
காந்தியடிகளின் கட்டளையை ஏற்று "யங் இந்தியா' ஆசிரியராகப் பணியாற்றியபோது "யங் இந்தியா'வில் ராஜ துரோக கட்டுரைகளை எழுதியதற்காக 1931 இல் முதல் சிறைவாசத்தையும், 1932ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் முறையாகவும் சிறைவாசமேற்று, இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடி ஜே.சி. குமரப்பா விடுதலையாகியிருந்த வேளை. 1939இல் "கிராம உத்யோக்' பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக மூன்றாவது சிறை வாசம்.
÷இலண்டனில் "சீமை துரை' போல வாழ்ந்த குமரப்பாவிற்கு சிறையில் நாற்காலி மேஜை எதுவும் கிடையாது. காலை மடக்கிக் கொண்டு கீழே உட்காரத் தெரியாது. சிறையில்தான் பழகியிருந்தார். விடுதலைக்குப் பின் அதன் காரணமாக "கால் மூட்டு'களில் வலி; 1933ம் வருஷக் கடைசியில் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பம்பாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோதுதான் காந்தியிடமிருந்து மீண்டும் கட்டளை பீகார் செல்வதற்கு;
1934 ஜனவரி 15; பீகார் மாகாணத்தில் பெரும் பூகம்பம். முப்பதினாயிரம் சதுர மைல் பரப்புள்ள பூமி இப் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது. சிறையிலிருந்த இராஜேந்திர பிரசாத் விடுதலையானார். சம்பரான், முசபர்பூர், தர்பங்கா, ஸôரை, மாங்கீர், பாகல்பூர், பூர்னியா மாவட்டங்களில் 20,000 மக்கள் உயிரிழந்தும், பத்து இலட்சம் வீடுகள் அழிந்து போயிருந்த நிலையைக் கண்ட ராஜேந்திர பிரசாத் "பீகார் சென்ட்ரல் ரீலிப் கமிட்டி'யை அமைத்தார். நாடெங்கிலுமிருந்து நன்கொடைகள் குவிந்தன. இவற்றை முறைப்படி கணக்கு வைத்துப் பராமரித்திட அண்ணல் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத்துக்கு உதவி புரிய ஒருவரை அனுப்பி வைத்தார். அவர்தான் ஜே.சி. குமரப்பா.
சிறையிலிருந்த காலத்தில் குமரப்பாவின் கதர்த் துணிகள் சிறை அதிகாரியின் பெட்டியில் கிடந்தன. எலியும், பூச்சிகளும் அவற்றில் விளையாடிக் களித்ததால், சிறையிலிருந்து ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது கிழிசல் துணிகளையே அணிந்து இருந்தார். மும்பை ஆஸ்பத்திரியிலிருந்து பாட்னாவுக்குச் செல்லும்போது புதிய ஆடைகளை வாங்கவோ, தையற்காரரைத் தேடவோ அவகாசமில்லை. கிழிசல் துணிகளை உடுத்திய வண்ணமே "பாட்னா' வந்தார் குமரப்பா.
பீகார் பூகம்ப நிவாரண நிதிக்கு 19 இலட்சம் ரூபாய் அப்போது சேர்ந்திருந்தது. பாட்னாவிலுள்ள சிறிய வங்கியில் போடப்பட்டிருந்தது. பெருந்தொகையை அச் சிறிய வங்கியில் போடுவது உசிதமில்லை என்று "இம்பீரியல் பாங்கில்' கணக்கு ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டது. 19 இலட்ச ரூபாய்க்கான செக்கைப் பெற்றுக் கொண்டு குமரப்பா இம்பீரியல் பாங்கிற்குச் சென்றார்.
÷ஒரு சீட்டில் குமரப்பா ங.அ., ஆ.நஸ்ரீ., ஊ.ந.ந.அ., என்று எழுதி அனுப்பினார்; உள்ளே சென்றார். பாங்க் ஏஜெண்டு கிழிசல் துணியைக் கடைக் கண்ணால் கண்டுவிட்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். "தன்னை உட்காரவும் சொல்லவில்லையே' என்று நின்று கொண்டிருந்த குமரப்பா பேச்சை ஆரம்பித்தார். மேஜையின் மேல் கிடந்த சீட்டை எடுத்துக் காட்டி, தன்னைப் பற்றிச் சொன்னபோது, திகைப்படைந்த ஆங்கிலேயர், வரவேற்று ஆசனமளித்து அமரச் சொன்னார். அவ்வளவு எளிமை குமரப்பா. பூகம்ப நிவாரணப் பணிகளை ஆற்றிவரும்போது, தொண்டர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு உணவுக்கு 19 காசுகள் வழங்கப்பட்டன. அதே 19 காசுகளுக்குள் தனது உணவுச் செலவை முடித்துப் பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த
ஒப்பற்ற தீரர் குமரப்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.