திரைக்கதிர்: என்ன கோபம் சொல்லு பாமா...

சூர்யா நடித்த "ஸ்ரீ' படத்துக்கு இசையமைத்தவர் முரளிதரன். இவர் தன்னுடைய பெயரை "முர்' என சுருக்கி அதோடு தன்னுடைய உதவியாளர் ஷக்தியின் பெயரிலிருந்து "ஷக்'கை சேர்த்துக்கொண்டு முர்ஷக் என்ற பெயரில் இருவரும் இ
திரைக்கதிர்: என்ன கோபம் சொல்லு பாமா...

சூர்யா நடித்த "ஸ்ரீ' படத்துக்கு இசையமைத்தவர் முரளிதரன். இவர் தன்னுடைய பெயரை "முர்' என சுருக்கி அதோடு தன்னுடைய உதவியாளர் ஷக்தியின் பெயரிலிருந்து "ஷக்'கை சேர்த்துக்கொண்டு முர்ஷக் என்ற பெயரில் இருவரும் இணைந்து "காதல் மெய்ப்பட' படத்துக்கு இசையமைக்கிறார்கள். விஷ்ணுப்ரியன், மதுமிதா நடிக்கும் இந்தப் படத்துக்காக "குழந்தையும் தெய்வமும்' படத்தில் இடம்பெற்ற "என்ன கோபம் சொல்லு பாமா...' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். தனது திருமணத்துக்கு முந்தைய இந்தப் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு க்ளாமராக நடித்துள்ளார் மதுமிதா.



காமெடி தோரணை; ஆக்ஷன் தோரணை!

  விஷால், ஸ்ரேயா நடித்து வரும் "தோரணை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. மௌலி, ஷாஜிகைலாஷ், பூபதிபாண்டியன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய சபா அய்யப்பன் இந்தப் படத்தை இயக்குகிறார். இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் "தோரணை' பற்றிக் கேட்டபோது...

  ""மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூரைச் சேர்ந்த நாயகன், இளம் வயதில் தொலைந்துபோன தன்னுடைய அண்ணனைத் தேடி சென்னைக்கு வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பெரிய தாதாக்களைச் சந்திக்கிறார். அதையடுத்து நடக்கும் சம்பவங்களை காமெடி, ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறோம். ஸ்ரேயா இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் காமெடியில் அசத்தியிருக்கிறார். முதல் பாதியை காமெடிக்கும் இரண்டாவது பாதியை ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறோம். 2009-ம் ஆண்டின் தரமான கமர்ஷியல் ஹிட் படமாக அமையும்'' என்றார் சபா அய்யப்பன்.

முரட்டுக்காளை

  தான் நடித்த "பெருமாள்', "தீ' படங்கள் தனது முந்தைய படங்களைப் போல பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் தற்போது நடித்து வரும் "முரட்டுக்காளை' ரீமேக் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் சுந்தர்.சி. காரணம் ரஜினியின் "முரட்டுக்காளை' கதையும் படத்தை இயக்கும் கமர்ஷியல் இயக்குநர் செல்வபாரதியும்தான் என்கிறது பட வட்டாரம். வழக்கமாகத் தன்னுடைய படங்களில் பெரிய நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்காத சுந்தர்.சி இந்தப் படத்தில் சினேகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ரஜினியின் "பில்லா'வை விட "முரட்டுக்காளை' வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதேபோல "பில்லா' ரீமேக் பெற்ற வெற்றியை விட "முரட்டுக்காளை' ரீமேக் படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் படத்தைத் தயாரிக்கும் சூர்யா பிக்சர்ஸ் குணாநிதி அமிர்தம்.

லோ பட்ஜெட் உற்சாகம்!

  பெற்றோரை மதித்து நடந்தால் வாழ்க்கையில் எல்லா வளமும் வந்து சேரும் என்ற கருத்தை மையமாக வைத்து "தோழி' என்ற படம் தயாராகி வருகிறது. இதில் "பிறப்பு', "மிட்டாய்' படங்களில் நடித்துள்ள பிரபா கதாநாயகனாக நடிக்கிறார். பிகாரைச் சேர்ந்த பிரபல விளம்பர மாடல் அர்ச்சனா சர்மா கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் இளங்கோ லட்சமணனிடம் பேசியபோது...

  ""படம் முழுக்க நான்கு கதாபாத்திரங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நட்பையும் காதலையும் குடும்பப் பின்னணியில் வித்தியாசமாகக் கூறியிருக்கிறோம். எஸ்.பி.ராஜ்பிரபுவின் வசனமும் ஆர்.சங்கரின் இசையும் படத்துக்கு உயிரோட்டமாக அமையும். சமீப காலங்களில் தரமான சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுதான் இந்தக் கதையைப் படமாக்க ஊக்கமளித்தது'' என்றார்.

தொடர்பு எல்லைக்கு வெளியே...

