ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான போலந்தில் இந்தியாவின் சுதந்திரத் தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்குக் காரணமானவர் மதுரையைச் சேர்ந்த ரஸ்வி ஹூசைனி. இவரது முயற்சியால் இந்த வருட ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று பிரம்மாண்டமான அணிவகுப்பு ஒன்று நடத்தவும் அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாயிற்று என்று திருச்சி வந்திருந்த ஹூசைனியிடம் பேசினோம்:
போலந்து போனது எப்படி?
பிறந்தது மதுரையில். சென்னையில் பிஎஸ்ஸி முடித்த பிறகு, 1997-ல் மேல்படிப்புக்காக போலந்து சென்றேன். அங்கு எம்.எட். முடித்தேன். மார்ட்டா என்ற "போலிஷ்' பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு ரஷீத் என்ற ஒரு மகன் இருக்கிறான். போலந்தில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ் தவர்கள். நான் ஒருவன்தான் முஸ்லிம். அதிலும், குறிப்பாக அங்கு வாழும் ஏறத்தாழ 2000 இந்தியர்களில் நான் ஒருவன்தான் தமிழன். ஆனால், அந்த மக்கள் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. அவர்கள் மறந்தும் ஆங்கிலம் பேசுவதில்லை. பெட்டிக் கடைகளிலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை "போலிஷ்' மொழிதான். தொடக்கத்தில் 4 ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டேன். இப்போது நன்றாகப் பேசவும், எழுதவும் பழகிக் கொண்டேன்.
கோயில் கட்டுகிறீர்களாமே?
நான் முஸ்லிமாக இருந்தாலும், என் மனைவி கிறிஸ் தவராக இருந்தாலும் அங்குள்ள பெரும்பான்மையான இந்தியர்கள் இந்துக்கள். இந்துக் கடவுளர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. போலந்தின் தலைநகரான வார்ஷா நகரின் எல்லையில் ராஷன் என்ற இடத்தில் இந்து பவன் என்ற கோயில் ஒன்றை நண்பர்களின் உதவியுடன் கட்டியுள்ளோம். இப்போதைக்கு விநாயகரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 கடவுளர்களின் சிலைகளை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதற்கு இதுவொன்றே எடுத்துக்காட்டு.
இந்திய சுதந்திர நாள் விழாவைப் பற்றிச் சொல்லுங்களேன்?
வந்தேமாதரம் என்ற தலைப்பில் இந்திய சுதந்திர நாளை ஆக. 15-ம் தேதி கடந்த இரு ஆண்டுகளாகக் கொண்டாடினோம். இந்தியாவின் கலாசாரக் கலைகளான பரதம், ஒடிசி, மணிப்புரி, கதக்களி போன்ற நடனங்கள் எங்களின் விழாவில் பிரதானமானவை. அவற்றுடன் இந்திய பாலிவுட் சினிமா பாடல்கள். இவற்றுக்கு முறையான பயிற்சி மேற்கொண்டு, ஆர்வத்துடன் ஆடுபவர்கள் பெரும்பாலும் "போலிஷ்' பெண்கள்தான். இப்போது கோலிவுட்டையும் நான் அங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். விக்ரம் நடித்த அந்நியன் படத்தின் "கண்ணும் கண்ணும் நோக்கியா...' பாடல் அங்கு பிரபலம். நடிகர் விக்ரமை போலந்து அழைத்துச் செல்வதுதான் அடுத்த பணி.
இங்குள்ள ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் பெரும் தொழிலதிபர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்கள் இந்த விழாவுக்கு நிதியுதவி செய்கின்றனர். இங்குள்ள வசதி படைத்த இனக் குழுவினராக இந்தியர்கள் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு வெறும் விழாவுடன் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அணிவகுப்புக்கு போலந்து அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறேன். அரசியல் சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்றனர். உலகின் மூத்த கலாசாரத்தை பற்றிச் சொல்வதற்கு என்ன சிக்கல் என்று புரியவைத்து அனுமதி பெற்றேன்.
