருடத்தில் என்னையும் விஞ்சி வளர்ந்து நிற்பாள். காலையில் பூசிய மஞ்சளின் மினுமினுப்பு மென்மையாய் முகமெங்கும் ஆடியிருந்தது

  ""என்னடா செல்லம்...''

  ""இனி நான் உங்களன்ட மடியில் உட்காரக்கூடாதென்டு எல்லாரும் சொல்லறாங்கள்... அப்படியா அப்பா?''

  ""அறிவிலிகள்... யார் அப்படியெல்லாஞ் சொன்னது... நீ எப்பவும் போல் எண்ட மடியில் உக்காந்து விளையாடலாம்...'' இழுத்து மடியில் உட்கார்த்திக் கொண்டேன். பூப்பெய்தி இன்றோடு மூன்று நாட்கள் ஆகப் போகிறது. அதற்குள் என்னவெல்லாம் யோசிக்கிறது!

  எனக்குள்ளும் என்னென்னவோ ஓடுகிறது. எவரிடத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ மனதுக்குள் எழுகிறது.

  இந்த வெடிகுண்டு சத்தமும், யுத்தமும் அவ்வப்போது பார்க்கும் ரத்தமும் பார்த்து பூத்துப் போய்க் கிடக்கிறது மனம். தினமெழுந்து காலை உணவுக்காய் கிழங்கும், பழமும், வெள்ளரிப் பிஞ்சுகளும், சமைத்தலுக்காய் சுள்ளிகளும் தேடி முடிக்கையில் இருள் கவிந்து விடுகிறது.

  இருள்...இருள்... எத்தனை பயமாய் இருக்கிறது? இந்தப் பழைய கட்டடத்துக்குள் உடல் படுத்திருந்தாலும் மனம் உறங்கி எத்தனை நாளாகிறது.

  இரவுகளில் தூரத்தில் வெளிச்சம் பார்த்தாலே மனம் துணுக்குற்று எழுந்து விடுகிறது. எது எப்போது நிகழும் என்று ஏதுவும் சொல்ல இயலாது. மரணம் எப்போதும் குழிக்கு மேலும் உள்ளுமாய் காவல் காத்துக் கொண்டிருக்கும் நிலையை எவரிடம் சொல்லிப் போவதென்று புரியவில்லை.

  குண்டு வெடித்து, புகை பிடிக்க ஆரம்பித்தால், வானமெங்கும் கரியும், கருமையும், கரி வாசனையுமாய் நெஞ்சு எரிந்து போகிறது. ரெண்டு நாட்கள் முன்பு இதற்கு முந்தைய பள்ளிக் கட்டடத்தில் இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிருக்கும்... போடப்பட்ட ஏறிகுண்டின் சப்தமும், கரிமணமும் இன்னமும் வானத்தில் மிச்சமிருக்கிறது.

  அதைவிட எறிகுண்டின் வெடிப்பில் பிய்ந்து பறந்து விழுந்த கை ஒன்றின் காட்சியில் இன்னும் மனம் அதிர்ந்து கொண்டிருக்கிறது.

  அந்தக் கை ஒரு இளம் பெண்ணினுடையதாய் இருக்க வேண்டும். கண்ணாடி வளையல்கள் இன்னும் ஒன்றிரண்டு மிச்சமிருக்கிறது. அதில், வலது கையாகத்தான் இருக்க வேண்டும். அதன் மோதிர விரல் கை பிய்ந்து பறந்து கீழே விழுந்த பின்பும் லேசாய் துடித்துக் கொண்டு இருந்தது.

  ""யப்பா'' பையனின் அலறல் என்னைக் கலைத்து உலுக்கிற்று. எழுந்து விரைந்தேன். என்னோடு மகளும் ஓடி வந்தாள்.

  ""என்ன... என்ன...''

  பையனின் நெஞ்சு மூச்சுவிடும் வேகத்தில் ஏறி இறங்கிற்று. கண்ணில் தெரியும் பயம்...

  ""ஒன்றும் ஆகல... என்ன ஆயிற்று...'' என்றபடி கட்டித் தூக்கினேன்.

  ""நான் பார்த்தேன் அப்பா... அது நம்ம குழிக்குள்ளதான் போயிற்று... பெருசாய்... நம்ம குழி வாசலில் கிடந்த செங்கல்லை சுற்றிக்கொண்டு கிடந்தது அப்பா... எவ்வளவு நீளம் தெரியுமா? அதைவிட அது நாக்கை நீட்டி...நீட்டி...'' ஏதோ ஒரு பாம்பைப் பார்த்திருக்கிறான். பயத்தில் துவண்டு போயிருந்தான். மகளிடம் பையனைத் தூக்கிக் கொடுத்தேன். மணி ஆறேகால் ஆறரை இருக்கும். அந்தியில் சூரியன் விழுந்து கொண்டிருந்தான்.

