

""சுயம்வரம் மூலம் மாப்பிள்ளையை தேர்ந்தெடுப்பது பிரபல நடிகைகளின் பேஷனாகி விட்டது. ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கூட, ஆண்களின் துணை இல்லாமல் வாழ முடியாது என்பது உண்மைதான். திருமண வாழ்க்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைப்பவள் நான்.
ஆனால் சில மும்பை ஏஜென்சிகள் சுயம்வரம் நிகழ்ச்சி தொடர்பாக என்னிடம் பேசினார்கள். என் கருத்தை மாற்றிக் கொண்டு சுயம்வரம் மூலம் எனக்கான மாப்பிள்ளையை தேர்வு செய்யலாமா என்ற யோசனை வந்திருக்கிறது. ஆனால் அது தொடர்பான எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை. நடிப்பு, தயாரிப்பு, வியாபாரம் என்று வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஜனவரி மாதம் ஐதராபாத்தில் புதிய நகைக் கடை ஒன்றை திறக்கிறேன் இப்போது அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். மற்றபடி இப்போது எதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லை என்கிறார் நடிகை சோனா.
க்ளாமர் எனக்குப் பிடிக்காது!
"மதுரை சம்பவம்', "வைதேகி' படங்களை முடித்து விட்டார் கார்த்திகா. இனி "தைரியம்', "305 காதல் கடிதங்கள்' ஆகிய படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்.
""நான் நடித்த படங்களின் ரிலீஸ் தாமதமாவது உண்மைதான். உடனுக்குடன் படங்கள் வெளி வராதது குறித்த கவலை எனக்கிருக்கிறது. இப்போது "மதுரை சம்பவம்', "வைதேகி' ஆகிய படங்கள் தாமதம் இல்லாமல் விரைவில் வெளி வருவதில் மகிழ்ச்சி.
இந்த இரண்டு படங்களிலும் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். கிராமத்துக் கதையாக இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு கதை அமைப்பை கொண்டவை. இரண்டு படங்களிலும் தாவணி அணிந்து நடித்துள்ளேன். நிச்சயம் நடிப்பிலும் வித்தியாசம் இருக்கும்.
இப்போது நடித்து வரும் "தைரியம்', "305 காதல் கடிதங்கள்' இரண்டு படங்களும் எனக்கு புதிய அனுபவமாக இருக்கும். இந்த படங்களில் மாடர்ன் உடைகளில் நடிக்கிறேன்.
எனக்கு க்ளாமர் பிடிக்காது என்பது உண்மைதான். ஆனால் வந்த வாய்ப்புகள் எல்லாமே க்ளாமர் வேடங்களாக இருந்தன. மறுத்து வந்தேன். மாடர்ன் உடையில் வந்தாலும் அதில் விரசம் இருக்காது. நீச்சல் உடையில் நடிப்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். எனக்கு அது பொருத்தமாக இருக்காது. நீச்சல் உடையில் நடிப்பது இப்போது உள்ள நடிகைகளின் பேஷனாகி விட்டது. நீச்சல் உடையில் நடிப்பதால் மட்டுமே ரசிகர்கள் மனதில் நின்று விட முடியாது'' என்றார் கார்த்திகா.
யாரென்று தெரியும்!
பரபரப்பில்லாமல் வீட்டில் இருந்தாலும் நடிகைகள் மீதான வதந்திகள் மட்டும் அவ்வப்போது வெளிவருவது சாதாரணம். ஆனால் ரம்பா சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வதந்தி பரவி இருக்கிறது. இது பற்றி அவரிடமே கேட்ட போது...
""சினிமா நடிகைகளின் வாழ்க்கையில் ஆயிரம் ஏற்ற தாழ்வுகள் உண்டு. அது போல்தான் நானும் பல ஏற்ற தாழ்வுகளைப் பார்த்து விட்டேன். ஆனால் நான் தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்படுவதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஒரு முறை நான் சாப்பிட்ட உணவு பாய்சன் ஆகிவிட்டது. பின்னர் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஆனால் தற்கொலைக்கு முயன்றது இல்லை.
