கோர்த்து-வா? கோத்து-வா? முன்னூறா? முந்நூறா? பிழையற்ற தமிழ் அறிவோம்! - 2

சின்ன 'ர'வா? பெரிய 'ற'வா? கோர்த்து-வா? கோத்து-வா? அருகிலா? அருகாமையிலா? - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...
தமிழ் கற்கும் மாணவர்கள்
தமிழ் கற்கும் மாணவர்கள்Center-Center-Tiruchy
Updated on
2 min read

இடையின ரகரம் வல்லின றகரம்:

இவற்றைச் சின்ன "ர' பெரிய "ற' என்று சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது. பெரியவருக்குச் சின்ன "ர' போடவேண்டும்; சிறியவருக்குப் பெரிய "ற' போடவேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வர்.

ய ர ல வ ழ ள என்னும் இடையின எழுத்துகளுள் ஒன்று 'ர'. க ச ட த ப ற என்னும் வல்லின எழுத்துகளுள் ஒன்று 'ற'. தகராறு எனும் சொல்லில் (தகர்+ஆறு) 'ர்' இடையினம்; 'று'-வல்லினம். சுவர் என்னும் சொல்லுடன் 'இல்' உருபு சேர்த்தால் சுவர்+இல்=சுவரில் என்றுதான் ஆகும். ஆனால் பலரும் சுவற்றில் எழுதாதே என்று (சுவறு+இல்=சுவற்றில்) தவறாக எழுதுகிறார்கள். சோறு+இல்=சோற்றில் என்பது சரி (வல்லொற்று இரட்டித்தல் என்பது இலக்கணம்) கயிறு என்று எழுதவேண்டிய சொல்லைக் கயர் எனத் தவறாக எழுதுவோர் உளர் (கயர் வியாபாரம்).

'ண'கர, 'ந'கர, 'ன'கரங்கள்:

மூன்று சுழி 'ண'னா, இரண்டு சுழி 'ன'னா, காக்கா மூக்கு 'ந'னா என்றெல்லாம் சொல்லுவதை விட்டுவிடுவோம். தமிழ் எழுத்துகளின் வரிசையில் 'ட' பின் வருவது டண்ணகரம்; 'த'பின் வருவது தந்நகரம்; 'ற'பின் வருவது றன்னகரம் என்று சுட்டப்படுதல் வேண்டும். இந்த மூன்றும் இடம்மாறி - எழுத்துமாறி போடப்பட்டால் பெரும் குழப்பமாகிவிடும். பொருள் வேறுபட்டுச் சிதைவு ஏற்படும். ஆதலின் கவனமாக இவ்வெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

பனி - குளிர்ச்சியானது

பணி - பணிந்து போ, தொண்டு

பதநி - (பதநீர்) இளநி (இளநீர்) - பருகுபவை

அன்னை - தாய்; அண்ணன் - தமையன்; அந்நாள் - அந்தநாள். எந்த இடத்தில் எந்த எழுத்தைப் போடவேண்டும் என்று அறிதல் அவசியம். இன்றைய தமிழில் நேர்ந்துவிட்ட சிதைவுகள் - பிழைகள் பற்றி இனி விரிவாகக் காண்போம்.

சரியெனக் கருதும் பிழையான சொற்கள்:

1. கோர்வை, கோர்த்து:

அவர் நன்றாகக் கோர்வையாகப் பேசினார் என்றும், இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபோது கைகோர்த்துக் கொண்டனர் என்றும் செய்தித்தாளில் படிக்கிறோம். கோவையாகப் பேசினார், கை கோத்துக் கொண்டனர் என்பனதாம் சரியானவை. இடையில் ஒரு 'ர்' சேர்ப்பது தவறு. சான்று: நான்மணிக்கோவை, ஆசாரக்கோவை. "எடுக்கவோ கோக்கவோ என்றான்'' (வில்லி).

2. முகர்ந்து:

மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான் என்று கதையில் எழுதுகிறார்கள். முகர்ந்து என ஒரு சொல் தமிழில் இல்லை. நுகர்ந்து என ஒரு சொல், அனுபவித்து எனும் பொருள் கொண்டது. முகந்து என ஒரு சொல், (நீரை முகந்து) அள்ளி எனும் பொருள் கொண்டது. மோந்து எனும் சொல்லே முகர்ந்து என மாறிவிட்டது. மோந்து பார்த்தல் என்று சொல்லுவதில்லையா? மோப்ப நாய், 'மோப்பக்குழையும் அனிச்சம்' என்பன காண்க.

3. முயற்சிக்கிறேன்:

'உனக்காக நான் முயற்சிக்கிறேன்' என்று பேசுகிறார்கள். உனக்காக நான் முயல்கிறேன் என்றோ, முயற்சி செய்கிறேன் என்றோ சொல்ல வேண்டும். முயற்சிக்கிறேன் என்பது பிழை. முயற்சி ஒரு தொழில்பெயர். முயல் என்பது வினைப் பகுதியாயினும் முயற்சி எனும் சொல் (தொழில்) பெயர்ச்சொல் ஆகிவிடுவதால் முயற்சிக்கிறேன் பிழையாகிறது. ஆடுதல், பாடுதல் என்பனவும் தொழில் பெயர்களே. ஆடுதலிக்கிறேன், பாடுதலிக்கிறேன் என்பதுண்டோ?

4. அருகாமையில்:

என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம். அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) - சேய்மை எனும் பொருள் உண்டாகும். இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் 'ஆ' எதிர்மறை இடைநிலை இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.

5. முன்னூறு:

'நான் உனக்கு முன்னூறு ரூபா கொடுத்தேன்' என்றால், முன்-நூறு ரூபா கொடுத்தேன் என்று பொருளாகும். முந்நூறு கொடுத்தேன் என்றால், மூன்று நூறு ரூபாய் கொடுத்தேன் என்று பொருளாகும். மூன்று எனும் சொல்லில் றன்னகரம் வரினும் மூன்று + நூறு சேரும்போது, மூன்றில் உள்ள இரண்டு எழுத்தும் கெட்டு (நீங்கி) 'மூ' எனும் நெடில் 'மு' எனக் குறுகி மு+நூறு=முந்நூறு ஆகும். இலக்கியச்சான்று: 'பாரியின் பறம்பு முந்நூறு ஊர் உடைத்தே'.

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com