சிறுகதை: எண்ணச்சுழல்

'வாலி, வா வெளியே..' மூடுற்ற கதவோரம் வழிதேடி, பயந்து அலையும் நாயைப்போல பாறைகளில் எற்றுண்டு அலைந்தது சுக்ரீவனின் குரல். பறவைகள் வான் எழுந்து வேறிடம் பறந்தன. சிறு விலங்குகள் அடர் வனத்துள் புகுந்து ஓடி மற
சிறுகதை: எண்ணச்சுழல்
Published on
Updated on
4 min read

'வாலி, வா வெளியே..'

மூடுற்ற கதவோரம் வழிதேடி, பயந்து அலையும் நாயைப்போல பாறைகளில் எற்றுண்டு அலைந்தது சுக்ரீவனின் குரல். பறவைகள் வான் எழுந்து வேறிடம் பறந்தன. சிறு விலங்குகள் அடர் வனத்துள் புகுந்து ஓடி மறைந்தன.

இலக்கைக் காணாத வளரி போலத் திரும்பிய எதிரொலி, ஈனமாக மீண்டும் "வாலி, வா வெளியே' என்றது.

பெரும்பாறைகளின் நடுவே ஒரு சிறு வாசல் போன்ற வழி. அதன் முன் நின்று சுக்ரீவன் காத்துக்கொண்டிருந்தான். எந்த நேரத்திலும் வாலி வெளிப்படலாம். மீண்டும் குரல் கொடுக்க வேண்டுமா என்ற யோசனையும் தயக்கமும் அவனை பதற்றத்தில் ஆழ்த்தின. முதல்முறை நடந்ததைப்போல சாதாரண போராக இப்போது இருக்கப்போவதில்லை. முன்பு விழுந்த ஒவ்வொரு அடியிலும் தம்பி என்கிற பாசத்தின் பின்னிழுப்பு இருந்தது. இப்போது அடி விழுந்தால், ஆளைக்கொல்வதாகத்தான் விழும். சுக்ரீவன் முகத்தில் பீதி பரவியது. இராமனும் இலக்குவனும் மறைந்து நின்ற புதரை ஒரு முறை திரும்பிப் பார்த்தான்.

"கோழை, மகா கோழை, முனகலுடன் இராமனைப் பார்த்தான் இலக்குவன்

பார்வையிழந்த விழிகளைப் போல வெறித்துக்கிடந்தன இராமனின் கண்மலர்கள். இலக்குவன் மனம் தளர்ந்தான். "இனி எந்த நாளில் என் இராமனைக் காண்பேன்!'. அதற்கான அறிகுறிகளைக்கூட அவனால் காண முடியவில்லை. இராமனின் சோகம் சகிக்க முடியாததாக இருந்தது.

இராமனின் கண் முன்பாக நின்ற எல்லாக் காட்சிகளின் மீதும் மனத்திரை கவிந்தது. மீண்டும் மீண்டும் எண்ணச்சுழல் சீதையின் காட்சிகளுக்குள் போய் விழுந்தது. ஒரே சம்பவத்தை மாற்றி, மாற்றி, ஆனாலும் தீர்வு காணா அதே முடிவுக்கு மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியது. காட்டுக்கு அழைத்து வந்திருக்காமல் இருந்திருந்தால்... என் சீதை அயோத்தியில் பாதுகாப்பாக இருந்திருப்பாளே என்று ஒரு நேரம் யோசிக்கும் மனம், மானைத் தேடிப்போனதற்காக தன்னையே ஏசி நிற்கும். "வரம் தர மறுத்து, வேறு வரம் கேள்' எனச் சொல்லத் தெரியாத தந்தையால்தான் இந்தத் துயரம் யாவும் என்று வேறு தடத்திலிருந்து காட்சிகளை நகர்த்தும். எங்கே தொடங்கினாலும் மீண்டும் மீண்டும் சீதையை இழந்த வெறுமையில் கொண்டு தள்ளும். நதியின் புதுவெள்ளம்போல எண்ணச்சுழல் அவனை இழுத்துச் சென்றது. வெள்ளத்தில் மிதக்கும் காட்டுமரம்போல, கரையொதுங்கியும், புரண்டும் நதிப்படுகையில் அடிபட்டும் போய்க்கொண்டிருந்தது இராமனின் போக்கு.

