சிறுகதை: நொய்யலழகி

ஆடிப் பெருக்கு விழா. நம்மை விட்டுப் பிரிந்து போன நம் மூதாதையர்களின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி நதிக்கரையில் அவரவர்களுக்காய் பிண்டம் வைத்து மாற்றுகிற சடங்கு சம்பிரதாயங்களுக்காய், காலங்காலமாய்ப் பெருமை
சிறுகதை: நொய்யலழகி
Updated on
4 min read

டிப் பெருக்கு விழா. நம்மை விட்டுப் பிரிந்து போன நம் மூதாதையர்களின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி நதிக்கரையில் அவரவர்களுக்காய் பிண்டம் வைத்து மாற்றுகிற சடங்கு சம்பிரதாயங்களுக்காய், காலங்காலமாய்ப் பெருமைக்கு உரியதாய் விளங்கி வருகிற நதிக்கரையல்லவா நொய்யல்?

அந்த எதிர்பார்ப்போடுதான் இரண்டு குழந்தைகளோடும், மனைவியோடும் நொய்யலாற்றங்கரையை அடைந்தபோது, என் மனம் எதையோ பறி கொடுத்து நிற்பதைப் போலப் பரிதவித்தது. நீர் வற்றி வறண்டு போய், வாய்க்காலாய் வளைந்து நெளிந்து, வெட்கத்தோடும், வேதனையோடும் விம்மிக் கொண்டு கிடந்தாள் அந்த நொய்யலழகி. சிதிலமடைந்து கிடந்த அந்த படித்துறைகளையெல்லாம் பார்த்தபோது, நான் சிறுவயதில் துள்ளிக் குதித்து விளையாடியதெல்லாம் என் நெஞ்சின் ஓரத்தில் நெருடலாய் எழுந்து, கண்ணின் ஓரத்தில் கதகதப்பாய்க் கசிந்து கொண்டிருந்தது.

"ஆரூராத்தா அய்யாற்றமுதே அளப்பூர் அம்மானே' என்று தொடங்கி, நான் படித்த பள்ளியில், நாங்கள் பாடி நின்ற காலை நேர வழிப்பாட்டுப் பாடல், "பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே' என்று தொடர்ந்து, "பாரோர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே' என்று முடிகிற வரையில் என் நெஞ்சில் மூண்டது.

படித்துறை ஓரமாயிருந்த கைப்பிடிச்சுவரின் மீது கைகளைக் கட்டியவாறு வைத்து, அந்தக் கைகளில் முகத்தைப் பதித்துக் கொண்டு, முண்டியடித்து என்னுள் புகைந்து எழுந்து கொண்டிருந்த பழம் நினைவுகள், நிகழ்காலத்து நிகழ்வுகளை நிர்மலமாக்கிக் கொண்டிருந்தது.

""என்னங்க, ஒரு ஊத்துக் காலியாயிடுச்சு. நானும் குழந்தைகளும் போய் முதலில் குளிச்சிட்டு வந்திடறோம். அப்புறம், நீங்க போய்க் குளிப்பீங்களாம்.'' என் பதிலெதையும் எதிர்பார்க்காத என் மனைவி காமாட்சி, குழந்தைகளோடு ஓர் ஊற்றின் அருகில், தடுக்கு வச்சுக் கட்டியிருந்த குளியலறைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தாள்.

அந்த நொய்யல் ஆற்றினுள் ஊற்றுத் தோண்டி வினைபோக்க வருவோர்க்கெல்லாம், குளிப்பதற்காக நீர் விநியோகித்து, வருவாய் பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள். நான் இந்த ஊர்க்காரனாய் இருந்தபோது, இருமருங்கும் தென்னந்தோப்புகளுக்கிடையே, துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்த அந்த நொய்யல் மங்கையை, படித்துறையில் நின்று எத்தனை முறை பார்த்துப் பரவசித்திருப்பேன்.

அந்த நாவல் மரத்தின் அடியில், நேரம் போவது தெரியாமல், காற்றில் விழுகிற நாவல் பழங்களைச் சுவைத்துக் கொண்டே, என் சோட்டுப் பயல்களோடு விளையாடிக் களித்துக் கொண்டிருந்திருக்கிறேன். குளிக்கிற நீராகவும், குடிக்கிற நீராகவும், அந்த நொய்யல் தாய், எப்படியெல்லாம் எங்களை நீராட்டிச் சீராட்டியிருப்பாள். பளிங்குபோல நீர்மேனி கொண்டு, பருவ நடைபோட்டுக் கொண்டிருந்த அந்த நதியன்னை, இன்று இருக்குமிடந் தெரியாமல், நாணிக் கோணி நலிந்துபோய், வாய்க்காலாய் மெலிந்து கிடக்கிறாள்.

அப்போதுதான், என் பெரிய மகன் குளித்து முடித்து அந்தக் குளியலறையைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தான், அவன் இடுப்பில் கட்டியிருந்த ஈரிழைத் துண்டு காற்றில்  அங்கும் இங்கும் அல்லாடி, அவனை வெட்கப்பட வைத்துக் கொண்டிருந்தது.

