திரைக்கதிர்: எந்திரனுக்குப் பிறகு...!

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த "எந்திரன்' படம் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அமீர்கான், மாதவன் நடித்த "3 இடியட்ஸ்' ஹிந்திப் படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் ரீமேக் செய்யும் திட்ட
திரைக்கதிர்: எந்திரனுக்குப் பிறகு...!
Updated on
3 min read

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த "எந்திரன்' படம் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அமீர்கான், மாதவன் நடித்த "3 இடியட்ஸ்' ஹிந்திப் படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ஷங்கர். தெலுங்கின் நம்பர் ஒன் இளம் நாயகன் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். பொதுவாக, தனது கதைகளையே பிரமாண்டமாக எடுத்து வரும் ஷங்கர், முதல்முறையாக ஒரு ரீமேக் படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரத்வாஜ்...51

"கள்வனின் காதலி', "மச்சக்காரன்' படங்களை இயக்கிய தமிழ்வாணனின் புதிய படம் "நந்தி'. அகில், சனுஷா நடிக்கும் இந்தப் படம், முழுக்க முழுக்க ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக இதுவரை இல்லாத அளவுக்கு சிரத்தை எடுத்து இசையமைத்திருக்கிறார் பரத்வாஜ். இது அவருடைய ஐம்பத்து ஒன்றாவது படம். வழக்கமாக சென்னையில் பாடல் கம்போஸிங் செய்யும் பரத்வாஜ், "நந்தி'க்காக நாற்பது நாள்கள் செலவிட்டு படப்பிடிப்பு நடைபெற்ற ராமநாதபுரத்துக்கே வந்து பாடல்களைக் கம்போஸிங் செய்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் முத்து விஜயன் எழுதியுள்ளார். திருமண வீடுகளில் தவறாது ஒலிக்கும் "வாராயோ தோழி வாராயோ...' பாடல் போல இந்தப் படத்துக்காக "வேத கோஷம் முழங்கவே...' என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இனி இந்தப் பாடல் ஒலிக்காத மங்கல நிகழ்ச்சிகளே இருக்க முடியாது என்று அறுதியிட்டுக் கூறுகிறார் பரத்வாஜ்.

அடுத்த அவதாரம்!

சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்த "அருந்ததி' படத்தின் பாணியில், வித்தியாசமான கதையம்சத்துடன் பிரமாண்டமாகத் தயாராகும் புதிய தெலுங்குப் படம் "பஞ்சாக்ஷரி'. இந்தப் படத்தில் அனுஷ்கா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தயாரிக்கிறார். இதன் தமிழ்ப் பதிப்புக்கு "பஞ்சமுகி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை வந்தனா மீடியா சார்பாக கே.வேணுகோபால் தயாரிக்கிறார். இதுவரை எந்த இந்தியப் படத்திலும் இடம்பெற்றிராத வகையில் பிரமிப்பூட்டும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கடைசி 45 நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட்டின் "அவதார்' படத்தையே மிஞ்சும். அதே போல் அனுஷ்காவின் சினிமா கேரியரில் இதுதான் அவருடைய "மாஸ்டர் பீஸ்' ஆக இருக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் வி.சமுத்ரா.

பாரதத்திலிருந்து...

கரண் நடித்த "காத்தவராயன்' படத்தை இயக்கிய சலங்கை துரை அடுத்து "காண்டீபன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். புதுமுகம் நிர்மல், விதிஷா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு அம்பாசமுத்திரத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...

""மகாபாரதத்தின் ஒரு பகுதியை கருவாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறோம். மகாபாரதத்தில் அர்ஜுனன் வைத்துள்ள வில்லின் பெயர் காண்டீபம். அதன் அடிப்படையில் இந்தத் தலைப்பை வைத்துள்ளேன். இளநீர் விற்றுக்கொண்டிருக்கும் ஒருவனுடைய வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களால் அவனுடைய வாழ்க்கை திசை மாறுகிறது. இளநீர் சீவிய நாயகனின் அரிவாள் சிலருடைய தலையைச் சீவுகிறது. இந்தச் சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் கூறியிருக்கிறோம். படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. வாலி, நா.முத்துக்குமார், விவேகா ஆகியோரின் வரிகளுக்கு சபேஷ்-முரளியின் இசை வலுவூட்டியிருக்கிறது'' என்றார்.

காதல் பயணம்!

