சிறுகதை: எதிர்பாராதது

எலேய்...பாவாட... வெளியே வால...' அதட்டலாய் வெளியிலிருந்து ஒரு குரல் உள்ளே வந்தது. அது மேலத்தெரு பெரியாண்ட மகன் சின்ராசுவின் குரல் மாதிரியில்ல இருக்கு என்ற யோசனையிலேயே மூழ்கியிருந்தவனை, "எலேய்...' குரல்
சிறுகதை: எதிர்பாராதது

எலேய்...பாவாட...

வெளியே வால...' அதட்டலாய் வெளியிலிருந்து ஒரு குரல் உள்ளே வந்தது.

அது மேலத்தெரு பெரியாண்ட மகன் சின்ராசுவின் குரல் மாதிரியில்ல இருக்கு என்ற யோசனையிலேயே மூழ்கியிருந்தவனை, "எலேய்...' குரல் மறுபடியும் அதட்ட குடிசையினுள்ளிலிருந்து, லுங்கியைக் கையில் பிடித்தவாறே வெளியே வந்த பாவாடையின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் படர ஆரம்பித்தன.

"சின்ன ஆண்ட மொவன்களோடு இந்த நாதியத்த பயலுக எதற்கு வந்தானுவோ' என்று பாவாடையின் மனதிற்குள் வார்த்தைகள் சுழன்று அடித்துக் கொண்டிருக்கும்போதே..."எலேய்...உன் குழந்தியா மொவன் எங்கல்ல?' திமிறி எழுந்தது கூட்டத்திலிருந்த ஒரு குரல். ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்த பாவாடையின் முகம் பயத்தில் உறைய ஆரம்பித்தது.

"ரமேசு கலேசிக்கி போயிருக்கும்ங்களே...என்ன சங்கதிங்க?'

"ஒண்ணுமே தெரியாதமாரி நடிக்காதல்ல...ஊரே நாறிக்கிடக்கு. உண்மையைச் சொல்லுல...'என்று உருட்டைக் கட்டையோடு நின்று கொண்டிருந்த ஒருவன் கத்தினான்.

"ரமேசும்...மலரும் எங்கல்ல?' மற்றொரு குரல்.

கூட்டத்தின் எதிரே மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தான் பாவாடை.

"மொவனே...உன் அப்பனுக்காக பாக்குறோம் இல்ல...மாட்டைத் தோல் உரிக்கிற மாதிரி உரிச்சிடுவோம்...சொல்றா, கண்களில் கொலைவெறியைத் தேக்கி வைத்துக்கொண்டு கேட்டான், கூட்டத்தில் முன்னால் நின்றவன்.

"இவனுகள எல்லாம் இப்படியே விட்டா நாளைக்கி நம்ம புள்ளைகளையும் கூட...'வெறித்தனமாய் அவன் ஓங்கி பாவாடையை உதைத்தான். சற்றும் இதை எதிர்பாராத பாவாடை, நிலை தடுமாறி கீழே விழுந்தான். அவன் உடல் பயத்தில், கூனிக்குறுகி நடுங்க ஆரம்பித்தது. உடன் வந்தவர்கள் அந்த இளைஞனைப் பிடித்து, அமுக்கி, தடுத்து நிறுத்தினார்கள்.

"நீ ஏண்டா எகிறுரே...அதான் பஞ்சாயத்து பண்றோம்ல...'கும்பலில் தலைமையேற்று வந்தவன் அந்த இளைஞனை அதட்டிவிட்டு, பாவாடையிடம்...

"பாவாடை...நீ என்ன செய்வியோ...ஏது செய்வியோ...தெரியாது. இன்னிக்கு பொழுதுக்குள்ள மலரைக் கொண்டாந்து வூட்ல வுடல...அப்புறம் அவனுங்க தண்டு முண்டா ஏதாவது செய்திடுவானுவோ...

