ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சூடு தணிய அருகம்புல்

எனக்கு வயது 88. ஒரு வருடமாக உடம்பு ஒரே சூடாக உள்ளது. அடிவயிற்றிலும் ரொம்ப சூடாகவே இருக்கிறது. அடிக்கடி இரவில் சிறுநீர் வெந்நீர் போல் சூடாக வருகிறது. அதனால் சதாகாலமும் உடல் மற்றும் சிறுநீர் பாதை எரிச்ச
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சூடு தணிய அருகம்புல்
Updated on
2 min read

எனக்கு வயது 88. ஒரு வருடமாக உடம்பு ஒரே சூடாக உள்ளது. அடிவயிற்றிலும்

ரொம்ப சூடாகவே இருக்கிறது. அடிக்கடி இரவில் சிறுநீர் வெந்நீர் போல் சூடாக வருகிறது. அதனால் சதாகாலமும் உடல் மற்றும் சிறுநீர் பாதை எரிச்சலாகவே உள்ளது. இவை மாற வழி என்ன?

எஸ்.கோவிந்தசாமி, சிதம்பரம்.

""பித்தம் வினா தாஹ'' என்ற சொல்லிற்கு ஏற்ப பித்தமில்லாமல் சூடில்லை என்ற ஆயுர்வேத தத்துவம் உங்கள் விஷயத்தில் சரியாக இருக்கிறது. உடல் சூட்டைக் கிளப்பும், உப்பு, புளி, காரம் போன்ற சுவைகளை நீங்கள் உடனடியாக உணவில் குறைக்க வேண்டும். சூட்டைத் தணிக்கும் துவர்ப்பும், கசப்பும், இனிப்பும் மிக்க உணவு உங்களுக்கு நல்லது. உத்தராயணம் எனப்படும் சூரியனின் வடக்கு நோக்கிய பாதையினால், இனிவரும் மாதங்களில் பூமியில் சூடு அதிகரிக்கப் போகிறது. அப்போது உங்கள் உடம்பிலும் இந்தச் சூடானது அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சிறுநீர் மற்றும் உடல் எரிச்சல் அதிகமாகத்தான் போகிறது. அந்தச் சூட்டைக் குறைக்க நீங்கள் உணவில் நெல்லிக்காய், நெய்,வெண்ணெய், இனிக்கும் தயிர், வெள்ளரிப் பிஞ்சு, புடலங்காய், பீர்க்கங்காய், பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, அவரைக் காய், பூசணிக்காய், பரங்கிக்காய், வல்லாரை, சிறுகீரை, முருங்கைக் கீரை, மெது பாகல், சர்க்கரை வள்ளி, வாழைத் தண்டு, வெங்காயம், சுண்டைக்காய், வாழைப்பூ, கோவைக்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், தூதுவளை, மணத்தக்காளி வத்தல் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.

உடல் முழுவதிலும் தோலின் அடிப்புறத்தில் "பிராஜகம்' என்னும் பித்தம் இடம் பெற்றுள்ளது. தோலில் நிறங்களை உண்டாக்குகிறது. வெளிப்படுத்துகிறது. உடலின் இயற்கையான சூட்டை உண்டாக்குகிறது. காப்பாற்றுகிறது. வியர்வை மூலம் சூட்டை வெளியே தள்ளுகிறது. தோலின் மேல் பூசப்படும் எண்ணெய் அல்லது தோலின் மேல் ஊற்றப்படும் நீர் முதலியவற்றைப் பக்குவப்படுத்தி தோலின் ஓட்டைகள் வழியாக உள்ளே உறிஞ்சி, உடல் உட்புறப் பகுதிகளில் சேர்கிறது. இந்தப் பித்தம், உங்களுடைய விஷயத்தில் கெட்டுப் போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதன் காரணமாக தோல் பகுதி எப்போதும் சூடாகவே இருக்கிறது.

தோல் பகுதியை வலுப்படுத்தவும், அங்குள்ள பித்தத்தை அடக்கவும், நீங்கள் தேய்த்துக் குளிப்பதற்கு லாக்ஷாதி குழம்பு எனும் குழந்தைகளுக்குத் தேய்க்கும் மூலிகைத் தைலத்தை உடலெங்கும் பூசி, தலைக்கு ஹிமசாகர தைலத்தை, பஞ்சில் முக்கி, ஊற வைத்து, சுமார் முக்கால் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறி, வேப்பிலை மஞ்சள் அருகம்புல் இவற்றை அரைத்து, குளிர்ந்த நீரில் கலக்கி, உடலெங்கும் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும். காலை உணவிற்கு முன், குளிர்ந்த நீரில் இதுபோலத் தொடர்ந்து குளித்து வர, உடல் தாபம் குறைந்து விடும்.

ரஞ்ஜக பித்தம்- கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளின் உள்ளே இருந்து கொண்டு, ரக்த கணிகைகளை உற்பத்தி செய்து அன்னரஸத்தை ரத்தமாக மாற்றுகிறது. இப்பகுதிகளில் வளரும் இந்த ரஞ்ஜக பித்தத்தின் காரியத்தில் ஏற்படும் கெடுதியினால், சிறுநீர் எரிச்சல், மஞ்சள் நிறம் போன்றவை உண்டாகின்றன. சிறுநீர்ப் பையில் இந்த வகையான சிறுநீர் தேக்கத்தினால் உங்களுக்கு அடிவயிறு சூடாக இருக்கிறது.

இந்தப் பித்தத்தின் கெடுதியை அகற்ற, முன் குறிப்பிட்ட வகையில் உணவுகளைச் சாப்பிட்டு, ஆயுர்வேத கஷாய மருந்தாகிய வாஸôகுடூச்யாதி மற்றும் திராக்ஷôதியை வகைக்கு 7.5 மி.லி. வீதம் கலந்து, 60 மி.லி. கொதித்து ஆறிய தண்ணீரும் கலந்து காலை, மாலை ஆறு மணிக்கு, வெறும் வயிற்றில் சுமார் 21நாட்கள் முதல் 28 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

சிறுநீரகத்தின் அழற்சியைப் போக்கிச் சிறுநீர் எரிச்சலில்லாமல் சீராக வெளிப்பட உதவும் அறுகம்புல்லை வேருடன் எடுத்து மண்ணகற்றி, அலம்பிச் சிறுதுண்டுகளாக்கி லேசாக இடித்து நல்ல தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டிய பின் குடி நீராகக் குடிக்கலாம். காய்ச்சிய பால் சேர்த்தும் சாப்பிடலாம். மூலத்திலிருந்தும் ரத்தக் கசிவு, நீர்த்தாரை எரிவு, நீர்ச் சுருக்கு நீங்கும். தோல் வறட்சி குறைந்து உடல் சூடு தணியும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை- 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com