"சீதா, நீ இப்போது எங்கே இருக்கிறாயோ? உன்னை ராவணன் என்ன செய்தான்? உன்னை அப்படியே தின்றானா! சீதா! நீ உயிருடன்தான் இருக்கின்றாயா, அல்லது தற்கொலை செய்துகொண்டாயா? வழியெங்கும் உன் நகைகளை உதிர்த்து சென்றாய். நீ உதிர்த்துவிட்ட உன் உடலையும் கண்டுவிட நேருமோ என்று பாதையெங்கும் அச்சத்துடன் பார்த்து வந்தேன். உன்னை மீட்கும் வரை எனக்காக காத்திருப்பாயா? அதுவரை அந்த ராவணன் உன்னை விட்டுவைக்க வேண்டுமே!

"சீதா, நான் வருவேன், உன்னை காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை உனக்கு இருக்குமா? எனக்கு அச்சமாக இருக்கிறது. உன் நம்பிக்கையை இழந்தவன் என்பதை அந்தரங்கமாக உணர்கிறேன். அதுவே என்னை ஒடுங்கிப்போகச் செய்கிறது. நடைபிணமாக்கிவிடுகிறது. சீதா! என் மீது நீ எப்படி நம்பிக்கை கொள்ள முடியும்? தன் ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்ளாமல், எல்லாருடைய விருப்பத்துக்கும் வளைந்துபோகும் கணவன் மீது எந்த மனைவிக்குத்தான் நம்பிக்கை ஏற்படும்? என்னை அருகில் நின்று பார்த்தவள் நீ. உன் மீது ஆசை கொண்டேன். ஒரு மனைவியின் விருப்பம் என்னவெல்லாம் என்பது தெரியாமல்தான் இருந்தேன், நேற்றுவரை! என் பக்கத்தில் இருந்தவரை உன் அருமை தெரியவில்லை. இராவணன் உன்னைக் கடத்திச் சென்ற நாள் முதலாக நீ மட்டுமே என் மனதில் எப்போதும் என்னோடு இருக்கிறாய். ஆனால் மனம் வலியால் துடிக்கிறது. சீதா, சீதா..

"நானாக மிதிலை வரவில்லை. விசுவாமித்திர முனிவன் அழைத்து வந்தார். எதிரிகள் யாருமில்லாமல் கிடத்தப்பட்டுக் கிடந்த வில் எடுத்து முறித்ததைத் தவிர நீ பார்த்த என் வீரம் என்ன? அந்த இராவணனை வென்று உன்னை மீட்பேன் என நீ எப்படி நம்புவாய்? தந்தை, தாய்க்கு கொடுத்த வரத்துக்காக நான் அரசு இழந்தேன். தம்பி பரதனுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதால் காடு செல்ல விதிக்கப்பட்டேன். எதிர்ப்பே சொல்லாமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட என்னை நீ எப்படி மதிப்பிடுவாயோ! இவை மன்னனின் குணங்கள் அல்லவே! நாணல்போல வளைகிறவன் எப்படி நாடாளுவான்? உன் விழிகளில் அன்று இந்தக் கேள்வி இருந்திருக்கும். நான்தான் பார்க்கும் திறனில்லாது இருந்தேன். இந்த முட்டாளிடம் நீ உன் எண்ணத்தைச் சொல்லியிருந்தால்...

"ஒருவேளை என் மனதை மாற்றிவிடலாம் என்றுதான் என்னுடன் காடு வந்தாயோ! மெல்லப் பேசி எனக்குப் புரிய வைத்துவிடலாம் என்று நம்பினாயா? சீதா! இந்த வனத்திலும் உன்னை பொம்மைபோலவே நடத்தினேன். விசுவாமித்திரன் வாங்கித் தந்த நடமாடும் பொம்மை போலத்தான் உன்னை நடத்தினேன். என்னை மன்னிப்பாயா? எங்கே, என்ன வேதனையில் இருக்கிறாயோ, சீதா! என் உறவுகளின் கெüரவமும், என் தம்பிகளின் மீதான பாசமும் என் கண்களை மறைத்துவிட்டன. என்னை நம்பி வந்த உனக்கு நான் செய்தது ஒன்றுமில்லை. இந்த நினைவு ஒன்றே போதும் என்னை கொன்று புதைக்க, சீதா! நான் புதிய இராமனாக உன்னை நேசிப்பேன். என்னை நம்பு, எனக்காக காத்திரு, எங்கிருந்தாலும்...

"அண்ணா வாலி வெளியே வந்து தாக்கத் தொடங்கிவிட்டான்''

இராமனின் தோள்களைத் தொட்டான் இலக்குவன்.

