
பரணி நட்சத்திரம் மேஷம் ராசி மற்றும் செவ்வாய்க் கிரகத்துடன் தொடர்பு கொண்டது.
மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை வருடத்தில் மிகவும் நல்ல நாட்கள். இந்தக் காலத்தில் பரணி நட்சத்திரம் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகளைப் பூமியின் பக்கம் அனுப்பும். அந்தக் கதிர்வீச்சுகள் மனிதனுக்கு நலம் தரும் கதிர்களாக இருக்கும்.
நெல்லி மரம் பரணி நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளையெல்லாம் சுவாசித்து தன் உடலுக்குள் ஈர்த்து சேகரித்து வைக்கும் தன்மை கொண்டது.
பரணி நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனிதனின் உடலிலும், உள்ளத்திலும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். இதற்குப் பரணி நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷம் நீங்க இவர்கள் தினசரி அரை மணிநேரம் நெல்லி மரத்தைக் கட்டிப்பிடிக்கலாம். அல்லது அரை மணிநேரம் நெல்லி மரத்தடியில் உட்காரலாம். இதனால் நெல்லி மரத்தில் நிறைந்திருக்கும் பரணி நட்சத்திரத்தின் நல்ல கதிர் வீச்சுகள் மனித உடலுக்கு மாற்றலாகி தோஷமும், நோய்களும் நீங்கிவிடும். இவர்கள் நெல்லிக்காயை ஊறுகாயாகவும், லேகியமாகவும், வற்றலாகவும் அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது.
தொடர்புள்ள நோய்கள்:
முதுமை நோய்கள், வயிற்று எரிச்சல், முடி உதிரல், அஜீரணம், மலச்சிக்கல், உடல் சூடு, சிறு நீர்க் குறைவு, வயிற்றுப் புண், ஜலதோஷம், மனப்பதட்டம், குமட்டல், வாந்தி, கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் போன்றவையாகும்.
யுனானி மருத்துவர்கள் நெல்லிக்காயைக் கொண்டு முரஃப்பா ஆமிலா, ஜவாரிஷ் ஆமிலா, ஷர்பத் ஆமிலா என்ற பெயரில் மூன்று மருந்துகள் தயாரித்து மேற்கண்ட நோய்களுக்குத் தருகிறார்கள். இதனால் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு அதிகமான பயன்கள் கிடைக்கின்றன.
பயன்கள்:
உடலின் உள்ளுறுப்புகளுக்கும் பயன்தரும். வயிற்றுக்கு வலிமை சேர்க்கும். இரத்த, பித்தக் கொதிப்பைத் தணிக்கும். கண்ணுக்கு ஒளியூட்டும். முடி உதிரலைத் தடுக்கும். முடியைக் கருமையாக்கப் பயன்படும். மலத்தைக் கெட்டிப்படுத்தும். நினைவாற்றலை வளர்க்கும். பேதியைக் கட்டுப்படுத்தும். தாகத்தைப் போக்கும்.
இத்ரீஃபல் வகை யுனானி மருந்துகளைத் தயாரிக்கும் போது நெல்லிக்காயை அவசியம் சேர்க்க வேண்டும் என்பது ஒரு பொதுவான நியதி. திரிபலா என்று அழைக்கப்படுகின்ற கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் கூட்டு மருந்து பல கொடிய நோய்களுக்கு நிவாரணம் தருகிறது.
நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுப் பிறகு ஒரு தம்ளர் பால் குடித்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். காய வைத்த நெல்லிக்காய், தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களை சம அளவில் எடுத்து நன்கு அரைத்துப் பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இப்பொருட்களைத் தலா ஒரு டீ ஸ்பூன் வீதமும், தேன் மூன்று டீ ஸ்பூனும் சேர்த்து கலந்து சாப்பிட்டு அதனுடன் ஒரு தம்ளர் பால் குடிக்க வேண்டும். இப்படி தினசரி சாப்பிட்டு வந்தால் வயிற்று எரிச்சல், வயிற்றில் அமிலத்தன்மை மிகுந்து விடுதல், வயிறு புடைத்தல் போன்றவை கட்டுப்படும்.
மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள். சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள். பெண்களின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வரும் எரிச்சல், வலி, புண் போன்றவற்றிற்கு நெல்லிக்காய் மிகச் சிறந்த பலன் தருகிறது. இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லிக்காய், திராட்சை சாறுடன் சேர்த்து அரைத்துக் கொடுப்பது உண்டு. நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும்.
நெல்லிக்கனிச்சாறு, திப்பிலி, தேன், சர்க்கரை இவற்றை கலந்து கொடுத்தால் நல்ல பசி எடுக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் போகும். இரத்தச் சோகை கட்டுப்படும். இதுபோன்ற எண்ணற்ற பலன்கள் நெல்லிக்காயில் இருப்பதாக மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.