இந்த சம்பவத்தைதான் திரித்து தற்கொலைக்கு முயன்றதாக வதந்தியை பரப்பினார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும். அவர்களும் நடிகைகள்தான். அவர்களின் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார்கள். அதனால் நானும் அந்தப் பிரச்னையை விட்டு விட்டேன்.
தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிராசத்துடன் நான் நடித்துள்ள "குயிக் கன் முருகன்' படம் பற்றிக் கருத்துக் கூறிய ராஜேந்திர பிரசாத், "நான் முக்கியமில்லாத கேரக்டரில் நடித்துள்ளதாக' கூறியிருக்கிறார். அது முற்றிலும் தவறு. இதற்கு பதிலடி கொடுப்பது எப்படி என்பது எனக்கு தெரியும். அந்த சமயம் வரும் வரை காத்திருக்கிறேன்'' என்கிறார் நடிகை ரம்பா.
தமிழ் வானில் நான்!
""சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டே சினிமாவில் பாடல் எழுத வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தேன். நீண்ட போராட்டத்திற்கு பிறகு இயக்குநர் எழில் "அமுதே' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பாடல்களும் நன்றாக இருந்தன. இருப்பினும் என்னை பற்றி யாரும் பேசவில்லை. அதன் பிறகு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை பயன்படுத்திப் பாடல்கள் எழுதினேன்.
இயக்குநர் ராசுமதுரவன் "பாண்டி' படத்தில் வாய்ப்பு தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் எழுதக் கூடிய சூழ்நிலை அமையவில்லை. பின் "மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் களவாணியே... பாடல் எழுத வாய்ப்பு தந்தார். அதுவும் பேசும் படியான வாய்ப்பு.
இப்போது என் வாசலில் ஆயிரம் வாய்ப்புகள். "கோரிப்பாளையம்' "ஊலல்லா', "சிந்தை மயங்குதே', "பேரின்பம்', "மிளகா', "எல்லை' ஆகிய படங்களில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
களவாணியே... பாடல் என் பெயரையும் தமிழ் வானில் எழுதியதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார் பாடலாசிரியர் தணிகாசலம்.
நடிப்பதிலே ஓர் அர்த்தம்!
சாயாசிங் மும்பையைச் சேர்ந்த ஹார்டுவேர் தொழிலதிபர் ஒருவரை மணக்கப் போகிறார் என சமீபத்தில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இது பற்றி நடிகை சாயசிங்கிடம் கேட்ட போது..
""சினிமாவில் நான் ஒன்றும் தொடர்ந்து நடிப்பவள் அல்ல. இப்போதும் என் கையில் எந்தப் படங்களும் இல்லை. அதற்கு காரணம் எனக்கு ஏற்ற கதைகள் அமையவில்லை. நான்கு பாட்டுக்கு க்ளாமராக ஆடி விட்டுப் போவதை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் அதன் காரணம். நடிப்பதற்கு ஓர் அர்த்தம் வேண்டும் என விரும்புகிறவள் நான்.
அதனால்தான் வந்த ஓரிரு வாய்ப்புகளையும் மறுத்து விட்டு நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். "வல்லமை தாராயோ' படம் எல்லோராலும் பேசப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கையில் படம் இல்லா விட்டால் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்ன? பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால்தான் இந்த வதந்தி பரவியிருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு திருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை. சாயாசிங் என்ற ஒரு நடிகை இருந்தாள் என்ற பேச்சு பல வருடங்களுக்குப் பின்னும் இந்த காற்றில் கலக்க வேண்டும். திருமணம் செய்வதாக இருந்தால் வெளிப்படையாக அறிவிப்பேன்'' என்றார் சாயாசிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.