இராமனின் இடது கரம் வில் ஏந்தியது. கட்டை விரல் மடங்காது நீண்டிருக்க, மற்ற நான்கு விரல்களும் வில்லை அழுத்தமாகச் சுற்றி நின்றன. மடங்காத கட்டைவிரல் மீது தலை வைத்துக் கிடந்த அம்பின் கால்களை நாணில் பொருத்தினான். விசையற்று ஒரு முறை குறிபார்த்தான். மீண்டும் அவன் கரங்கள் வலுவற்றுத் தளர்ந்தன. அவன் கண் முன்னே வாலி நின்றான். சுக்ரீவனின் முதுகு தெரிந்தது.

"மறுபடியும் எதற்கடா வந்தாய்?''

வாலியின் குரலில் ஏளனம். மீண்டும் வருகிறான் என்றால் அவனுடன் யாரோ வருகிறார்கள் என்று பொருள். தாரை சொல்லி அனுப்பியிருந்ததால், சுற்றிலும் பார்த்தான். எதிரே வெலவெலத்து நிற்கும் சுக்ரீவனின் வியர்வை நாற்றத்தைத் தவிர, நரர் வாசம் இல்லை. அனுமன் தள்ளி நின்றான். பாறைகளில் வானரங்கள் நின்றன. காட்டு மலர்களின் வாசம் வந்து தழுவியது. வாலியின் இதழ்களின் புன்னகை. அந்தப் புன்னகை மாறாமல் எட்டி உதைத்தான் வாலி. பந்துபோல சுருண்டு வந்து, இராமன் நின்ற புதர் அருகே விழுந்து, இராமனின் விழிகளைப் புதரில் தேடினான் சுக்ரீவன்.

"எதற்கடா மீண்டும் உதைபட வருகிறாய்?'' வாலியின் குரலில் எள்ளல். "சாவதற்காக வந்தாயா? உனக்கு நான் தரும் பரிசு சாவு மட்டும்தான். என்னால் உனக்கு கிடைப்பது அது மட்டுமாகத்தான் இருக்கும்''

மீண்டும் ஒரு உதை.

வலியைப் பொறுத்துக்கொண்டு எழுந்து நிற்கும் சுக்ரீவனை பார்த்தான் இராமன். இதைக் காண விருப்பம் இல்லாத இலக்குவன் தரையை நோக்கினான். சுக்ரீவனின் வலி, இராமனின் முகத்தில் ஏளனப் புன்னகையை விரித்தது. "இவன் வீரம் இவ்வளவுதானா? இவனுக்குப் போய் என் வீரத்தையும் தோள் வலியையும் நிரூபிக்க வேண்டிய அவலம் நேரிட்டுவிட்டதே! போயும் போயும் இவனைத் திருப்திபடுத்த ஏழு மராமரங்களில் துளையிட்டுக் காட்டும் பரிதாபநிலை எனக்கு ஏற்பட்டுவிட்டதே, சீதா! உன் பிரிவால் நான் என் வீரம் களைத்தேன். மறைந்துநின்று தாக்குதல் நடத்தும் அளவுக்கு என் நிலைமை தாழ்ந்துகிடக்கிறது. மனைவியை மாற்றனிடம் பறிகொடுத்தவன், மானம் வீரம் அனைத்தையும் இழந்துவிட நேர்கிறது. நடைப் பிணமாகிவிட்டேன்'.

வாலி அடிக்க வந்தபோது, ஒதுங்கி நின்றான் சுக்ரீவன். "எனக்கு என் மனைவியை கொடுத்துவிடு. போதும். எனக்கென ஒரு இடத்தையும் ஒதுக்கிக்கொடு. நான் தனியாக வாழ்ந்துவிட்டுப் போகிறேன். இது மட்டுமே நான் கேட்பது. உனக்கு துரோகம் செய்ய நினைத்து, குகையை மூடவில்லை. என்னை நம்பு. என் மனைவியை என்னிடம் திருப்பிக்கொடு''

வாலி சிரித்தான். முடியாது என்பதாகத் தலை அசைந்துகொண்டே இருந்தது.

"சாவைக் கேள். தருகிறேன். அதைப் பெறுவதற்கு மட்டுமே தகுதியானவன் நீ''

வாலி நெருங்கி வர, சுக்ரீவன் பின்னகர்ந்தான். முகத்தில் மரண பயம்.

"முட்டாள்'' இலக்குவன் மீண்டும் முணுமுணுத்தான்.

"நானும்கூட முட்டாள்தான்'. இராமன் சொல்ல நினைத்தான். வாய்விட்டுப் பேச முடியவில்லை. தொண்டையை அடைத்தது.

