இலக்கியம்: விருதைத் தேடிச் செல்வதில்லை!
கவிதை ரசனை இல்லாத மனிதர்களே உலகில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மனிதனின் வாழ்வில் கவிதை இரண்டற கலந்து உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. கவிதைகளில் மரபுக்கவிதை, நவீன கவிதை என்ற இருவேறு வடிவங்கள்


கவிதை ரசனை இல்லாத மனிதர்களே உலகில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மனிதனின் வாழ்வில் கவிதை இரண்டற கலந்து உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
கவிதைகளில் மரபுக்கவிதை, நவீன கவிதை என்ற இருவேறு வடிவங்கள் இருந்த போதும் நவீன கவிதையை தனது வசமாக்கி அந்த கவிதைக்காகவே கலைமாமணி விருதும் பெற்றுள்ளார் கலாப்ரியா.
இடைகாலில் உள்ள அவரது கனவு இல்லத்தில் (கவிதை இல்லம்!) அவரைச் சந்தித்தோம். இனி அவருடன்..
உங்களைப் பற்றி?
திருநெல்வேலி டவுண்தான் சொந்த ஊர். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள இடைகாலில் வசித்து வருகிறேன். எம்.எஸ்.சி. படித்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். மனைவி சரஸ்வதி இங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். மகள் அகிலாண்டபாரதி மருத்துவராக இருக்கிறார். இன்னொரு மகள் தெய்வநாயகி பொறியியல் படித்து வருகிறார்.
உங்கள் இயற்பெயரே கலாப்ரியா தானா?
இயற்பெயர் டி.கே.சோமசுந்தரம். எனது தோழியின் பெயர் கலா. அவர் நினைவாகவும், கலைமேல் பிரியம் கொண்டவன் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையிலும் கலாப்ரியா என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டேன். பொதுவாகவே சொந்தப் பெயரில் எழுதுவதற்கு சில சமயங்களில் கூச்சமாக இருக்கும். அதனைத் தவிர்க்கவே புனைப்பெயர்.
கவிதை ஆர்வம் வந்தது எப்படி?
பள்ளி கல்லூரி நாட்களில் அனைவருக்குமே கவிதை ஆர்வம் வரும். எனக்கும் அந்த காலகட்டத்திலேயே கவிதை ஆர்வம் வந்தது. 1967 களில் திராவிட கருத்துகள் குறித்த கவிதைகள் வலம் வந்த நேரம். அந்த கவிதைகள்தான் எனக்குள் கவிதை தாகத்தை ஏற்படுத்தின என்று சொல்ல வேண்டும்.
உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யார்?
சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் வண்ணதாசன்தான் எனக்கு ஞானத்தந்தை. மேலும் திருநெல்வேலி இந்துக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் சுப்பிரமணியனும் எனது கவிதைக்கு உரமிட்டவர்.
மரபுக்கவிதைகளை விட்டு நவீன கவிதைகளைத் தேர்வு செய்தது ஏன்?
கவிதைகளின் நோக்கமே கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான். மரபுக் கவிதையைப் பொறுத்தவரை வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. இதனால் சொல்ல வேண்டிய விஷயங்களின் கூர்மை சில சமயங்களில் குறைந்து போய்விடுவதாகக் கருதுகிறேன். நவீன கவிதைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை வார்த்தை ஜாலமின்றி சொல்ல முடிகிறது என்பதால் அதைத் தேர்வு செய்தேன். மற்றபடி மரபுக்
கவிதை என்பது கவிதையின் மற்றொரு வடிவம் அவ்வளவுதான்.
வெளிநாட்டுப் பயணம்?
சிங்கப்பூரில் நடைபெற்ற 4 மொழி கவிஞர்களின் கவிதைப் போட்டியில் நடுவராகப் பணியாற்றினேன். இதைப் பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
அது போல் போபாலில் அரசு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பாக நான் கலந்து கொண்டேன். இதில் 18 மொழி கவிஞர்களும் கலந்து கொண்டனர். இதில் நாங்கள் கவிதைகளைப் பரிமாறிக் கொண்டோம். சிறப்பான கவிதைகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து அவற்றை அரசு புத்தகமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கவிதைகள் சார்ந்த உங்களின் வேறு பணிகள்?
"பதிவுகள்' என்ற இலக்கிய பயிற்சிப் பட்டறையை குற்றாலத்தில் துவக்கி நடத்தி வருகிறேன். இதில் கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதைகள் குறித்து விமர்சிக்கிறார்கள். மேலும் பிற மொழிக் கவிதைகளை தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வதுடன், நமது கவிதைகளை பிற மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வருகிறேன்.
வாங்க விரும்பும் விருது?
விருதை தேடி கவிஞர்கள் எப்போதும் செல்வதில்லை. ஆனால் எனது பெயர் சாகித்ய அகாதமி விருது பட்டியலுக்கு சென்றதாகவும், இறுதியில் அது என்னவாயிற்று என்றும் தெரியவில்லை எனவும் நண்பர்கள் என்னிடம் கூறுவதுண்டு. விருது பெற்றவர்கள் கூறும் கருத்தை மற்ற இலக்கியவாதிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் விருதின் நன்மை.
திரைப்படப் பாடல் எழுதுவீர்களா?
எனது கருத்திற்கும், திரைப்பட உலகின் எண்ணத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லாத நிலையில் திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...