

இத்தாலியப் பிரதமர் ஸில்வியோ பெர்லுஸ்கோனி. பொதுவாக மிலியனர் என்றால் கோடீஸ்வரன். இவரோ பிலியனர்- மகா கோடீஸ்வரன். பெண்கள் விஷயத்தில் மகா பலவீனமானவர். "புத்தம் புது ரோஜா தினமும்' என்ற கணக்கில் விளையாடிக் கொண்டிருப்பவர்.
இவரது லீலைகளை அவ்வப் போது ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வருகின்றன. "ஒரு நாட்டுக்குத் தலைமை தாங்க அந்தத் தலைவருக்குச் சில நன்னெறிகள் வேண்டுமே, என் கணவருக்கு அது இல்லையே' என்ற ஆதங்கம் விரோனிகா லாரியோவுக்கு.
லாரியோவின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. நூலை எழுதிய மரியா லேடல்லா பத்தொன்பது வருடங்களுக்கு மேலாக லாரியோவை பல்வேறு தருணங்களில் பேட்டி கண்டு, விஷயங்கள் சேகரித்து எழுதியிருக்கிறார்.
"இந்த மனிதனுக்கு செக்ஸ் வெறி அதிகமாகிக் கொண்டு வருகிறது. மதுவுக்கு அடிமையானவர்களைத் திருத்த டி-அடிக்ஷன் மையங்களில் சிகிச்சை தருவது போல, இவரை செக்ஸ் அடிக்ஷன் க்யூர் மருத்துவமனையில் சேர்க்க யோசனை தெரிவிக்கப்பட் டிருக்கிறது' என்று அந்த நூலில் லேடல்லா எழுதியிருக்கிறார்.
இரண்டு வாரங்கள் அங்கே தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டியிருக்கும்.
"விவாகரத்து பெறுவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை'என்று லேடல்லாவிடம் லாரியோ சொல்ல, "ஏன் கணவருடன் பேசிப் பாருங்களேன்' என்று லேடல்லா யோசனை தர, "நீ வேற... கேட்டால் இன்னொரு பொய் சொல்லுவார்... சமீபத்தில் அப்படித்தான் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நான் ஒரு முக்கிய கூட்டத்துக்காக நேப்பிள்ஸ் போக வேண்டும். நாளை விடியற்காலையில் கிளம்புகிறேன் என்று சொன்னார். ஆனால் அவர் போனது, நேப்பிள்ஸýக்கு அல்ல, நவோமி லெடிஸியா என்ற அழகியின் 18-ஆவது பிறந்த நாள் பார்ட்டிக்கு! பொய் கேட்டு சலித்துவிட்டது எனக்கு. போதும்...'' என்ற பதில் கிடைத்தது லேடல்லாவுக்கு.
இந்த செக்ஸ் மன்னருக்கு வயது என்ன தெரியுமா? அப்படியொன்றும் அதிகமில்லை. 72தான்!
இன்னொரு பிரபல ஜோடியின் கதையையும் கேளுங்கள். சாரா பாலின் என்ற பெயர் நினைவிருக்கிறதா? அமெரிக்க அதிபராக ஒபாமா ஜெயித்தாரே, அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்து துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டவர். அலாஸ்காவின் முன்னாள் கவர்னர்.
சாராவுக்கும் அவரது கணவர் டாடுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள்தான். வீட்டில் யார் தட்டு கழுவுவது, யார் குப்பை அள்ளுவது, போன்றவை. சமீபத்தில் டாட் மீது வந்த கோபத்தில் தன் திருமண மோதிரத்தைக் கழற்றி ஏரியில் எறிந்துவிட்டார் சாரா பாலின்.
இவர்களின் மகன் டிராக். வயது 19. இவன் விதிமுறைகளை மீறி பொய் அடையாள அட்டை காட்டி மதுபாட்டில்கள் வாங்கியிருக்கிறான். பிரச்னையில் அவன் சிக்கிக் கொள்ளாமல் இருக்க "நீ போய் ராணுவத்தில் சேர்' என்று யோசனை தந்தார் தாய் சாரா. இதிலும் அப்பாவுக்குச் சம்மதமில்லை.
