
அலங்காரமான மேடை இல்லை. ஆர்ப்பாட்டமான அணிகலன்கள் இல்லை. பளபளக்கும் ஆடைகள் இல்லை. மேஜை, நாற்காலி, சோபா செட், பிரமாண்ட வீடு என்று எதுவும் இல்லை. வெகு யதார்த்தமாய்... பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவமாய் விரிகிறது காட்சி.
பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம், ராகிங்கிற்கு எதிரான போராட்டம் என்று சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை தெரு நாடகமாக அரங்கேற்றுகின்றனர் கோவை பீளமேட்டில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை மாணவர்கள்.
இதற்காக "கூத்து மன்றம்' என்ற அமைப்பை கடந்த ஆகஸ்ட்டில் துவக்கியுள்ளனர். இதில் மாணவ, மாணவிகள் சுமார் 25 பேர் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இவர்களுடன் காட்சித் தொடர்பியல் துறை ஆசிரியர்களும் பங்கேற்று, நாடகங்களை அரங்கேற்றி வருவதுதான் ஹைலைட்!.
""விஸ்காம் மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் குறும்படம் இயக்குதல், விளம்பரப் படம் தயாரித்தல், நாடகவியல் போன்ற பல சப்ஜெக்ட்டுகள் உள்ளன. மாணவர்களின் அடிப்படைத் திறமையை நுண்கலைகள் மற்றும் நிகழ்த்து கலைகள் மூலமாக வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கம். மாணவர்களிடையே உள்ள நடிப்புத் திறமை, தயாரிப்பு மற்றும் இயக்குநர் திறமையை பட்டை தீட்டும் முயற்சியாகத் தொடங்கப்பட்டதுதான் கூத்து மன்றம். அதன் மூலம் சமூக விழிப்புணர்வுக் கருத்துகளை நாடகமாக அரங்கேற்றி வருகிறோம்'' என்கிறார் காட்சித் தொடர்பியல் துறைத் தலைவர் ஜெயராஜ்.
கூத்து மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் விரிவுரையாளர் என்.சுப்ரமணியம்.
""நாடகம் அரங்கேற்றும்போது எங்களுக்குள் ஆசிரியர், மாணவர்கள் என்ற வேறுபாடே ஏற்படுவதில்லை. நாடகத்தின் சில பாத்திரங்களில் மாணவர்களுடன் இணைந்து நாங்களும் நடிப்பதால், நண்பர்களைப்போலப் பழக முடிகிறது. நாடகத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் முடிவு செய்து, இப்படியிப்படி வரும், இதுபோல்தான் பேச வேண்டும் என்று முடிவு செய்துவிடுகிறோம். வசனம் எழுதி வைத்து மனப்பாடம் செய்வதில்லை. நாடகம் நடைபெறும் இடத்தில் அவரவருக்குரிய வசனத்தை அவரவர் இயல்பாகப் பேசி விடுவர். இதனால் மேடையில் அரங்கேறும் நாடகம்போல் தோன்றாமல், நம்மிடையே தினசரி நடக்கும் சம்பவம்போல் தோன்றுகிறது'' என்று விவரிக்கிறார் விரிவுரையாளர் சுப்ரமணியம்.
இந்த மாணவர்கள் அரங்கேற்றும் நாடகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், முழுக்க முழுக்க மனித ஆற்றலைப் பயன்படுத்துவதுதான். உதாரணமாக -ஒரு காட்சி ஒரு வீட்டில் நடப்பதாக இருந்தால், மாணவர்களே ஒரு வீட்டைப்போல் கைகளை உயர்த்தி நின்று கொள்கிறார்கள். வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதுபோல் ஒரு காட்சியென்றால், கதவாக நிற்கும் ஒரு மாணவரை ஒருவரை நகர்த்திவிட்டு வெளியே வருவதுபோல் காட்சி அமைக்கிறார்கள்.
நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதுபோல் காட்சியென்றால், நாற்காலியாக ஒரு மாணவர் குனிந்து கொள்ள, அவர் மேல் மற்றொரு மாணவர் அமர்ந்திருப்பதுபோல் சித்தரிக்கிறார்கள்.
""சாலை விபத்துகளைத் தவிர்ப்பது, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது, நுகர்வோர் விழிப்புணர்வு, விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு சிந்தனைகள், பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான விழிப்புணர்வு பற்றியெல்லாம் நாடகங்களை அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளோம். ஒரு சில தனியார் அமைப்புகளும் எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர முன் வந்துள்ளார்கள். எங்கள் கல்லூரி முதல்வரும், நிர்வாகமும் இதற்குப் பெரிதும் ஒத்துழைப்புக் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள்'' என்கிறார் பேராசிரியர் ஜெயராஜ்.
சமூக சிந்தனைக் கருத்துக்களை வீதிக்கு கொண்டு வந்து சேர்க்கும் மாணவர்களின் ஆர்வத்துக்குப் பாராட்டுத் தெரிவித்து விடைபெற்றோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.