
மிருக சீரிஷம் நட்சத்திரம் மிதுனம் ராசி மற்றும் புதன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மே 21 முதல் ஜுன் 20 வரை அதிகமாகப் பயன்தரும் நாட்களாகும். இந்தக் காலங்களில் மிருக சீரிஷம் நட்சத்திரம் அதிக அளவிலான நல்ல மின்காந்த கதிர்வீச்சுகளை பூமிக்கு அனுப்பி வைக்கின்றது.
மனிதனின் ஆரோக்கியத்தையும், மனநிலையை ஆட்சி செய்யும் நட்சத்திரங்கள் நன்மையும் செய்கின்றன. தீமைகளும் செய்கின்றன. சில காலங்களில் நச்சுத்தன்மை கொண்ட கெட்ட மின்காந்த கதிர் வீச்சுகளும் வெளிப்படுகின்றன. அதனால் பல கொடிய நோய்களும், தவறான மனநிலைகளும் உருவாகின்றன. இதற்கு நட்சத்திர தோஷம் என்பார்கள்.
இந்த தோஷத்தை நீக்கி உடலும் உள்ளமும் ஆரோக்கியம் தரும் நற்குணங்களை கருங்காலி மரத்துக்கு இறைவன் வைத்திருக்கின்றான். கருங்காலி மரம் மிருக சீரிஷம் நட்சத் திரத்தின் நல்ல கதிர் வீச்சுக்களைத் தன் உடலில் அடைத்துக் கொண்டு அதை தொடுபவர்களுக்கும், கட்டிப் பிடிப்பவர்களுக்கும் அள்ளிக் கொடுக்கின்றது. தினசரி அரை மணி நேரம் இம்மரத்தைக் கட்டிப் பிடிக்கலாம் அல்லது இதன் நிழலில் உட்காரலாம். இதனால் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தலாம். இதன் காரணமாக கெட்ட கதிர்வீச்சுகள் வெளியேறிவிடுகிறது. புத்துணர்வு கிடைக்கிறது.
மருத்துவ குணங்கள் : யுனானி, சித்த மருத்துவர்கள் இம்மரத்தின் அடித் தண்டு, வேர்ப்பட்டை, பூக்கள், பிசின் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத் துகிறார்கள். மரப்பட்டையை மன நோய், கண்நோய், இரத்தம் சம்பந்தப் பட்ட நோய்களுக்குத் தருவார்கள்.
மரத்தூள் ஜுரம், பேதி, வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி, வலி, வீக்கம், உடல் பலவீனம், வெண்குஷ்டம், குஷ்டம், தோல் அரிப்பு,அழுகிய புண், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பயன் தருகிறது.
சீமைக் காசிக்கட்டி என்னும் இதன் பிசின் வெற்றிலையிலும், பான் மசாலாவிலும் வைத்துச் சாப்பிடுவார்கள். பாக்கில் வைத்து சிலர் சாப்பிடுவார்கள். இதனால் பற்களில் இரத்தக் கசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலையைப் போக்குகிறது. வாய்ப்புண்ணை சீராக்குகிறது.
பயன்கள் : கருங்காலி மரத்தின் கட்டைப் பகுதி, அதிலிருந்து எடுக்கப்படுகின்ற சாறு, இதைக் காய வைத்து, அரைத்துத் தயாரிக்கப்படுகின்ற கருங்காலி கட்டைத்தூள் அதனைக் கொண்டு செய்யப்படுகின்ற கஷாயம் போன்றவற்றைக் கொண்டு மருந்தாகக் கொடுத்து பலவகையான நோய்களைக் குணப்படுத்துகின்றனர். கருங்காலி மரத்தின் கட்டையில் அடங்கியுள்ள டானின், மியூசிலேஜ். ஃபிளேவினாய்டுகள், ரெசின் போன்ற வேதிப் பொருட்கள் மருத்துவரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.
குறிப்பாக, தோல் நோய்களான சொறி, சிரங்கு, நமைச்சல், எரிச்சல், தீப்புண், வெட்டுக் காயங்கள், வடுக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள், சீழ்க்கட்டிகள், தொற்றுப் பாதிப்புகளைப் போக்க கருங்காலி கட்டைத் தூள் பெரிதும் பயன்படுகிறது. இதனை கஷாயமிட்டு உள்ளுக்கும், மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுத்துவார்கள். சில வகை தோல் தழும்புகளுக்கு இதைப் பசையாக்கிப் பூசுவார்கள். மேலும் இவை தொழுநோய், சர்க்கரைப் புண், ரத்தக்கட்டிகளுக்கும் நல்ல மருந்தாக விளங்குகிறது.
இரத்தப்போக்கு : இவை மூக்கில் இரத்தம் வடிதல், உடல் சூடு அதிகரித்து நரம்புகள் வெடித்துவிடுதல், பெண்களின் அதிக அளவிலான மாதவிடாய்ப்போக்கு, வெள்ளைப் படுதல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த நிவாரணம் தருகிறது. உள் மூலம், வெளிமூலம், ரத்தக் கொதிப்பு, உடல் உஷ்ணம் அதிகரித்தல் போன்றவற்றிலும் நல்ல பலன் தருகிறது.
வயிற்றுப் புண், வாய்ப்புண், ஆறாத, நாள்பட்ட காயங்கள், தொண்டை வறட்சி, தொண்டை கரகரப்பு, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, உடல் பருமன் பிரச்னைகளில் இதனை அரைத்து பவுடராகவோ, கஷாயமிட்டோ அல்லது பிற மருந்துகளுடன் கலந்தோ கொடுப்பார்கள். இதனை உள் மருந்தாக 300 மி.கி. முதல் 900 மி.கி. வரையில் பயன்படுத்தலாம்.
ஆனால், தொடர்ந்து 2-3 வாரங்களுக்கு பயன்படுத்துவது பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதிக அளவில் பயன்படுத்தி வந்தால் சிறுநீரகம் செயல் இழக்கும் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது.
கருங்காலி மரம் வாணியம்பாடியில் உள்ள முகல் கார்டனில் வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. அதை அங்கே காணலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.