நல்லாயிருக்காது...பாத்துக்க' அவன் பேசி முடிக்க. பாவாடையின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அவன் அந்தக் கூட்டத்தின் முன் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தான். அவர்கள் விலகிச் சென்றார்கள். குடிசையின் உள்ளே, பயத்தில் வீட்டுத்தட்டியின் பின்னே ஒட்டிக் கொண்டிருந்த அவன் மனைவி கஸ்தூரி வெளியே வந்து, பாவாடையின் அருகே அமர்ந்தாள்.

இரண்டொரு நாட்களாகவே பாவாடை வெளியூர் போயிருந்தான். விழுப்புரத்தில் இருக்கும் அவன் அண்ணன் மகன் வேலுவைப் பார்க்கப் போயிருந்தான். வேலு டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக இருக்கிறான். அவன்தான் பாவாடைக்குத் துபாய் போகும் ஐடியாவைக் கொடுத்தவன். "அங்கு போவதற்கு பாஸ்போர்ட்டு, விசால்லாம் வேணுமே'எனக் கேட்ட பாவாடையிடம், வேலு வீட்டோரமாய் இருக்கும் அந்த அரை ஏக்கர் நிலத்தையும் வித்திடலாம்னு சொல்லியிருக்கான்.

ரொம்ப நாளா அந்த நிலமும் எந்த சாகுபடியும் இல்லாமல் மானம் பார்த்த பூமியாத்தான் கிடக்கு.

"ஏண்டா...வேலு அத வித்துட்டு என்னை என்ன நடு ஆத்திலியா நிக்க சொல்ற...'

"அண்ணே...நீ இங்க கெடந்து சாகுறதைவிட துபாயில்லாம் போயீட்டீன்னா அரை ஏக்கர் என்னான்னே...உன் வரப்போற புள்ளக்கி அஞ்சி ஏக்கரே வாங்கிப் போடலாம்...'

"ஏதோ உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்...

இந்த சான்ûஸ விடாதேண்ணே...'வேலு உற்சாகமாய் பேசினான்.

"அது சரிடா...அங்க போயி நான் என்னா செய்வேன்?'

"அதெல்லாம் ஏஜென்ட் பார்த்திருப்பாருண்ணே... அதான் அவரு ஸ்கூலு வச்சிருக்காருல்ல...அங்கிய கம்பி கட்டிறதெல்லாம் கூட சொல்லித் தராறு... மொதல்ல...நீ பத்தாயிரம் பணத்தைக் கட்டிட்டா மீதிய அப்புறம் பாத்துக்கலாம்'

என்ற வேலுவின் வார்த்தைகளில் மனம் கிறங்கி கிடந்தான் பாவாடை. அவன் மனக்கண்ணில் ஹெலிஹாப்டர், ஏரோபிளேன்கள் எல்லாம் வண்ணத்துப்பூச்சி போல் வட்டமடித்து சுழன்றன. இரவு டாஸ்மாக்கில் கட்டிங்கோடு, பீப் பிரியாணியும் வேலு வாங்கி கொடுக்க, வாழ்க்கை தனக்கு வசமாகி, விட்டதாக எண்ணி ப்ளாட்டாகி, அறையில் விழுந்து கிடந்தான் பாவாடை. விடிந்ததும் போதை தெளிய வீடு சேர்ந்தவனின் கனவில்தான் காய்ச்சல் வந்து புகுந்தது.

கண்ணீரும், கம்பலையுமாக உட்கார்ந்திருந்த பாவாடையைச் சுற்றி அவனது உறவுக்கூட்டம் கூடி விட்டது. ரமேசு காணாது போனதும், மேட்டுத் தெரு சதாசிவம் மகள் மலரும் அவனோடு ஓடிப்போன சங்கதியும் தெரிய வந்தது மிக மிகத் தாமதமாகவே!

"படுபாவி...அந்த செறுக்கி மொவளயோட போவ

அந்த பயபுள்ளயோ எதற்கும் துணிஞ்சவனோளே.

ஏலேய் பாவாட...ஏதேனும் செய்யுலா

யப்பா...சூலக்கருப்பா எம்புள்ளயோ என்ன

பாடுபடுதோ...ஓவ்...வ்...'என தெருவின் புழுதியை வாரி அணைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்தாள் ராசாயிக் கிழவி.