"தந்தையின் அரசு இல்லை என்றால், சீதையோடு மிதிலை சென்றிருந்தால் எனக்கு பட்டத்தை அளித்திருக்க மாட்டாரா ஜனகன்? சீதை எத்தனை மகிழ்ச்சி அடைந்திருப்பாள். கைகேயிக்கு வேண்டியதெல்லாம் பரதன் அரசாள வேண்டும், அதற்கு நான் எந்த வகையிலும் தடையாக மாறிவிடக்கூடாது என்பதுதானே? உங்கள் உறவே வேண்டாம் என்று மதிலைக்குப் போயிருந்தால், இன்று என் சீதையை இழந்திருப்பேனா? ஒருவேளை சீதையின் விருப்பமும் இதுவாகத்தான் இருந்திருக்குமோ? வெறும் முட்டாளாக இருந்திருக்கிறேன். ஏன், நான்கு தம்பிகளுக்கு நான்கு பாகங்களாக பிரிக்கும்படி நான் நியாயம் பேசியிருக்கலாமே! பரந்து விரிந்த தேசத்தை நான்கு புதல்வருக்கும் திசைக்கொரு மன்னராக ஆட்சி செய்திருந்தால், எல்லாரும் மகிழ்ந்திருப்பார்களே! நான் ஏன் இதையெல்லாம் சொல்லவில்லை. அல்லது தந்தையும் ஏன் இதை யோசிக்கவில்லை! பதவி வேண்டாம் என்றதும் சரி வேண்டாம் என்றேன். காட்டுக்குப் போ என்றதும் சரி என்று புறப்பட்டுவிட்டேன். அப்பாவியாகவே இருந்தேன். நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?

"தம்பி பரதனுக்காக காடு வந்தேன். இங்கே, சூர்ப்பனகையின் மூக்கறுத்த தம்பி இலக்குவனால் இராவணன் என் இடத்திற்கு வர, மனைவியை இழந்தேன். உடன் பிறந்த தம்பிகளால் எனக்கு துயரம் வந்து சேர்ந்தது. நானாக செய்த பிழை என்ன? நாட்டையும் மனைவியையும் பிரிவதற்கு நான் செய்த குற்றம் என்ன, சீதா?, இவன் ஏன் அவள் மூக்கை அறுக்க வேண்டும்? என் உடன் பிறந்தவர்களால், என் வீட்டாரால் இத்தனை துன்பம் வந்து சேர்ந்தபோது, உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் அறிந்திராத, நீயும் அறிந்திராத ஜடாயு உயிர்த் தியாகம் செய்தாரே! அதை என்னவென்று சொல்வது? அரசு துறந்து காடு போகச் சொன்ன தந்தையைவிட ஜடாயுவைத்தான் நான் தந்தையாக நினைப்பேன், சீதா,! நீயும் இப்படித்தானே நினைப்பாய்..?

சுக்ரீவனின் ஓலம் காட்டை நிறைத்தது.

வாலி ஒரு பெரும் மரக்கிளையுடன் சுக்ரீவனின் மார் மீது நின்றுகொண்டிருந்தான்.

"உன்னை அப்போதே கொன்றிருக்க வேண்டுமடா'' கிளையைச் சுழற்றி அடித்தான். அவன் காலிடையில் சிக்கிக் கிடந்த சுக்ரீவன் எழு முடியாமல் வலியால் துடித்தான்.

"நாடாளவும் பொண்டாளவும் தகுதி வேண்டும். உனக்கு என்ன தகுதி இருக்கிறது?''

மீண்டும் அடி விழுந்தது.

"உனக்கு எதற்கடா மனைவி? உன்னை அவள் ஆணாகக்கூட மதிக்கவில்லை. மதித்திருந்தால் செத்துப்போயிருப்பாள், என்னோடு இங்கே வாழ்ந்துகொண்டிருக்கமாட்டாள். முட்டாளே''

திமிறிக்கொண்டு எழுந்து ஓட முயன்று, மண்ணில் குப்புற விழுந்த சுக்ரீவன் மீது ஏறி அமர்ந்தான் வாலி.

"உனக்கு என்ன தகுதி இருக்கிறது?''

வலியின் ஓலம்.

"உனக்கேன் மனைவி? உனக்கேன் காடாளும் ஆசை!''

வலித்தது.

இரு கரங்களையும் குவித்து, சுக்ரீவனின் மண்டையில் அடிக்க ஓங்கினான்.

"மனைவியும் அரசும் முட்டாள்களுக்கு இல்லை''

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வாலியின் மார்பைத் துளைத்து நின்றது இராமனின் அம்பு.

வாலிதன்னை அம் மனிதனும் மறைந்து நின்று எய்தான்

நின்றது எவ்வுலகமும்

நின்றது அங்கங்கே ஓசை

திசைகள் திகைத்த

அயன்பதி சலிப்புற ஒலித்தது அப்போர் வில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com