
இ ளவட்டக் கல்லைத் தூக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது பழைய முறை. இப்போதும் இளவட்டக் கல்லைத் தூக்கினால்தான் எச்ஐவி-எய்ட்ஸ் இல்லாத ஆரோக்கியமான இளைஞன் என்பதை அறிவிக்கிறது கிராமப்புறங்களில் நடத்தப்பட்டு வரும் "இளவட்டம் கொடிகட்டும்' பிரசார பயணம்.
"புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?', "தில்லுதுரை' இந்தப் பிரசாரங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் தற்போதைய விழிப்புணர்வு முயற்சிதான் இந்த "இளவட்டம் கொடிகட்டும்' பயணம்.
அனைத்து மாவட்டங்களிலும் "இளவட்டம்' என்ற பயணத்தின் ஒரு பகுதியாக, எய்ட்ஸ் தொற்று அதிகமாகக் காணப்படும் 10 மாவட்டங்களில் மட்டும்தான் இந்தக் கொடிகட்டும் பயணம். திருச்சி மாவட்டம், கீழவயலூர் என்ற கிராமத்தில் களமிறங்கிய இளவட்டம் கொடிகட்டும் விழிப்புணர்வு பயணத்தின் காட்சிகள்:
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த அந்த ஊர் மக்களின் தேநீர் இடைவேளையை இளவட்டக் குழு கைப்பற்றியது. திருவாரூர் மாவட்டம், மணவாளநல்லூரைச் சேர்ந்த உதயநிலா கலைக் குழுவைச் சேர்ந்த 11 பேர் (இவர்களில் மூவர் பெண்கள்) இதில் இடம் பெற்றிருந்தனர்.
மக்கள் சுற்றி அமரும் வகையில், வசதியான ஓரிடத்தைத் தேர்வு செய்து வேனில் இருந்து இளவட்டக் கல், பானை, கயிறு, நீளமான கம்புகள், தவில், பறைகளுடன் இறங்கியதை அந்த ஊர் மக்கள் வியப்போடு பார்த்தனர்.
எதற்காக வந்திருக்கிறோம் என்பதை இருவர் விளக்கியதைத் தொடர்ந்து பறையாட்டம் தொடங்கியது. அடுத்து, உறியடிக்கும் போட்டி. குழுவினரில் ஒருவர் கண்களைக் கட்டிக் கொண்டு கம்புடன் முன்னேறும்போது, வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்கிறார்.
ஏனென்று மற்றொருவர் கேட்கும்போது, அடிவயிற்றில் வலி இருப்பதாகச் சொல்ல, எளிய முறையில் பாலியல் நோய்களைப் பற்றியும், தடுப்பு முறைகளைப் பற்றியும், அரசு மருத்துவமனைகளிலுள்ள வசதிகளைப் பற்றியும் விளக்குகின்றனர் குழுவினர். "நல்ல நிலையில் திருமணம் செய்து பத்துப் புள்ளைங்களைப் பெற்றுக் கொடுத்தது அந்தக் காலம்; இப்ப தாறுமாறா துணையைத் தேடி எச்ஐவிக்கு ஆளாவது இந்தக் காலம்...' எல்லோரும் குழுவாகக் குரல் கொடுக்கின்றனர்.
தொடக்கத்தில் மக்கள் இதில் பங்கேற்கத் தயங்க, குழுவினர் நேரில் சென்று ஒவ்வொருவராக அழைத்து வந்தனர். தயக்கத்தை உடைத்து, கண்களைக் கட்டிக் கொண்டு களமிறங்கிய யாரும் பானையை உடைக்கவில்லை.
இளவட்டக் கல். 50 கிலோவுக்கு மேல் இருக்கும் இதன் எடை. தூக்க வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர எல்லோருமே கல்லைத் தூக்கினர். அந்த இடத்திலேயே வெற்றி பெற்றோரின் பெயர் எழுதப்பட்டு சான்றிதழும், பரிசாக ஒரு புத்தகமும் அளிக்கப்பட்டது. ஓரிரு பெண்களும் முயற்சித்தனர்.விறுவிறுப்பான அடுத்த விளையாட்டு "ஸ்கிப்பிங்'. பக்கவாட்டிலிருந்து கிளம்பிய பறை முழக்கம் விளையாட்டுக்கு இன்னும் கூடுதலான உத்வேகத்தைக் கொடுத்தது. வெற்றிபெற்ற பெண்ணுக்கு சான்றிதழும், பரிசுப் புத்தகமும் அளிக்கப்பட்டன.
ஆண்களுக்கும், பெண்களுக்குமாக தனித்தனியே கயிறு இழுக்கும் போட்டி. பார்வையாளர்களாக இருந்த கிராம மக்கள் எல்லோரையும் பங்கேற்கச் செய்த போட்டி இதுதான். உற்சாகமாகி, உருண்டு விழுந்து... எல்லாமும் முடிந்து குழுவினர் புறப்படும்போது, அவர்கள் கொண்டு வந்திருந்த அத்தனை பொருள்களையும் வேனில் ஏற்றியவர்கள் கிராம மக்கள்தான். எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்? எனக் கேட்டுவிட்டு ஊருக்கு வெளியே உள்ள உணவகம் ஒன்றில் மதிய உணவும் ஏற்பாடு செய்துக் கொடுத்தார் ஊராட்சித் தலைவர்.
கலைக் குழுவை உருவாக்கியிருக்கும் ஸ்டீபனிடம் பேசினோம்.
"" ஏறத்தாழ 20 ஆண்டுகளாகக் கலைத் துறையில் ஈடுபட்டு வருகிறேன்., இப்போது தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கலைக் குழுக்களுக்கான பயிற்சியாளராக இருக்கிறேன்.. ஜெர்மன், பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறேன்'' என்றார் ஸ்டீபன்.
24 வயது நிரம்பிய எல். பிரீஸ் ப்ரீடா, எம்ஏ (தமிழ்), பிஎட் முடித்தவர். தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை. பகுதிநேரமாக கலைக் குழுக்களுடன் இணைந்து கலைப் பணியாற்றுகிறார்.
26 வயது நிரம்பிய எம். விவிலியராஜா திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். நாமக்கல்லில் உள்ள எச்ஐவி தொற்றுள்ள குழந்தைகளுக்கான "அன்பு' இல்லத்தில் பணியாற்றுகிறார். சி.எம். டேவிட்ராஜா கணினிப் பொறியாளராம். கே. ஜெரோன் ஆங்கில இலக்கியத்தில் எம்ஏ., பி.எட்., முடித்தவர்... இப்படி பல பட்டங்களைப் பெற்றவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
நாளொன்றுக்கு கிடைக்கும் சில நூறு ரூபாய்களுக்காக என்றில்லாமல் பணியாற்றுவது தெரிகிறது. உணர்வுப்பூர்வமான, உளப்பூர்வமான பணியில் ஆத்ம திருப்தி கிடைப்பதை பெருமையோடு குறிப்பிடுகின்றனர் இந்த இளம் கலைஞர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.