  எம்மைப் போலவே விலங்குகளும் இடம் தேடி அலைகின்றன. இரை தேடி அலைகின்றன. எமக்கும் அதற்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. அவை உயிரைத் தொங்கவிட்டபடி அலைவதைப் போலவே நாங்களும் அலைகிறோம்.

  குழிக்குள் பாம்பைத் தேடுவது கடினம். பொந்துகள் நிறைய உள்ளன. நண்டுகளும் சிற்றெலிகளும், அணில்களும் வந்து போகும். அவற்றிற்காக  பாம்புகளும் எப்போதாவது குழிக்குள் வருவதுண்டு. மெல்லக் குழிக்குள் இறங்கினேன். எங்கிருந்தாவது அது எதிரில் வந்தால் திரும்பி ஏற வசதியாக நின்றபடி சுற்று முற்றும் தேடினேன்.

  சற்றுமுன் அது கடந்து போன தடம் இருந்தது. தடம் பெரிதாய் இருந்தது. இந்த அளவு அகலமான தடம் எனில் அதுவும் பெரிதாய்தான் இருக்க வேண்டும். பிள்ளை பயந்து அலறியதில் வியப்பு ஏதும் இல்லை.

  தடம் முடிந்த இடத்தில் சரியாய் ஒரு பொந்து இருந்தது. அதற்குள்தான் இருக்க வேண்டும். கையில் தயாராய் இருந்த குச்சியை இடுக்கிப்போல ஒடித்து உள்ளே நுழைக்க அது இறுதி வரை போயிற்றே தவிர ஏதுமில்லை.

  நான் யோசித்து நின்ற சிறு இடைவெளியில் பக்கத்திலிருந்த வேறொரு பொந்திலிருந்து சீறிய படி வெளியே வந்து விழுந்த அதன் நீளம் நான்கரை அடி இருக்கும். குச்சியை வைத்து தலையை அழுத்திப் பிடிக்க துடித்து உடலைத் தூக்கிற்று. பிடி நழுவ தலை தூக்கி மீண்டும் கோபமாய் சீறிற்று. அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அதனைத் தூக்கி வெளியே எறிந்தேன்.

  அக்கமும் பக்கமும் வேடிக்கை பார்த்தது...

  ""யாரைத் தீண்டியிருந்தாலும்... மரணம் நிச்சயம்...'' என்றனர்.

  மரணம் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம்தான். எனினும், பாம்பும் தேளும் தீண்டியும், மலேரியாகவும், கழிச்சலும் வந்தும், வெடித்தாக்குதலில் கையும் காலும் இழந்தும்... இதற்கு ஏதும் உரிய மருந்தும் மருத்துவமும் இன்றி படும் அவலம் மரணத்தினும் கொடிது.

  இருள் கொஞ்சமாய் மிச்சமிருந்த நிலையில் திருநுதற்செல்வி கிழங்குக் கொத்தும் பழக் கொத்தும் இரு கையில் ஏந்தி தலையில் சுள்ளிக் கட்டுடன் வந்து சேர்ந்தாள்.

  ""என்ன ஒரு வெயில் பார்த்தீங்களா? பிள்ளைகள் ஏதாவது உண்டார்களா? நீங்கள் என்ன உண்டீர்கள்?''

  ""செல்வி... கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்... பிறகு பேசலாம்...''

  அவள் பள்ளிக் கட்டடத்தின் முன் பகுதியில் கால் நீட்டிப் படுக்க நான் மெல்ல கழுதை விரியன் பற்றிச் சொன்னேன்.

  சட்டென்று எழுந்தவள்...

  ""பிள்ளைகள் எங்கே...'' என்று கேட்கையில் இருவரும் வந்து சேர... அவர்களைத் தன் மேல் கிடத்திக் கொண்டாள்.

  செல்வியை நான் கைப்பிடித்து பதினேழு வருடமாயிற்று. முதல் எட்டு வருட வாழ்க்கையின் இனிமை அவ்வப்போது நெஞ்சுக்குள் குளிர்விக்கும்.

  தூணின் மீது காய்ந்து படுத்திருந்த அவளின் மீது பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அன்றுதான் அவளைப் புதிதாய்ப் பார்ப்பது போலிருந்தது எனக்கு.

  நெற்றி சிறியதாய் வளைந்து ஓவியத்தில் வரும் பெண்களுடையதை போலிருந்தது.