""அப்பா பக்கத்திலிருக்கிற சூட்கேசில் உன்னுடைய துணிகள் எல்லாம் இருக்கு. எடுத்துப் போட்டுக்கடா... பரணி'' என என் மனைவியின் குரலுக்குப்பின், என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். என் தலைமகன் பரணீதரன். அப்போதுதான் எனக்குப் பக்கத்திலிருந்த சூட்கேஸ் நினைவு வந்தது.

ஒன்பதாம் வகுப்பு பயின்று கொண்டிருந்த பரணீதரன், உடைகளை மாற்றி நின்றபோது, நான் அவன்போல ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அந்தக் காலம் பறந்தோடி வந்தது. அந்தக் கரைக்கும் இந்தக் கரைக்குமாய் ஓடிக் கொண்டிருந்த காலம். அந்த நதிப் படித்துறையில் வந்திறங்கிய, அந்த ஊர் மக்களின் அழுக்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு, களிப்போடும் உற்சாகத்தோடும் அவர்களை வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.

நாங்கள் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே அந்தப் பாலத்தைக் கடந்துபோய், நாவல் மரத்தில் ஏறிக் குதித்துக் குளிப்பதுதான் எங்கள் வழக்கம். அப்படித்தான் அன்றும் குளித்துக் கொண்டிருந்தபோது, என் பள்ளியின் தொழிலாசிரியர் வெள்ளிங்கிரி அங்கே குளித்துக் கொண்டிருந்தார். இடுப்பளவு தண்ணீர். வலிப்பு நோய் அவரை வளைத்துக் கொண்டது.

எல்லாரும் அவரைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். அவர் நீச்சல் அடித்துக் குளிப்பதுபோல எண்ணிக் கொண்டோம். விளையாட்டுப் போக்கில் நாங்களும் அவரைப் பற்றி நினைக்காமல் விட்டுவிட்டோம். சிறிது நேரத்தில் அவர் பிணமாய்ப் போன அந்தக் காட்சி இப்போதும் மனதை நெருடத்தான் செய்கிறது.

மீண்டும் யாரோ சூட்கேசைத் திறந்தது போல் நினைவு வரக் குனிந்து பார்த்தேன். என் பன்னிரண்டு வயது மகள் பச்சைநாயகி. ஆமாம். பேரூர் பட்டியப்பனின் நாயகி. அவள் பெயரைத்தான் என் மகளுக்கு வைத்திருந்தேன். அவள் தன் உடைகளை மாற்றிக் கொண்டு நின்றாள்.

என் மக்களையெல்லாம் கண்டு எனக்குள் மகிழ்ச்சி. அதையும் தாண்டி இந்த நதியன்னை என் மனதைத் தோண்டிக் கொண்டல்லவா இருக்கின்றாள். இந்தப் பன்னிரண்டாம் வயதில், நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என் அக்கா ஆற்றுக்குத் துவைக்க வரும்போது நானும் வந்திருந்தேன். நீச்சல் தெரியாததால் படித்துறையிலேயே நின்று கொண்டேன். என் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கெüரி வெகு தொலைவிலிருந்து நீச்சல் அடித்துக் கொண்டே வந்தாள். வந்தவள் என்  அக்காவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, படித்துறை நீரில் மண்டியிட்டவாறே, "" வாடா நீச்சல் அடித்துக் குளிக்கலாம்'' என்று என் கைகளைப் பற்றி இழுத்தாள்.

""டேய் போயிடாதடா... அவளுக்கு நீச்சல் தெரியும். நீ இறங்கினா மாட்டிக்குவே..'' துவைத்துக் கொண்டிருந்த மற்ற பெண்கள் எல்லாம் எச்சரித்தார்கள். ஓரிரண்டு படிகள் மட்டுமே இறங்கி நின்று குளித்துவிட்டுத் திரும்பினேன். நதியம்மா அன்று என்னை நனைத்தாள்.  இன்று நான் அவளை நினைத்தேன். குற்றுயிரும் குலையுயிருமாய் வற்றி வறண்டு போன என் தாயின் மார்பைக் குத்திக் கிழித்து, மக்கள் உறிஞ்சிக் கொண்டிருப்பது போல எனக்குள் ஒரு தவிப்பு.

"" ஏங்க.. வாங்க குளிச்சுக்குவீங்களாம்'' என்னையும் குழந்தைகளோடு ஒன்றாய்க் குளிப்பாட்டி விடுபவளைப் போலக் கூப்பிட்ட மனைவி காமாட்சி, ஈரப் புடவையோடு படியேறிக் கொண்டிருந்தாள். ""குளிச்சுவிடுகிறவள் மாதிரி கூப்பிட்டே... அதுக்குள்ளே படியேறி வந்துட்டியே...'' கிண்டலடித்தேன்.

