

ஒரு படம் ஹிட் ஆனவுடனேயே தங்கள் பெயருக்கு முன்னால் புரட்சி, புயல், லிட்டில், சூப்பர் லிட்டில் என்று அடைமொழி சேர்த்துக்கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தனுஷ் வித்தியாசப்படுகிறார். தொடர்ந்து 5 படங்கள் ஹிட் கொடுத்து ஏறுமுகத்தில் இருக்கும் தனுஷ், அவருடைய ரசிகர்கள் "இளைய சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்தபோதும் அதை மறுத்து, "எந்தக் காலத்திலும் என் பெயருக்கு முன்னால் அடைமொழியைப் பயன்படுத்த மாட்டேன்' எனக் கூறியிருக்கிறார்.
அதுபோல, இதுவரை தன் படங்களில் "அல்டிமேட் ஸ்டார்' பட்டத்தைப் பயன்படுத்தி வந்த அஜீத், "நான் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டேன்; அதனால் என் பெயருக்கு முன்னால் இனி எந்தப் பட்டத்தையும் பயன்படுத்தப்போவதில்லை. "அசல்' படத்திலிருந்து இந்த வழக்கம் தொடரும்'' எனக் கூறியிருக்கிறார்.
சென்னையின் இன்னொரு முகம்!
முரளியின் மகன் அதர்வா "பாணா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். "மாஸ்கோவின் காவிரி', "பூக்கடை ரவி' படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். திரைப்படக் கல்லூரியில் பயின்ற பத்ரி வெங்கடேஷ் படத்தை இயக்குகிறார். "பாணா காத்தாடி' பற்றி கேட்டபோது...
""தலைப்பைப் பார்த்து இது வெறும் பட்டம் விடுவதைப் பற்றிய கதை என நினைத்து விட வேண்டாம். பட்டம் பறப்பது, அது பறக்கக் காரணமாக இருக்கும் நூல் இவற்றோடு வாழ்க்கையை தொடர்புபடுத்தி கதையை உருவாக்கியிருக்கிறோம். சென்னை நகர மக்களின் வாழ்க்கை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தது. ஒருபுறம் செல்ஃபோன், இண்டர்நெட், விடியோகேம் என டிஜிட்டலில் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் பம்பரம், கோலி, காத்தாடி ஆடுவது என பொழுதைக் கழிக்கும் மற்றுமொரு கூட்டமும் இங்கு உண்டு. சென்னையின் சேரிப் பகுதி ஒன்றில் காத்தாடி விடுவதையே சுவாசமாகக் கொண்ட ஓர் இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்புதான் இது. சென்னையில் உள்ள சேரியின் முகத்தை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறோம்'' என்றார் பத்ரி வெங்கடேஷ்.
இருபது நல்ல நடிகர்கள்!
கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் "பட்டா பட்டி'. புதியவர் யுவராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். திடீர் திரையுலகப் பிரவேசம் குறித்து சடகோபனிடம் கேட்டபோது...
""ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்கள் இன்னொரு துறையில் பிரகாசிக்க முடியாது என்றுதான் இங்கு பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட்டின் உலக ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் எந்த அளவுக்கு மிமிக்ரி செய்து மற்றவர்களைப் போல் நடித்துக் காட்டுவார் என்பது அவரை அருகில் இருந்து பார்த்துப் பழகிய என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுபோல கிரிக்கெட் வீரனான என்னிடம் உள்ள திறமையை, இயக்குநர் இந்தப் படத்தில் மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்திருக்கிறேன். தேவையில்லாத "பில்டு}அப்'கள் எதுவும் படத்தில் கிடையாது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்தில் நடைபெறுகிறது. நகர்ப்புறத்தில் வாழ்ந்து பழகிய எனக்கு கிராமத்துப் படப்பிடிப்பு அனுபவம் புதுமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்தப் படத்தில் எல்லாமே புதிதாக இருக்கும். இந்த ஆண்டின் டாப் காமெடி படமும் இதுவாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் மூலம் 20 நல்ல நடிகர்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைப்பார்கள்'' என்றார்.
மாத்தி யோசிக்காதே!
"கல்லூரியின் கதை' படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கி வரும் படம் "மாத்தி யோசி'. புதுமுகங்களுடன் ஷம்மு நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. "மாத்தி யோசி' பெயர்க்காரணம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது...
""கிராமத்தில் ஊதாரித்தனமாகத் திரியும் இளைஞர்களை ஒரு சம்பவம் மாற்றிப்போடுகிறது. அதையடுத்து அவர்களை இந்தச் சமூகம் ஓட ஓட துரத்துகிறது. இந்நிலையில் நாயகியைச் சந்திக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் தொடங்குகின்றன. இதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறோம். இந்த இளைஞர்கள் எந்த விஷயத்திலும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் மாற்றி மாற்றி யோசித்து அடிக்கடி மாட்டிக்கொள்கிறார்கள். அதைக் குறிப்பிடும் வகையில் தலைப்பை வைத்திருக்கிறோம். கிராமம் மற்றும் நகரத்து வாழ்க்கையை யதார்த்தமாகப் பதிவு செய்ததில் இந்தப் படம் முதலிடம் வகிக்கும்'' என்றார் நந்தா பெரியசாமி.
கட்டடத் தொழிலாளியின் கதை
"தனம்' படத்தை இயக்கிய ஜி.சிவாவின் உதவியாளர் இயக்கும் புதிய படம் "திட்டக்குடி'. புதுமுகங்கள் ரவி, அஷ்வதா நடிக்கும் இந்தப் படத்தில் முதல்வர் கருணாநிதியின் பேரன் மு.க.மு.அறிவுநிதி "திட்டக்குடி திட்டக்குடி...' என்ற "ஹை பிட்ச்' பாடலைப் பாடியுள்ளார். படத்தைப் பற்றி கேட்டபோது...
""இதுவரை எத்தனையோ தொழிலாளர்களைப் பற்றி பல படங்கள் வந்திருக்கின்றன. இது கட்டடத் தொழில் செய்யும் கொத்தனார்கள், சித்தாள்களைப் பற்றிய யதார்த்தமான கதை. இதுவரை சினிமா வாடையே இல்லாத திட்டக்குடி, தொழுதூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். ஒரு சில நடிகர்களைத் தவிர, மற்ற அனைவரும் கட்டடத் தொழில் புரிபவர்களே. யாருக்கும் "மேக்}அப்' கிடையாது. மாட மாளிகைகளும் பங்களாக்களும் உருவாகக் காரணமாக உள்ள கட்டடத் தொழிலாளர்களின் வலி, வேதனை, கோபம், காதல், குடும்பச் சூழ்நிலை போன்றவற்றை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறோம்'' என்றார் இயக்குநர்.
எல்லாமே ஒண்ணுதான்!
"நாணயம்' படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. தொடர்ந்து வில்லனாக நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. "இனி ஹீரோவா? வில்லனா?' என்று கேட்டால்...
""இப்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறேன். வில்லன் வாய்ப்புகளும் வருகின்றன. நான் ஹீரோவா? வில்லனா? எனப் பார்ப்பதில்லை. எப்படி நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும்; ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதைப் பார்த்துதான் இனி நடிக்கப் போகிறேன். ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் ஒரே சம்பளம்தான்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.