எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்து வரும் 'வெளுத்து கட்டு' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுமுகங்கள் கதிர், அருந்ததி நடிக்கும் இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் உதவியாளர் சேனாபதி மகன் இயக்குகிறார். படத்தைப் பற்றி தயாரிப்பாளரிடம் பேசியபோது...
'என்னுடைய மற்ற படங்களை விட இந்தப் படத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாக்கி வருகிறேன். அதற்குக் காரணம் இந்தப் படம் என்னுடைய வாழ்க்கையைப் பற்றியது. அதை நானே இயக்குவது சரியாக இருக்காது என்பதால் என்னுடைய உதவியாளரை வைத்து இயக்குகிறேன். ராமேஸ்வரத்தின் தங்கச்சிமடத்திலிருந்து சென்னைக்கு வந்த நான் பதினைந்து நாள்கள் வரை ப்ளாட்பாரத்தில்தான் படுத்திருந்தேன். அதன்பிறகு போராடியே இந்த நிலையை அடைந்துள்ளேன். இன்றைய இளைஞர்கள் வெற்றியையும் பணத்தையும் உடனடியாக எதிர்பார்க்கிறார்கள். தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் மனநிலையே இல்லை. போராடிப் பெறும் வெற்றியை அனுபவித்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இந்தக் கருத்துகளை மையமாகக் கொண்டதே 'வெளுத்து கட்டு'. இந்தப் படத்துக்காக நா.முத்துக்குமார் எழுதிய 'சங்கிலி பொங்கிலி சாட்டையடி, வெடிக்கப் போற வாணவெடி...' என்ற பாடலை என்னுடைய மனைவி ஷோபாவும் பாடகர் கார்த்திக்கும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரும் இந்தப் பாடல் வரிகளில் முதல்முறையாக ராப் ஸ்டைலில் சில திருக்குறள்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். பரணி இசையில் அனைத்துப் பாடல்களும் 'ஹிட்' ஆகியிருக்கின்றன. இந்தப் படத்தை பணத்துக்காக நான் எடுக்கவில்லை. படத்தில் இடம்பெற்ற கருத்துகளும் காட்சி அமைப்புகளும் சமூகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்' என்றார் எஸ்.ஏ.சி.
சிங்கக் கூட்டம்!
'தம்பி அர்ஜுனா' படத்தை இயக்கியுள்ள விஜய் ஆர்.ஆனந்த் இயக்கும் புதிய படம் 'சிங்கக் கூட்டம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் 'தம்பி அர்ஜுனா' படத்தில் நடித்த பெரோஸ்கான் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது...
'இது ஒட்டுமொத்த தமிழக போலீஸôரின் கதை. இன்று நாம் நிம்மதியாகத் தூங்குகிறோம் என்றால் அதற்குக் காரணம் போலீஸôர்தான். அப்படிப்பட்ட போலீஸôரின் தியாக உணர்ச்சியை இதுவரை எந்தப் படத்திலும் காட்டாதவாறு வித்தியாசமான கோணத்தில் காட்டுகிறோம். மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட மார்ஷியல் கலைகளை சண்டைக் காட்சிகளில் பயன்படுத்துகிறோம்' என்றார்.
பிறப்பது ஜெயிப்பதற்கே!
'ஹிந்தியில் 'தலாஷ்', தெலுங்கில் 'தலமுறாளு', தமிழில் 'அம்மா', 'அம்பிகை', 'யமுனா' தொடர்களை இயக்கிய எஸ்.வி.சோலைராஜ் 'நீயும் நானும்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஒவ்வொரு மனிதனும் பூமியில் பிறப்பது ஜெயிப்பதற்கே என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் முதல்முறையாக பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒலிப்பதிவில் உதவியாளராகப் பணியாற்றும் கே.சத்யா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை முதல்முறையாக 3-டி யில் வெளிவருகிறது. (வழக்கமான இசை 300 டிகிரியில் சப்தத்தை ஒலிபரப்பும். 3-டி இசையில் 360 டிகிரியில் சப்தங்கள் ஒலிபரப்பாகும்). அதேபோல இந்தப் படத்தின் டிரெய்லர் முதல்முறையாக 5.1 ஹெச்.டி. தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. படம் முழுவதும் லேட்டஸ்ட் 35 எம்எம் கேமிராவில் படமாக்கப்பட்டாலும் பாடல் காட்சிகள் மட்டும் சூப்பர் 16 எம்.எம்.மில் படமாக்கப்பட்டுள்ளன. நாயகி சேத்னா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்பதால் பாடல் காட்சிகளில் ஜிம்னாஸ்டிக்கை கலந்து நடனத்தில் அசத்தியிருக்கிறார்.