""யெண்ணே நீ ஏன் சிலையாட்ட உக்கார்ந்திருக்க?

போய் அந்த பயல எங்கிருந்தாலும் தேடி இழுத்துட்டு வருவியா...அதவுட்டுட்டு'' என்றவள், விறுவிறுவென தன் முந்தானையின் முடிச்சை அவிழ்த்து கசங்கிய நூறு ரூவாய் நோட்டை பாவாடையின் கையில் திணித்தாள் ஜெயக்கொடி. பாவாடை செய்வதறியாது நிற்க...விஷயம் கேள்விப்பட்டு அங்கு வேகமாக சைக்கிளில் வந்து சேர்ந்தான் தொப்பையன்.

"பொழுது சாயறதுக்குள்ளே புள்ளைங்க பத்திரமா

வீடு வந்து சேரணும்னே...என்ன பண்ணுவீகளோ

தெரியாது...ரெண்டுபேருமாபோய் தேடி கூட்டிக்கிட்டு வாங்க...' ஜெயக்கொடியின் வார்த்தைகளில் கண்டிப்பு தாண்டவாடமாடியது. ஜெயக்கொடியின் மூத்த மகளான சுமதி ஓடிப்போய் பாவாடையின் வீட்டிலிருந்து அவனுடைய முழுக்கை சட்டையை எடுத்து வந்தாள். பாவாடை அரைகுறையாக அதை வாங்கி அணிந்து கொண்டு, சைக்கிளில் ஏறி அமர, தொப்பையின் விருட்டென்று சைக்கிளின் பெடலை மிதித்தவாறே செம்மண் புழுதியில் விரைந்தான்.

உச்சி வெயில் உயிரைப் பிளந்து கொண்டு நின்றிருந்தது. தொப்பையனின் கால்கள் தொடர்ந்து காலையிலிருந்து சைக்கிளில் மிதித்தால் துவண்டு போயிருந்தன. சைக்கிளைத் தெரிந்த கடை ஒன்றில் போட்டுவிட்டு, அவர்கள் இருவரும் அந்த டவுனில் தமக்கு தெரிந்த எல்லா முகங்களிடமும் விசாரித்து விட்டனர். பயனில்லை. அலைந்து திரிந்ததுதான் மிச்சம். பொழுது இரவை நோக்கி நகர ஆரம்பித்து, இருட்டத் தொடங்கி விட்டது. அது இவர்களின் துயரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. தொப்பையனுக்கு பயம் கவ்வத் தொடங்கி அவனது விரல்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டன.

""மச்சான்...இப்ப என்னலே பண்றது ஒரு எலவும் புரியலலேய்...அவனுங்களுக்கு

என்னல சொல்றது...''

தொப்பையனின் குரல் கம்மத் தொடங்கிற்று.

"" அவன் பாட்டுக்கா மேட்டுத்தெரு பெண்ணைக் கூட்டிக்கினு ஓடிப்போயிட்டான். இப்ப நாம இல்ல, தெருத்தெருவா அலையிறோம்.''

""பயலக் கண்டனா அங்கனவே பொலி போட்டுறவேன்ல்ல''

""இப்ப இங்கன அவன கொல்லவா வந்தோம் அங்க நம்ம புள்ளை சாதிங்க தனியால நிக்குது'' தொப்பையன், பாவாடையை சமாதானப்படுத்த முயன்றான். இருவரும் அடுத்து என்ன செய்வது? என்பதையறியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். அந்திம இரவு. நியான் லைட் விளக்கின் கீழ் நின்றிருந்த பாவாடைக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. தொப்பையனை அழைத்துக்கொண்டு போன் பூத்தை நோக்கி பாவாடை வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

இருள் கவ்விய அவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த அக்கல்லு வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பஞ்சாயத்து தலைவர் வீடுதான் அது. அங்குதான் இந்த பிரச்சினைக்காக பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. மலரின் தந்தை சதாசிவம் அவ்வீட்டுத் திண்ணையின் திண்டை பிடித்தபடி எதையோ வெறித்தப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