""பச்சைக் குழந்தை... இன்னும் குளிச்சி விட்டுட்டிருப்பாங்க. போய்ச் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.. தண்ணித் தாகம் வேறே எடுக்குது.. குடிக்கிற தண்ணிக்கு எங்கே போறதுன்னு தெரியலே'' என்றவள் திடுமென்று திரும்பி, "" ஏங்க.. எந்த நினைப்புலே போறீங்க? துவட்டறதுக்குத் துண்டு வேண்டாமா?'' என்று கேட்ட பிறகே, வந்து துண்டை வாங்கிக் கொண்டு படியிறங்கினேன்.

""அண்டர்வேர் எடுத்திட்டீங்களா?'' அடுத்த கேள்வி. ""சரி, சரி, துண்டையே கட்டிட்டு வாங்க. இங்க வந்து மாத்திக்குவீங்களாம்.'' கேள்வியும் அவளே. பதிலும்  அவளே.

எந்த நினைவுமே என் நெஞ்சில் எழாதவாறு நொய்யல் நல்லாள் பற்றிய நொந்த நினைவுகளுடனே உள்ளே புகுந்து கொண்டிருந்தேன். பக்திச் சுவை கனி சொட்டச் சொட்டப் பாடிப் பரவுகிற, பக்திப் பழங்களும், சீவகாருண்ய சீலர்களும் பல்கிப் பெருகி நிரம்பி வழிகிற இந்தத் திருநாட்டில், இந்த நதி நங்கை பலராலும் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற அவலமே அவர்கள் நினைவில் எழவில்லையா?

ஒரு வாளி நீர்தான் கிடைத்தது. என்ன விலை கொடுத்தாளோ காமாட்சி? தெரியவில்லை. பட்டும் படாமல் குளித்துவிட்டுக் கருமங்கள் எல்லாம் கழிந்து போனதாய் எண்ணிப் படியேறிக் கொண்டிருந்தேன். மனைவி சொன்னதைப் போல, தாகம் தொண்டையை விரட்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளை, என் மனைவி குடிநீர் தேடி வைத்திருந்தாள். அதிலெல்லாம் அவளுக்குச் சொல்லியே தர வேண்டியதில்லை. சமயத்துக்குப் புலிப்பால் கூடத் தேவையென்றால் கொண்டு வந்துவிடுவாள்.

ஒரு பிளாஸ்டிக் டம்ளர் நீரை என் முன் நீட்டினாள். ""குடிச்சுட்டு மறுபடியும் கேட்டுடாதீங்க. தொண்டையை மட்டும் நனைச்சுக்கங்க. ஒரு டம்ளர் ரெண்டு ரூபாயாம்.''

அலங்கோலப்பட்டுப் போன ஆற்றைப் பற்றியெல்லாம் அவளுக்குக் கவலையே இல்லை. அவள் வீடு, அவள் கணவன், அவள் பிள்ளைகள், இதுதான் அவளின் உலகம்.

அவள் கேட்டுக் கொண்டதைப் போலவே இரண்டு ரூபாய்த் தண்ணீரில் தொண்டையை மட்டும் நனைத்துக் கொண்டு மாற்றுடைகளோடு நதியன்னையிடமிருந்து விடை பெற்றுக் கொண்டோம். கோயிலை அடைந்து கூட்ட நெரிசலுக்கு இடையிலும், பட்டிப் பெருமானைத் தரிசித்துவிட்டு, வெளியே வந்தவர்கள் சிறிது பசியாற வேண்டுமே என்று திரும்பிப் பார்த்தோம். பட்டீஸ்வர விலாஸ் ஓட்டல் சாலையின் தென்பகுதியில் எங்களை அழைப்பதுபோல இருந்தது. விலைப்பட்டியலைப் பார்த்துக் கொண்டே சிறிது வயிறாறிக் கொண்ட நாங்கள், பேருந்துக்காய் வரிசையில் நின்றோம். கால் கடுப்பதற்குள்ளாகவே அடித்துப் பிடித்து வண்டியேறி இடமும் பிடித்துவிட்டாள் என் மனைவி. பேருந்து புறப்பட்டு, தமிழ்க் கல்லூரி தாண்டி அணைக்கரைப் பாலந் தொட்ட போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் மினரல் வாட்டர் பாட்டிலை என்னிடம் காட்டி,

"" பார்த்தியா தம்பீ, ஆறு இங்கே வத்திக் கிடக்கு. ஆனா ஆற்றின் மேற்கே இருட்டுப் பள்ளத்துக்கிட்டே, ஆத்துக்குள்ளேயே போர் கிணறு போட்டு, நீரையெல்லாம் உறிஞ்சி மினரல் வாட்டரா பாட்டில் தண்ணி பதினைஞ்சு ரூபாய் மேனிக்கு வித்துக்கிட்டிருக்காங்க'' என்றவாறே அந்தப் பாட்டிலைத் திருகி திருகி கடகட எனத் தண்ணீரை வாயில் ஊற்றி இறக்கினார்.

எனக்கோ அனல் துண்டுகள் வயிற்றில் இறங்கியது போல இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com