கதாசிரியர் மதுமிதா!
'யோகி' படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் வராததால் சினிமாவுக்கு கதை எழுதிக்கொண்டிருக்கிறார் மதுமிதா என கோலிவுட்டில் தகவல்கள் கசிகின்றன. இதுகுறித்து மதுமிதாவிடம் கேட்டால்...
'யோகி' படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகளை எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. வந்த படங்களும் ஹீரோவுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் வழக்கமான கதைகளாகவே இருந்தன. சில சிறிய பட்ஜெட் படங்களில் நல்ல வேடங்கள் அமைந்தன. ஆனால்
இன்றைய சூழ்நிலையில் சிறு படங்களில் சிரமப்பட்டு நடித்தாலும் அவை வெளிவராமல் நம் உழைப்பெல்லாம் வீணாகிவிடுகிறது. அதனால் அவற்றையும் மறுத்துவிட்டேன். ஹீரோக்களுடன் வெறுமனே ஆடிப்பாடும் கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. அதனால் வீட்டில் பொழுதை வீணாகக் கழிக்காமல் எழுத ஆரம்பித்துவிட்டேன். சினிமா கதை எழுதவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த அனுபவங்களை மையமாக வைத்து கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை விரைவில் புத்தகமாக வெளியிடும் எண்ணமும் உள்ளது' என்கிறார்.
ஈகோ தவிர்; வாய்ப்பு தவறேல்!
சமீபத்திய படங்களின் தொடர் தோல்வியால் தன்னுடைய சினிமா கேரியரில் புதிய அணுகுமுறையைக் கையாளத் திட்டமிட்டுள்ளார் பரத். அதில் முதலாவது... இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்டில் ஈகோ இல்லாமல் நடிப்பது; அடுத்து, தன்னை முன்னிலைப்படுத்தி எழுதப்படும் 'பஞ்ச்' டயலாக்குகளை இனி தன்னுடைய படங்களில் தவிர்க்கவும் முடிவு செய்துள்ளார். பேரரசு இயக்கத்தில் பரத் நடித்து வந்த 'திருத்தணி' படம் அடுத்த கட்டத்துக்கு செல்ல இயலாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்தப் படம் முடிவடைவதற்குள் இயக்குநர் அமீர் இயக்கி நடிக்கும் ஒரு புதிய படத்தில் பரத்தும் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்க்கும் பரத், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி இன்னொரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளாராம். அது, தன்னுடைய பெயருக்கு முன் பயன்படுத்தும் 'சின்ன தளபதி' என்ற அடைமொழியை துறப்பதுதான். அந்தப் பட்டத்தைப் பயன்படுத்திய பிறகுதான் அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவின என்கிற சென்டிமெண்ட்டும் ஒரு காரணம்.
அடுத்த வாரிசு!
முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசு நடிப்புத்துறையில் கால்பதித்துள்ளது. மு.க.முத்துவின் மகனும் டாக்டருமான அறிவுநிதி 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் மூலம் நடிகர் ஆகியுள்ளார். கரண் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அறிவுநிதி, போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு 'பெருமாள்', 'திட்டக்குடி' படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார் அறிவுநிதி. முதல்வரின் இன்னொரு பேரனும் மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி, 'பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் 'வம்சம்' படத்தில் நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து ஸ்டாலினின் மகனும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின். 'சிவா மனசுல சக்தி' படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
'கேமிரா'ராஜ்!
'மிளகா' படத்தின் நாயகன் நட்ராஜ் பாலிவுட்டில் பிரபல ஒளிப்பதிவாளர். தற்போது 'உத்தரவு', 'குலசேகரனும் கூலிப்படையும்' படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தீபிகா படுகோனே நடிக்கும் 'லபங்கே பரிந்தே', ஜான் ஆப்ரஹாம், ஜெனீலியா நடிக்கும் 'ஹூக் யா க்ரூக்' ஹிந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதையடுத்து விதுவினோத் சோப்ரா தயாரித்து இயக்கும் 'புரோக்கன் ஹார்சஸ்' ஹாலிவுட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜார்ஜ் க்ளூனி, வாரன் பேட்டி போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.