பேண்ட் வாத்திய அணிவகுப்பு முன்பு செல்லும். இதுபோன்ற அணிவகுப்பை போலிஷ் மக்கள் பார்த்ததில்லை. அதனைத் தொடர்ந்து கலாசார நடனங்கள் அணிவகுப்பில் இடம்பெறும். பல வண்ண அணிவகுப்பாக அது அமையும்.
பிழைக்கப் போன இடத்தில் எப்படி வந்தது இந்த எண்ணம்?
வெளிநாட்டுக்கு சென்ற பிறகுதான் தாய்நாட்டின் அருமை புரியும். பல இடங்களில் சவால் என்று வரும்போது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். அப்படி உருவாகிதான் இந்த விழா இப்போது 3-ம் ஆண்டாக பிரம்மாண்டமடைந்திருக்கிறது. லண்டன் சென்றால் அந்த நகரில் வாழும் சரிபாதியினர் இந்தியர்கள். இந்தியாவை அங்குள்ள மக்களுக்குத் தெரியும். அதேபோல, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவை, இந்தியாவின் வலிமையை, கலாசார பலத்தைக் காட்ட வேண்டும். என் அப்பா எஸ்.ஏ. ஹூசைனி மதுரையில் தமிழாசிரியர், அரசுப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராகி ஓய்வு பெற்றவர். அவர் ஊட்டி வளர்த்த தமிழ், தேசப்பற்றுதான் காரணமாக இருக்கக் கூடும்.
தமிழ் எப்படியிருக்கிறது போலந்தில்...?
வார்ஷா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஏறத்தாழ 50 போலிஷ் மாணவர்கள் தமிழ் பயின்று வருகின்றனர். போலந்து பெண் ஒருவர் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பயின்று திரும்பியிருக்கிறார். பிறப்பால் தமிழனான என்னைவிடவும் அழகாக தமிழ் பேசக்கூடிய "போலிஷ்' ஆய்வாளர்கள் சிலர் இருக்கிறார்கள்.
ஒற்றையாளாக எப்படி இத்தனை தொலைவு முன்னேற முடிந்தது?
இந்தியர்களுக்கான உணவகம் ஒன்றைத் தொடங்கினேன். அவர்களுக்கான தொழில் கண்காட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இப்போது அவர்களுக்கான தனியார் பாதுகாப்பு சேவை மையம் ஒன்றையும் தொடங்கவுள்ளேன். இந்தோ- போலிஷ் நட்புறவுக் கழகம் தொடங்கினேன். செயல்பட்டேன்.
இதனால், அங்குள்ள இந்தியர்கள் என்னை நம்புகின்றனர். உதவுகின்றனர். இதுபோன்ற விழாக்களுக்கு அங்குள்ள ஊடகங்களின் உதவி முக்கியமானது. ஒரு முறை செய்தி வெளியிட்ட பிறகு, அவர்களை அழைத்து ஒரு விழாவில் பாராட்டினோம், நன்றி தெரிவித்தோம், சான்றிதழ் அளித்து கெüரவித்தோம். அவ்வளவுதான், இதுபோன்ற நன்றி பாராட்டை அவர்கள் பெற்றிருக்கவே இல்லை. அதனால், தொடர்ந்து உடனிருந்து உதவுகிறார்கள்.
"வந்தே மாதரம்' என்று பெயரிட்டிருக்கிறீர்களே? "போலிஷ்' மக்களுக்கு எப்படி விளக்கமளித்தீர்கள்?
ஒன்றை மட்டும்தான் சொன்னேன். "தாய் மண்ணுக்கு வணக்கம் சொல்வது' என்று பொருள் என்றேன். இந்தியர்களைவிடவும் அங்குள்ள "போலிஷ்' மக்கள் வந்தே மாதரத்தை ஓயாமல் உச்சரிக்கின்றனர்' என்கிறார் ரஸ்வி ஹூசைனி, உற்சாகம் குன்றாமல்.
படம்: எஸ். அருண்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.