  ""செல்வி... உனக்கு சரியாய்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். திருநுதற்செல்வியென்று...''

  அவள் மெல்ல சிரித்தாள். அதே நேரம் சைக்கிளும் அதன் மணியின் சப்தமும் கேட்க எல்லோரும் அதனருகே விரைந்தனர்.

  இந்த ஓசை கேட்டால் உணவுப் பண்டம் ஏதாவது வந்திருக்குமென்று அனைவருக்கும் தெரியும்.

  வழக்கமாய் உணவு பெறும் இடத்தில் அடையாள அட்டை காட்ட நாலு பேருக்கான பொறையும், பாலும், ரொட்டியும், முட்டையும் தந்து அதிசமாய் உடன் அரிசியும் வெல்லமும் தந்தார்கள். மகிழ்வும் வியப்பும் கூடிற்று எனக்கு. தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும்.

  உடன் பாலும் ரொட்டியும் தின்றுவிட்டு பொறையை காலை உணவுக்காய் வைத்தாள் செல்வி. அரிசியும் வெல்லமும் பார்த்து மலர்ந்த அவள், ""பிள்ளைகள் பூப்பெய்தினால் மூன்றாவது நாள் பிட்டு சுற்றிப் போடுவது நம்மளோட வழக்கம்...''

  கொஞ்ச நேரம் ஏதும் பேசாது மெüனமானாள். அவள் பூப்பெய்தி சடங்கு செய்த நாட்கள் மனதில் ஓடியிருக்க வேண்டும்.

  இரவு நேரத்தில் அதிகம் விறகு கொளுத்தினால் அது ஆபத்து என்பதால் மந்தமான சுள்ளி வெப்பத்தில் அரிசியும் வெல்லமும் கலந்து பிட்டு கொஞ்ச நேரத்தில் தயாராயிற்று.

  பிள்ளை என் மடி மீது உட்கார செல்வி பிட்டு சுற்றினாள். வெகு ஞாபகமாய் அதை தூக்கி ஏறியாது, தூக்கி ஏறிவது போல் பாவனை காட்டிவிட்டு, நால்வரும் ஆளுக்குக் கொஞ்சமாய்த் தின்றோம்.

  சுள்ளி வெளிச்சத்தில் செல்வியின் கண்ணிலோடிய கண்ணீர் மின்னிற்று.

  ""பிட்டு சுற்றித் தூக்கி எறியக்கூட இயலாது... என்ன பிழைப்போ இது...''

  இரவு அரற்றியபடி கிடந்தாள் செல்வி. எனக்குத் தூக்கம் முழுதாய் இல்லை.

  பின்னிரவு பொழுதில் விமானங்களின் ஓசை உலுக்கி எழுப்பிற்று. குண்டு விழுமோ? ஈரக்குலை நடுங்கிற்று. செல்வியும் நானும் விழித்திருந்தோம். பிள்ளைகள் சப்தம் கேட்காது உறங்கிக் கொண்டிருந்தன.

  எதுவோ விழும் ஓசை தொடர்ந்து கேட்டது. மெல்ல விமானங்களின் ஓசை மறைய, என்ன விழுந்தது என்று புரியவில்லை. புதுவகை குண்டோ? வீசி அரைமணி கழித்து வெடிக்குமோ?

  குழிக்குள்ளும், மண்டபத் தூண்களின் பின்புறமும், புதர் மறைவிலும் இருந்தவர்கள் எல்லோரும் உற்றுப் பார்க்க பைகள் ஆங்காங்கே கிடந்தன.

  யாரோ ஒருவன் நகர்ந்து சென்று எடுத்துப் பார்த்து...

  ""எல்லோரும் வாருங்கள்... புதுத்துணிகளும்... அரிசியும் ரொட்டியும் பால் பவுடரும்...'

  அதற்கு மேல் அவன் குரல் கேட்காத அளவுக்கு, எல்லோரும் ஆளுக்கு ஒரு பைகளைத் தேடி ஓட செல்வியும் எழுந்து ஓடினாள்.

  நான் மண்டபத் தூண் மீது தளர்வாக சாய்ந்து கால் நீட்டிய நொடியில் ""சடசட''வென கிளம்பிற்று. துப்பாக்கி குண்டுகளின் அரவம். பிள்ளைகள் இரண்டும் என் கழுத்தில் தொங்க நான் ஓடி, விழுந்து, எழுந்து குழிக்குள் இறங்குகையில் இடறிற்று திருநுதற்செல்வியின் உடல். திருநுதலில் குருதி உறைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com