நல்லிணக்கம்: சிலுவை...ஓம்...பிறை!

மனிதர்கள் பல மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், ஆண்டவனுக்கென தனியாக மதம் உள்ளதா என்ற கேள்வியின் பின்னணியில், "கடவுளை நம்பு, அனைத்து மதங்களையும் மதித்து நட' என்ற கொள்கையோடு செயல்பட்டுவரும் உதக
நல்லிணக்கம்: சிலுவை...ஓம்...பிறை!
Updated on
2 min read

மனிதர்கள் பல மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், ஆண்டவனுக்கென தனியாக மதம் உள்ளதா என்ற கேள்வியின் பின்னணியில், "கடவுளை நம்பு, அனைத்து மதங்களையும் மதித்து நட' என்ற கொள்கையோடு செயல்பட்டுவரும் உதகையிலுள்ள அபுபாபாஜி அறக்கட்டளை தனது பல்வேறு சமூக சாதனைகளுக்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்றால் சமூக சேவைகள்தான் முன்னணியில் இருக்கும். ஆனால், அபுபாபாஜி அறக்கட்டளை வித்தியாசமான ஒன்றாகும். உதகையின் சூபி ஞானி என அழைக்கப்படும் அபுபாபாஜியால் கடந்த 1980ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் இந்த அறக்கட்டளை. ஆனால், சமூக சேவைகளை மட்டுமே முக்கியமாகக் கொள்ளாமல் மத நல்லிணக்கம் என்பதற்கு கடந்த 30 ஆண்டுகளாகவே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இவ்வமைப்பு விளங்குகிறது.

உதகையில் ஏரிக்கரையின் அருகிலுள்ள அபுபாபாஜி அறக்கட்டளை வளாகத்திற்குள் அமைந்துள்ள அபு விஸ்வா காம்ப்ளெக்ஸ் என்பது இந்து, முஸ்லீம், ஜொராஸ்டிரிய மற்றும் கிறிஸ்தவ மதங்களின் கூட்டு வடிவமாக விளங்குகிறது. நுழைவாயிலிலேயே அமைந்துள்ள லூர்து அன்னைக்கு மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு உள்ளே சென்றால் தொழுகை நடத்தும் மையம் இருக்கும். அங்கிருந்து நகர்ந்தால் கிருஷ்ண பரமாத்மா காட்சி அளிப்பார். இந்த கட்டிடத்தின் மேற்புறத்தில் சிலுவையும், "ஓம்' என்ற மந்திரமும், நட்சத்திரத்துடன் கூடிய பிறையும், நெருப்பு ஜுவாலையும் தெரியும். மாவட்டத்திலேயே மிகப்பெரிய அளவிலான அனுமன் சிலை இங்குதான் உள்ளது.

பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வழிபாட்டு வளாகத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கையோடு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சம்பவங்களும் ஒப்பிடப்பட்டு சிலை வடிவில் தத்ரூப காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் தினந்தோறும் காலை 5 மணியிலிருந்து தீப வழிபாடுகளும், தொழுகைகளும் நடப்பதோடு தேவையான நேரங்களில் கிறிஸ்தவ பாதிரியார்களைக் கொண்டு திருப்பலியும் நடத்தப்படுகிறது. இது நீலகிரி மாவட்டத்திலேயே வேறெங்குமே காணக்கிடைக்காத நிகழ்வுகளாகும்.

இவ்வாறு மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் அபுபாபாஜி அறக்கட்டளை வளாகத்தைக் குறித்தும், அதன் சேவைகளைக் குறித்தும் நீலகிரி மாவட்டத்தில் தெரியாதவர்களே இல்லை எனலாம், அத்துடன் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தெரிந்து வைத்துள்ளனர்.



அன்னதானம்

இந்த அறக்கட்டளையின் சார்பில் தினந்தோறும் பிற்பகலில் ஏழைகளுக்கு அபு ரொட்டி என்ற பெயரில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஒருவேளை உணவை நம்பியே அன்றாட வாழ்க்கையை நடத்துபவர்களும் உதகையில் உள்ளனர். அத்துடன் வருடத்திற்கு சுமார் 2500 பேருக்கு கல்விக்கட்டணம், நாடு முழுதும் சுமார் 500 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் என பல்வேறு உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் இலவச சிகிச்சை அளிப்பதோடு, மொபைல் மருத்துவ சேவையின் மூலம் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினந்தோறும் இலவச மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதோடு, மருந்து பொருட்களும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

இதையெல்லாம்விட கடந்த ஆண்டில் 61 ஜோடிகளுக்கு தங்கத்தாலி, திருமண உடையுடன் இலவச திருமணம் செய்து வைத்ததோடு, அவர்கள் தனியாக குடும்பம் நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் சீர் வரிசையாக வழங்கப்பட்டன. இவர்களில் 14 ஜோடிகள் கிறிஸ்தவர்களாவர். இவர்களுக்கு தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு தேவாலயத்தில் ஒரே நேரத்தில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது அதுவே முதன்முறையாகும்.

அத்துடன் இவர்கள் மேற்கொண்ட அடுத்த முயற்சிதான் நாட்டிலேயே இதுவரையிலும் யாரும் செய்யாத ஒரு தொண்டாகும். இந்த ஜோடிகளுக்கு ஓராண்டிற்குள் பிறந்த குழந்தைகள் பாலரத்னா என பெயரிடப்பட்டு அவர்களது 18 வயது வரையிலுமான கல்வி, மருத்துவ செலவு, உணவு, உடை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இக்குழந்தைகளின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை அவர்களது 18 வயது முடிவடைந்ததும் வட்டியோடு பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 48 குழந்தைகள் இடம் பெற்றுள்ளனர். இதுவரையிலும் யாருமே செய்யாத இந்த சேவைதான் 2009ம் ஆண்டின் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இந்த சேவைகள் குறித்துó அபுபாபாஜி அறக்கட்டளை நிர்வாகத்தின் தற்போதைய குருவான ராமுபாபா நம்மிடம் பேசினார்.

""மத நல்லிணக்கத்திற்கும், சமூக சேவைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாக கூறிக்கொள்வதைவிட, அதை விளம்பரப்படுத்தாமல் செயலில் காட்டுவதே உண்மையான சேவை. இதற்காகவே இந்த அறக்கட்டளையின் சார்பில் அனைத்து மதங்களின் விழாக்களையும் கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் நேரத்தில் கிறிஸ்து பிறப்பை விவரிக்கும் குடில் அமைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிறந்த கிறிஸ்துமஸ் குடிலுக்காக கடந்த ஆண்டில் இஸ்லாமியர் ஒருவரும், நடப்பாண்டில் இந்து ஒருவரும் முதல் பரிசு பெற்றுள்ளதுதான். அபு விஸ்வா அரங்கிற்கு தினந்தோறும் வரும் பொதுமக்களே மத நல்லிணக்கத்தின் தூதுவர்களாக திகழ்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சேவைகளோடு, பசுமையான உதகையை உருவாக்கவும், வசிப்பதற்கே தகுதியின்றி அடிப்படை வசதிகளே இல்லாத காந்தல் பகுதியிலுள்ள கஸ்தூரிபாய் காலனியிலுள்ள 400 குடிóசைகளை நிரந்தர வீடுகளாக மாற்றித்தரும் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் முதற்கட்டமாக 100 வீடுகள் புதுப்பிக்க இருக்கிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com