"துணர் அண்டி கிடக்கிறானுவோய் இத இப்படியே விட்டா...நாளைக்கி அவனுங்க

என்ன வேணாலும் பண்ணுவானுங்க என்ன மயித்துக்கு நாங்க இருக்கோம்' கூட்டத்தில் பாவாடையை அறைந்த அந்த இளைஞன் ஆவேசமாகப் பேசினான். மலருக்கு முறைப்பையன். அவனது கண்கள் ஆவேச வெறி கொண்டிருந்தது. அவனோடு சேர்ந்துகொண்டு மேலும் சில இளவட்டங்களும் கூச்சலிட்டன. ஓடிப்போன ஜோடிகள் இருக்கும் இடம் பற்றி அவர்களுக்கு செய்தி வந்து வெகுநேரம் ஆகிறது. மேற்கொண்டு என்ன செய்வது என்பதுதான் பஞ்சாயத்தே!

""என்னய்யா சதாசிவம்... உம்புள்ளைய அந்தப் பயக்கிட்டேயிருந்து

பிரிச்சு வுட்டுறோம். என்ன சொல்ற?' பஞ்சாயத்தாரின் குரலில் கட்டளை தொனித்தது. சதாசிவம் எதுவும் பேசாமல் விருட்டென்று துண்டை உதறிக்கொண்டு எழுந்து, திண்ணையை விட்டு இறங்கி, நகர்ந்து வெளியே வந்து தன் வாயில் இருந்த எச்சிலைத் துப்பிவிட்டு, உள்ளே வந்து திண்ணையில் உட்கார்ந்தார்.

""ஓடிப்போன கழுதைய பிரிச்சுவுடறதக்கா பஞ்சாயத்து பண்றீங்க...

புடிச்சவனோட போனதற்கு நாம என்ன பண்ணமுடியும்... கழுதை! எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்'' என்று பேசி எல்லோருடைய வாயையும் அடைத்தார். அவருக்குத் தெரியாததா? காலம் மாறிக்கிட்டிருப்பதை அவர் உணர ஆரம்பித்து வெகுநாள் ஆகிறது. ஆனால், ஊரில் சாதிப் பெருமை பேசித் திரியும் சில பெரிசுகளுக்குத்தான் அவருடைய மாற்றம் குறித்து புரியவில்லை. திண்ணயோரம் சாய்ந்து நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் மனைவி அன்னம்மா, தன்னுடைய வாயில் முந்தானையை வைத்து அழுத்தி, வெடித்துக் கொண்டு வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

குழப்பத்துடன் எல்லாரும் கலைந்து சென்றார்கள்.

எங்கெல்லாமோ நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்தும், மூலைமுடுக்கெல்லாம் தேடியும் ரமேசையும் மலரையும் காணாமல் கலங்கி நின்றார்கள் பாவாடையும் தொப்பையனும். ஊருக்குள் போனால் அடித்தே கொன்றுவிடுவான்கள். தொப்பையனும் அவனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து தேற்ற முடியாமல் ரொம்பவும் பயந்து வெறுங்கையோடு ஊருக்குள் தயங்கித் தயங்கி அடியெடுத்து வைத்தபோது, எதிர்ப்பட்டவன் காலையில் பாவாடையை எட்டி உதைத்த அந்த இளைஞன்.

பயத்தினால் நடக்க முடியாமல் இருவரும் திடுக்கிட்டு நின்றனர். பயம் கவ்விப் பிடிக்க அடிவயிற்றில் எதுவோ உருண்டு போனது. அந்த இளைஞனோ இவர்களைப் பார்க்காதது போல முகத்தைச் சட்டெனத் திருப்பிக் கொண்டு இவர்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வேறு பாதை மாறித் திரும்பிப் போனான்.

இதை நம்ப முடியாமல் அதிர்ச்சியிலிருந்து விடுபட இருவருக்கும் சிறிது நேரம் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com