"சாராவும் டாடும் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலேயே லவ் பண்ணியவர்கள். ஆனால் அந்த லவ் இப்போது இல்லையே. சென்ற சில ஆண்டுகளாகவே அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டதையோ, கைவிரல்களை ஆசையாகப் பின்னிக் கொண்டதையோ நான் பார்க்கவில்லை' என்கிறார் மகள்.
வீட்டில் இப்போது தினமும் டாடு சோபாவில்தான் தூங்கு கிறாராம்!
மலேசியாவில் 32 வயது கார்த்திகா சாரி தேவி ஷுகர்னோ என்ற பெண்ணை ஒரு வேனில் வைத்து சிறைக்குக் கொண்டு போனார்கள். காரணம்? அவருக்கு ஆறு கசையடிகள் கொடுக்கும்படி நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறைவேற்றத்தான்.
கார்த்திகா செய்த குற்றம்?
பீர் குடித்தது. மலேசியாவில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மது அருந்தத் தடையில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் மதுவின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கக் கூடாது. இந்தப் பெண் கார்த்திகா ஒரு பகுதிநேர மாடல் அழகி. சோஷியலாக பீர் குடித்தாள், மாட்டிக் கொண்டாள். கசையடி தண்டனை கிடைத்தது. மேல் முறையீடு செய்யவில்லை அவள். "நான் செய்தது தவறுதான். எனவே மேல் முறையீடு செய்ய விரும்பவில்லை. கசையடி பெறவே விரும்புகிறேன்' என்று தண்டனைக்குத் தயாரானாள் கார்த்திகா.
சிறைக்குப் போகும் வழியில் போலீஸ் ஜீப் திரும்பியது. கிளம்பிய இடத்துக்கே வந்து "கசையடி இப்போது இல்லை. வீட்டுக்குப் போ'என்று போலீஸ் அனுப்பி வைத்தது.
இது ரம்லான் நோன்பு மாதம். நோன்பு முடியும் வரை கசையடி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. "அட, சீக்கிரம் என்னை அடித்து முடியுங்கப்பா'என்கிறார் கார்த்திகா.
"மலேசியா ஒரு பெரும்பான்மை இஸ்லாமிய நாடுதான். ஆனால் மிதவாத முஸ்லிம் நாடு என்று அது கருதப்படுகிறது. இந்நிலையில் ஒரு பெண்ணுக்கு ஆறு கசையடி என்பது அந்த மிதவாத லேபிளை கிழித்து விடுமே' என்று சில மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
மலேசியாவில் ஒரு பெண் கசையடி பெறுவது இதுவே முதல் தடவை!
கிறிஸ்டோபர் டேன்ஃபோர்த், பீட்டர் டாட்ஸ்- இந்த இருவரும் வெர்மான்ட் பல்கலைக்கழகத்தில் கணக்கு பேராசிரியர்கள். பாடம் எடுப்பதைத் தவிர புதுப் புது ஆய்வுகளை மேற்கொள்வது இவர்களின் வழக்கம்.
மேலை நாடுகளில் வார இறுதி என்பது ஜாலியான நாட்கள். சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் அவர்களுக்கு குஷியான நாட்கள்.
ஞாயிறு இரவே சோர்வு தட்டிவிடும். "நாளைக்கு காலையிலிருந்து மறுபடியும் வேலை' என்ற சோர்வு.
ஆகவே வாரத்தில் ரொம்பவும் மோசமான நாள் திங்கட்கிழமை என்றுதானே இருக்க வேண்டும்? அப்படி இல்லையாம். இந்த இரண்டு பேராசிரியர்களின் சமீபத்திய ஆய்வின்படி "வார நாட்களில் மோசமான நாள் திங்கட்கிழமை அல்ல புதன்கிழமை! அது ஏன் அப்படி?'
"சனி, ஞாயிறுகளில் விடுமுறையை ஜாலியாகப் போக்கிய நினைவுகள் திங்கட்கிழமைகளில் நெஞ்சில் நிறைந்திருக்கும். செவ்வாய்க்கிழமை யன்றும் அந்த நினைவுகள் விட்ட குறை தொட்ட குறையாக மனசில் இருக்கும். எங்களின் ஆய்வு புதன்கிழமைதான் வாரத்தின் மோசமான நாள்' என்கிறார்கள்.
கிறிஸ்டோபரும் பீட்டரும் அடுத்து என்ன ஆய்வு மேற்கொள்ளப் போகிறார்களோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.