"வருடு' தெலுங்குப் படத்தின் மூலம் தெலுங்குப் படவுலகில் அறிமுகமான ஆர்யாவுக்கு அங்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் அவருடைய படங்கள் அங்கு மொழிமாற்றத்துடன் வெளியாகின்றன. இந்நிலையில் ஆர்யா-ஸ்ரேயா ஆகியோரின் தெலுங்கு மார்க்கெட்டைக் கருத்தில் கொண்டு இவர்கள் நடித்து வரும் "சிக்கு புக்கு' படத்தை தெலுங்கிலும் அதே பெயரில் வெளியிடுகிறது படத்தைத் தயாரிக்கும் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்.

""லண்டனில் தொடங்கி காரைக்குடியில் முடியும் ஒரு அழகான காதல் பயணமே "சிக்கு புக்கு'. ஒரு மழை நாளில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் பயணிக்கும் ரயில் பயண அனுபவத்தை இந்தப் படம் தரும். காரைக்குடியிலும் லண்டனிலும் இதுவரை யாரும் படமாக்காத பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். "கலோனியல் கஸின்ஸ்' ஹரி-லெஸ்லி ஆகியோரின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பாலிவுட்டின் முன்னணி நாயகியான அம்ரிதா ராவின் தங்கை ப்ரீத்திகா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்'' என்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

ரசிகர் தலைமை!

விஜய்யின் கடைசி 5 படங்களால் மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் இழப்பு; குறைந்த பட்சம் "சுறா' படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டுவதற்கேனும் ஒரு தொகையைத் தர வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் புலம்பிக்கொண்டிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது "வேலாயுதம்' படத்தைத் தொடங்கிவிட்டார் விஜய். ஆஸ்கார் மூவிஸ் ரவிச்சந்திரன் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்தை "ஜெயம்' ராஜா இயக்குகிறார். ஜெனீலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சுமார் மூவாயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

"என் பட விழாவுக்கு என்னுடைய ரசிகர்களை விட தலைமையேற்க தகுதியானவர்கள் யாரும் இல்லை. அவர்களால்தான் நான் இந்த (?) நிலைக்கு வந்திருக்கிறேன். ஜெயம் ராஜா என்னுடை அவருடைய தம்பி ஜெயம் ரவியைப் போல நினைத்துக்கொள்ள வேண்டும். ஜெயம் ரவியின் படங்களை ஹிட் ஆக்கியது போல "வேலாயுதம்' படத்தையும் ஹிட் ஆக்க வேண்டும்' என்ற ரீதியில் பேசினார் விஜய். "பொதுவாக, வெற்றி பெற்ற தெலுங்குப் படங்களை ரீமேக் செய்யும் ஜெயம் ராஜா, இந்தப் படத்துக்காக நல்ல கதையைத் தேர்வு செய்திருக்கிறார். இருந்தாலும் விஜய்க்காக "நான் "வேலாயுதம்'... அடிச்சா அணு ஆயுதம்' போன்ற சிறுபிள்ளைத்தனமான பஞ்ச்சுகளும் படத்தில் இருக்கின்றனவாம். அவற்றைத் தவிர்த்தாலே போதும்'' என்கிறது விஜய் மீது அக்கறையுள்ள வட்டாரம்.

சேரனின் "முரண்'

மிஷ்கின் இயக்கத்தில் "யுத்தம் செய்' படத்தில் நடித்து வரும் இயக்குநர் சேரன், இதையடுத்து தனது ட்ரீம் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் "முரண்' என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்கிறார். இதில் சேரனும் பிரசன்னாவும் வித்தியாசமான வேடங்களில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பிரபல மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகனும் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றியவருமான ரஜ்ஜன் மாதவ் படத்தை இயக்குகிறார். அவருடைய சகோதரர் சஜ்ஜன் மாதவ் இசையமைக்கிறார். பத்மேஷ்

ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2011-ம் ஆண்டு பொங்கல் திருநாளில் படம் வெளியாகிறது.

விளம்பர வாய்ப்புகள்!

தமிழில் வாய்ப்புகள் இல்லாத பாவனா, கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக "ஜாக்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர் பொன் குமார் இயக்கும் "விஷ்ணுவர்த்தனா' என்ற கன்னடப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கன்னட நடிகர் சுதீப் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் வாய்ப்புகளே இல்லையா? என்று கேட்டால்...

""அப்படியெல்லாம் இல்லை. இப்போது கூட நகுல், நவ்தீப் ஆகியோருடன் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. கன்னடத்தில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சினிமாவை விட விளம்பரப் படங்களில் நடிக்கத்தான் அதிக வாய்ப்புகள் வருகின்றன. சினிமாவோ, விளம்பரமோ என்னுடைய இமேஜைக் குறைக்கும் எந்தப் படத்திலும் நடிப்பதில்லை என்பதுதான் என் பாலிசி. அதனால் வாய்ப்புகள் குறைந்தாலும் பரவாயில்லை'' என்கிறார் பாவனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com