

"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்' என்றார் பாரதியார்.
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்ற பழமொழியைவிட பசியின் கொடுமையை விளக்க வேறு விளக்கம் தேவையில்லை.
எனவேதான், தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றார்கள் நம் முன்னோர்கள்.
இன்று தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் அரசு சார்பில் உபயதாரர்களைக் கொண்டு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஆனால், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனிமனிதராக நின்று தனது சொந்தப் பணத்தாலும், தெரிந்தவர்களின் உதவியாலும் தினமும் அன்னதானம் வழங்கிவருகிறார்.
அன்னதானப் பேராசிரியரான அவரது பெயர் மாடசாமி என்ற விஜயநாராயணசாமி.
சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக உள்ள அவர் மாணவர்களின் அறிவுப் பசிக்கு உணவளிப்பதோடு நின்றுவிடவில்லை.
தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள விஜயநாராயணத்தில் வயிற்றுப் பசியோடு வருபவர்களுக்குத் தினமும் மூன்றுவேளையும் அன்னதானம் வழங்கிவருகிறார். இதற்காக ஸ்ரீ விஜயநாராயண தர்மசாலா என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
காலணி அணியாத பாதம், மடித்து விடப்படாத முழுக்கை சட்டை, எப்போதும் புன்னகை தவழும் முகம், கருணை பொழியும் கண்கள், நெற்றியில் பெருமாளின் திருநாமம், எவ்வளவு பெரிய தவறு செய்த மாணவரையும் தனது கனிவான பேச்சினால் திருந்தச் செய்யும் வல்லமை இவைதான் அவரின் அடையாளங்கள்.
அவரோடு பேச ஆரம்பித்தோம்.
அன்னதானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?
சிறு வயதில் இருந்தே பசித்தவர்களைக் கண்டால் எனக்குவேதனையாக இருக்கும்.
அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன் குறித்து ராமலிங்க அடிகளார் கூறும்போது, அன்னதானம் செய்வதால் நீடித்த ஆயுள் கிடைக்கும், தீராதநோய்கள் தீரும், புத்திரபாக்கியம் கிடைக்கும், விவசாயம், வியாபாரம் அபிவிருத்தியடையும், அன்னதானமே ஆண்டவனை அடையும் வழி என்று கூறியுள்ளார்.
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என உணவு வழங்கியவரை உயிர் கொடுத்தவருக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்னதானப் பணியை எப்போது தொடங்கினீர்கள்?
கடந்த 35 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவருகிறேன். நான் படித்து கல்லூரிப் பேராசிரியராக வேலைக்கு வந்தவுடன் முதல் மாத ஊதியம் முழுவதையும் அன்னதானத்திற்காகத்தான் செலவுசெய்தேன்.
எனது மாத ஊதியத்தில் ஒரு பகுதியையும், நண்பர்கள், தெரிந்தவர்கள் அவர்களாகவே விரும்பி வழங்கும் நிதியைக் கொண்டும் தொடர்ந்து அன்னதானம் செய்கிறேன்.
தர்மசாலா குறித்து...?
வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள மனோன்மணீஸ்வரர் திருக்கோயில் அருகே விஜயநாராயண தர்மசாலா தொடங்கப்பட்டுள்ளது.
பெüர்ணமிதோறும் மனோன்மணீஸ்வரர் கோயிலுக்கு வரும் லட்சம்பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். மற்ற நாள்களில் தினமும் வெளியூரில் இருந்துவரும் பக்தர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்குகிறோம்.
மற்ற ஊர்களிலும் அன்னதானப் பணி செய்கிறீர்களா?
ஆண்டுக்கு ஒருமுறை சித்திரைமாதம் திருக்கோளூரிலும், ஆனி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரிலும், ஆவணி மாதம் சங்கரன்கோவிலிலும், கார்த்திகை மாதம் திருக்குறுங்குடியிலும், மாசி மாதம் ஆழ்வார்திருநகரியில் 12 நாள்களும், சிவகாசி அருகேயுள்ள காக்கிவாடன்பட்டியில் தமிழ்மாத முதல் சனிக்கிழமைதோறும் அன்னதானம் செய்கிறோம்.
ஆன்மிகம், சமூகப் பணி குறித்து...?
புதிதாகக் கோயில் கட்டினால் விநாயகர், நந்தி, சிவலிங்கம் ஆகிய விக்கிரங்களைத் தானமாக அளித்துவருகிறேன். புதிதாக விமானம் கட்டினால் கோபுரக் கலசங்கள் வழங்குகிறேன். மாதந்தோறும் இலவச கண் மருத்துவ முகாம் நடத்துகிறேன்.
மேலும் பால்வற்றிய முதிய பசு மாடுகளை விலைகொடுத்து வாங்கி பசு பாதுகாப்பு நிலையங்களுக்கு அனுப்பி வருகிறேன்.
விக்கிரகங்கள் பெறவும், முதிய பசுமாடுகளைக் கொடுக்கவும் விரும்பினால் 98421 93453 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
எதிர்கால லட்சியம்?
இந்த அன்னதானப் பணி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடரவேண்டும். அதற்கான பணிகளை செய்யவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.