
சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் "அம்மா' கதாபாத்திரத்தில் அசத்தி வருபவர் ரேவதி சங்கர். "எங்கிருந்தோ வந்தாள்' சீரியல் ஷூட்டிங்கில் கண்டிப்பான அம்மாகேரக்டர். மகள் பாத்திரத்தில் நடித்தவரைத் திட்டிக் கொண்டிருந்தார். இடைவேளையில் சந்தித்துப் பேசினோம்:
பத்து வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தேன்துளி நிகழ்ச்சிதான் என்னுடைய முதல் நிகழ்ச்சி. கதையை வாசிக்கும் நிகழ்ச்சி. குரலின் ஏற்ற இறக்கங்களுடன் கதையின் தன்மையைக் கேட்பவர்கள் உணரும்படி படித்துக் காட்டுவது ஒரு கலைதான். அது என்னுள்ளே இருந்தது போலும். இதன்பின் வழக்கமான இல்லத்தரசியாகிவிட்டேன். இப்படியே சில ஆண்டுகள் ஓடின.
இதன்பின் நடித்துக் காட்டும் திறனும் எனக்குண்டு என்ற நம்பிக்கையில் சில நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தேன். ஏவி.எம். எனக்கு "சொந்தம்' தொடரில் வாய்ப்பளித்தது. அடுத்து, ஹம்ஸô விஷன் "ஆலயம்', செவன்த் சேனலின் "எத்தனை மனிதர்கள்' போன்ற நாடகங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தேன். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறேன்.
"கண்ணாமூச்சி ஏனடா', "ஈ3', "காதல் டூ கொண்டாட்டம்' போன்ற படங்களிலும் அம்மா அல்லது பெரியம்மாவாக நடித்திருக்கிறேன்.
எனக்குப் பெரிதாக நாடக அனுபவம் எதுவும் இல்லை. தூர்தர்ஷனில், சில க்விஸ் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். சின்னத்திரையில் காமிரா முன், அந்த மேக்கப்புடன், நடிப்பது என்னுள் ஒரு பிரமிப்பை உண்டாக்கியது. பழக்கமில்லாத காரியத்தைச் செய்யும்பொழுது உண்டாகும் ஒரு பயம் கலந்த திகைப்பு ஏற்பட்டது. இயக்குநர் உடனிருந்து கொடுத்த தைரியம் என்னைத் தெளிவாக்கியது. கே.பாலசந்தர் சாரின் "சஹானா' பெருந்தொடரில், ஒரு நீதிபதியின் மனைவியாக நடித்தேன். அது பாலச்சந்தரே இயக்கிய ஒரு தொடர். நான் அவர்களது மின் பிம்பங்களின் மைக்ரோ தொடர், சிறுகதைகள் ஆகிய பலவற்றில் பங்கு கொண்டுள்ளேன். மின் பிம்பங்கள் மற்றும் ஏவி.எம்மின் ஆஸ்தான நடிகை என்று என்னை நான் அழைத்துக் கொள்ளலாம்.
சீரியல் என்று எடுத்துக்கொண்டால் ஒரே நாளில் ஒன்பது அல்லது பத்து காட்சிகள் படமாக்கப்படலாம். காலையில் சென்றால் வீடு திரும்ப இரவு ஒன்பது அல்லது பத்து மணியாகிவிடும். எனக்கு உற்றதுணையாக இருப்பது எனது கணவர்தான். அவர் கொடுக்கும் பலத்தினால்தான் என்னால் செயல்பட முடிகிறது.
சினிமாபோல சின்னத்திரையில் ஸ்கிரிப்ட் எடுத்துக் கொண்டு வீட்டில் நன்றாய் படித்து பின் நடிப்பது என்பதெல்லாம் சாத்தியமில்லை. அன்று என்ன தேவையோ அது அன்று எழுதப்பட்டு வரும் முறைதான் இங்கு இயல்பு. லொக்கேஷனுக்குச் சென்று அங்கு விவரமறிந்து மனதைத் தயார் செய்து நடிக்க வேண்டும். சென்றவுடன் சீன், அதன் மையக் கருத்து, நிகழும் சம்பாஷணைகள் நமக்குக் கூறப்படும். அதைப் பொறுத்து நமது கற்பனை, திறன் ஆகியவற்றை அங்கே வெளிக் கொணர வேண்டும்.
குரல் கொடுப்பது என்ற விதத்தில், நாம் நடித்ததை உடனே மறுபரிசீலனை செய்ய ஒரு தருணம் கிடைக்கிறது. அப்பொழுதெல்லாம் நடித்துக் காட்டியதை விடவும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும். சமீபத்தில் ஒரு குறும்படத்தில் மதுரை ராஜாமணியுடன் நடித்திருக்கிறேன். ராம்ஜி என்பவர் இயக்கிய இப்படம் சினிமா விழாவிற்காக எடுக்கப்பட்ட ஒன்று. சுவீகாரம் என்ற இப்படம் தத்தெடுத்தல் பற்றியது. அரை மணி நேரம் படம். ஏக்கத்தை மிகுந்த உருக்கத்துடன் பிரதிபலிக்க ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது. சினிமாவிற்கு என்று தேதி கொடுக்க முடிவதில்லை, சின்னத்திரை பாதிக்கப்பட்டு விடுகிறது.
எனக்கு ரோல் மாடல் உண்டா என்று நான் எண்ணிப் பார்த்ததுண்டு. எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா போன்றவர்களிடமுள்ள பாஸிடிவ் ஆன சில விஷயங்களை எடுத்துக் கொண்டு, அதை உள்வாங்கி, என் கைவரிசையையும் கலந்து வழங்க முற்படுவேன். குஷ்பூ எடுத்த சீரியலில் முழுக்கமுழுக்க நெகடிவ் கதாபாத்திரம்தான். அதுவும் ஒரு விதமான அனுபவம்தான். இதுபோல அழகன் படத்தில் மம்மூட்டி, பானுப்பிரியா இருவரும் பேசும் இடங்கள் உயர்ந்த மனிதனில் சிவாஜி, ஜானகிக்கு உரைக்கும் வாழ்க்கைக்கான புத்திமதி, பேசும் விதம் எல்லாம் என்னைக் கவர்ந்தவை.'' என்கிறார் ரேவதி சங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.