  "கொடைக்கானல்' படத்தில் நடித்த பூர்ணா தற்போது "கந்தகோட்டை' என்ற படத்தில் நகுலனுடன் நடித்து வருகிறார். அஸின் போல இருக்கிறார் என்று ஒரு விழாவில் விஜய் புகழ்ந்த பூர்ணாவுக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் "கம்யூனிகேஷன் கேப்' என்கிறது கோலிவுட் வட்டாரம். அதாவது பூர்ணாவிடம் யாராவது அவருடைய மொபைல் எண்களைக் கேட்டால் ஒன்றுக்கு மூன்று மொபைல் எண்களைக் கொடுக்கிறார். ஆனால் ஃபோன் செய்தால் ஒரு ஃபோனைக் கூட "அட்டெண்ட்' செய்வதில்லை. பிறகு எப்படி தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரிடம் கதை சொல்லி படத்தில் நடிக்க வைக்க முடியும்? ஒரு படம் மட்டுமே நடித்ததற்கே இப்படி! இதே நிலை தொடர்ந்தால் பூர்ணாவைத் திரையுலகிலிருந்து பூரணமாக ஒதுக்கிவிடுவார்கள்'' என்கிறது கோலிவுட் வட்டாரம்.

டாக்டர் தனன்யா?

  "குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்' படத்தில் அறிமுகமான புதுமுகம் ஸ்வாதி. ஏற்கெனவே "வான்மதி' ஸ்வாதி, "சுப்ரமணியபுரம்' ஸ்வாதி இருப்பதால் தன்னுடைய பெயரை தர்ஷனா என மாற்றினார். படம் வெளியாகி அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தாலும் நியூமராலஜிப்படி தன்னுடைய பெயரை தனன்யா என மீண்டும் மாற்றிக்கொண்டுள்ளார். பெயர் மாற்றத்தால் புதிய வாய்ப்புகள் வந்ததா என கேட்டால்...

  ""எவ்வளவு பெரிய நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் இன்னும் 6 மாதங்களுக்கு நடிக்க மாட்டேன்'' என்று கூறும் தனன்யா எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வருவதால் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

இசை ஞானியின் நடிப்பு!

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு சங்கிலிமுருகன் தயாரித்து வரும் புதிய படம் "அழகர் மலை'. இதில் "எல்லாம் அவன் செயல்' படத்தில் நடித்த ஆர்.கே. கதாநாயகனாக நடிக்கிறார். "தாமிரபரணி' பானு கதாநாயகியாக நடிக்கிறார். கிராமத்து மண் வாசனையுடன் கூடிய இந்தக் கதையை எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார்.



இந்தப் படத்தில் முதல்முறையாக ஒரு முழு பாடலையும் பாடி நடித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலை எழுதியிருப்பவரும் அவரே. "உலகம் இப்போ எங்கே போகுது...' என்ற அந்தப் பாடல் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த இடம், சுற்றித் திரிந்த வீதிகள், இசைத்துறை தொடர்பான அரிய நிகழ்வுகள், திருவண்ணாமலை ரமண ஆசிரமத் தொடர்பு போன்ற நெகிழ்ச்சியான பல்வேறு காட்சிகள் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளுக்கு ஒரு தேர்ந்த நடிகரைப் போன்று முகபாவம் காட்டி நடித்துள்ளாராம் இசைஞானி!

"கோவா'வில் செüந்தர்யா!

  செüந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் "கோவா' படத்தில் சினேகா, ஹாலிவுட் நடிகை ஜூலியா பைன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இதில் ஒரு முக்கிய வேடத்தில் செüந்தர்யா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என அவரை வற்புறுத்தி வரும் இயக்குநர், ரஜினிகாந்தையும் ஒரு காட்சியில் இடம்பெற வைக்க முயற்சித்து வருகிறார்.

என்ன கோபம் சொல்லு பாமா...



  விக்னேஷ் நடித்து வரும் "ஈசா' படத்தில் ஹரன் என்ற 21 வயது இளைஞர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பிரபல நவராக் இசைக் கச்சேரியை நடத்தி வரும் ஸ்ரீதரின் மகனான ஹரன், ஏற்கெனவே பல இசை ஆல்பங்களை வெளியிட்டவர். உங்கள் இசையிலும் ஏதாவது ரீமிக்ஸ் பாடல் உண்டா என கேட்டபோது...

  ""இந்தப் படத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் விதத்தில் காதல், திருவிழா, நாட்டுப்புறம், வெஸ்டர்ன், கர்னாட்டிக் என பல வகையான பாடல்கள் இடம்பெறுகின்றன. "உத்தம புத்திரன்' படத்தில் இடம்பெற்ற "யாரடி நீ மோகினி. கூறடி என் கண்மணி...' சூப்பர் ஹிட் பாடலை வழக்கம்போல ரீமிக்ஸ் செய்யாமல் புதிய பாணி இசையில் ரீமேக் செய்திருக்கிறேன். இந்தப் பாடலுக்கு எம்.எஸ்.பாஸ்கர் வித்தியாசமான "கெட்-அப்'பில் நடனம் ஆடுகிறார். முதல் படம் என்பதால் ஒவ்வொரு பாடலையும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்க வேண்டும் என்ற வெறியுடன் இசையமைத்திருக்கிறேன்'' என்றார் ஹரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com